என் மலர்tooltip icon

    நீலகிரி

    • யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் 10 யானைகள் மலை சரிவிலிருந்து சாலையை கடக்க முயற்சித்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை கண்காணித்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.

    1 மணி நேரத்திற்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    இது தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-

    மலைப்பாதையில் காட்டு யானைகள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றிற்கு தொல்லை கொடுக்க கூடாது, புகைப்படம் எடுக்க கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அதனையும் மீறி சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஏ. என். ஆர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்றிருந்த கோவையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனை பார்த்த வனத்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    • கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.

    அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.

    கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களிலேயே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    • மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

    சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என விரும்புவார்கள்.

    காடுகளுக்கு நடுவே மலைரெயில் செல்வதாலும், இயற்கை காட்சிகளை கண்டு கழிக்கலாம் என்பதாலும் மலைரெயில் பயணத்தை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுவது, மண் சரிவுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இதனால் மலைரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் 21 நாட்களுக்கு பிறகு மலைரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

    மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ரெயில் முன்பு, உள்ளேயும் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் செல்லும் வழியில் காடுகளின் இயற்கை காட்சிகள், வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
    • குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெரடா மட்டம் வெற்றி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). கூலித்தொழிலாளி.

    அதே பகுதியில் 10 வயதான பள்ளி மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். ஒரே இடத்தில் வசிப்பவர்கள் என்பதால் ரவிச்சந்திரனும், சிறுமியின் பெற்றோரும் நட்பாக பழகி வந்தனர். அவ்வப்போது மாணவிக்கு ரவிச்சந்திரன் இனிப்புகளும் வாங்கி கொடுத்தார்.

    சமீபகாலமாக ரவிச்சந்திரன், இனிப்பு வாங்கி கொடுத்து தனது வீட்டுக்கே சிறுமியை அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியிடம் அத்துமீறி அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    பல நாட்களாக இந்த பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் விசாரித்துள்ளார். அப்போது ரவிச்சந்திரன் தனக்கு செய்த கொடுமையை கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதைக் கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்த னர்.

    உடனடியாக அவர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர். தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவிச்சந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

    அந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேளாங்கண்ணி உதயரேகா, 18 வயது வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

    இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    • 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், உப்பட்டி, அத்திகுன்னா, பந்தலூர் இரும்பு பாலம், இன்கோ நகர், காலனி அட்டி, நெல்லியாளம் டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கரடி ஒன்று சுற்றி திரிந்து வந்தது.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் கரடி, வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வந்தது. குறிப்பாக வீட்டில் உள்ள எண்ணை உள்ளிட்டவற்றை உடைத்து குடித்து வந்தது.

    தொடர்ந்து இதுபோன்று கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார், உதவி வனபாதுகாவலர் கருப்பையா, தேவாலா வனசரகர் சஞ்சிவி, பிதர்காடு வனசரகர் ரவி மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து, கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ள அத்திகுன்னா, அத்திமாநகர், புவலம்புழா உள்பட 5 இடங்களில் கரடியை பிடிக்க கூண்டும் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில், கரடி சிக்கியது. கரடி சிக்கிய தகவலை வன ஊழியர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கால்நடை டாக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் பிடிபட்ட கரடியின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை முதுமலை வனப்பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் கரடியை விடுவித்தனர்.

    கடந்த 2 மாதங்களாக அத்திகுன்னா, நெல்லியாளம் டேன்டீ, பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
    • பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கே.என்.ஆர் பகுதியில் மரம் சரிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலைமையிலான குழு அந்த பகுதிக்கு சென்று சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பர்லியார் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.

    இது மட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவதுடன் மரங்களும் முறிந்து விழுகிறது.

    மேலும் அவ்வப்போது பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென மலைச்சரிவிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கார் வேகமாக சென்று விட்டதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கடப்பாரையைக் கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பாறையை நடுரோட்டில் இருந்து அகற்றினர்.

    இதனிடையே குன்னூர்-கோத்தகிரி சாலையில் எடப்பள்ளி அருகே ராட்சத சாம்பிராணி மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    • அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
    • மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

    இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன.

    குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டமும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு இரவு முதல் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 30க்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே மண்சரிவு ஏற்பட்டது.

    ஆங்காங்கே சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் மற்றும் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார். பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகனின் காரும் மாட்டி கொண்டது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக அவரது காரும் சாலையிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மண்சரிவினை ஒருபுறமாக அகற்றி, மத்திய மந்திரியின் கார் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

    அதன்பின்னர் அவரது கார் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    • தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
    • போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்த லார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டு மல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.10 மட்டுமே விலை போகிறது

    இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர். நாளடைவில் இந்த முட்டைகோஸ்கள் அழுகி மண்ணோடு மண்ணாகி விடும்.

    • 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது.
    • கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனிடையே கிராம பகுதிகளில் மட்டுமல்லாமல் நகர பகுதிகளிலும், பகல் நேரங்களிலும் காட்டெருமைகள் சர்வ சாதராணமாக உலா வருகின்றன.

    சாலைகளின் நடுவிலும், ஒரத்திலும் நடந்து செல்வதால், வாகன ஓட்டிகளும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக பயணித்து வருகின்றனர்.

    குன்னூர் அருகே உள்ள சேலாஸ் சோல்ராக் செல்லும் சாலையில் நீர்மம்பட்டி என்ற இ்டத்தில் மலைச்சரிவில் 2 காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருந்தது.

    இதில் 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது. இதில் காட்டெருமை காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதனையடுத்து காட்டெருமையின் உடலை அங்கேயே புதைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், காட்டெருமைகளை விரட்ட வனக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே நின்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
    • தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

    ஊட்டி:

    ஊட்டியில் நடந்த இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான்.

    நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் தி.மு.க.வில் தான் தொடங்கப்பட்டது.

    2 மாதத்திற்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு.

    பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால் அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால் நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர்.

    எங்கு போனாலும் தி.மு.க.வை பற்றி பேசுவதே அமித்ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித்ஷா வல்லவர். அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகின்றனர்.

    ஒட்டுமொத்த தமிழ்நாடும் கலைஞரின் குடும்பம் தான்.

    தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

    தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய ஆட்சி தான் தி.மு.க. மாணவ சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திடங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாவலராக தி.மு.க அரசு உள்ளது.

    மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார்.

    ஊட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு பாராளுமன்ற தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, கண்ணூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் தனது தொகுதியான வயநாடு பகுதிக்கு சென்றார்.

    வயநாடு தொகுதிக்குட்பட்ட மலப்புரம் மாவட்டம் நிலம்பூர், எடக்கரா பகுதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து காரில் தமிழக கேரள எல்லையான நாடுகாணி, சேரம்பாடி வழியாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு சென்றார்.

    முன்னதாக மாநில எல்லையான நாடுகாணி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோஷி பேபி, கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு சால்வை அணிவித்தும், பூங்கொதது அளித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி தொண்டர்களுடனும் கைகுலுக்கினார். அப்போது தொண்டர்கள் சிலர் ராகுலுடன் போட்டி, போட்டு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர், கூடலூர் நிலபிரச்சினைக்கு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என ராகுல்காந்தியிடம் முறையிட்டனர். அதனை கேட்டு கொண்ட ராகுல்காந்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதேபோல் பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது குழந்தைகள் ராகுல் ஜி, ராகுல் ஜி என சத்தமாக அழைத்தனர். இதை கேட்ட ராகுல்காந்தி காரை நிறுத்துமாறு கூறி விட்டு, காரை விட்டு கீழே இறங்கினார்.

    அவரை குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ராகுல்காந்தி குழந்தைகளுடன் கைகுலுக்கி புகைப்படமும் எடுத்து கொண்டார்.

    பின்னர் ராகுல்காந்தி, காரில் ஏறி கையை அசைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து அவர் இரவில் சுல்தான்பத்தேரியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அவர் தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார். வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    வயநாட்டில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாளை கொச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    ×