என் மலர்
செய்திகள்

சுகாதார சீர்கேட்டால் சிவகங்கை மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும் பாலான கிராமங்களில் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை உள்ளது.
பொதுமக்கள் வேறுவழியின்றி சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் சிவகங்கை நகர், மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஏராளமானோருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டு இது மர்ம காய்ச்சல் தான் என்றும், மாத்திரையையும், சரியான உணவு முறையையும் எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று கூறி அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் தனியார் ஆஸ்பத்திரியில் காண்பித்த போது டெங்கு அறிகுறி என்று கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காரைக்குடியில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இங்குள்ள சங்கராபுரம் ஊராட்சியில் சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி, சாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த் ராஜ், சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் சங்கராபுரத்தில் நேரடி ஆய்வு செய்து டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டர்வகளுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிப்பு ஏதும் இல்லை. சங்கராபுரம் ஊராட்சி சார்பில் நில வேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.






