என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை கொண்டு வந்திருப்பது மக்களின் உரிமைகளை பாதிக்கும் என கனிமொழி கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நம் நாட்டில் மாட்டு இறைச்சிக்கு தடை என்பது ஏற்றக்கொள்ள முடியாத ஓன்று இந்திய மக்கள் பல்வேறு உணவு பழக்கங்கள், பல்வேறு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் பல பேர் மாடிறைச்சியும்,மற்ற வெவ்வேறு உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள்.

    அப்படியிருக்கும் சூழ்நிலையில் குறிப்பிட்ட உணவு சாப்பிடக்கூடாது என்று நாடு முழுவதும் தடை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நிச்சயமாக மக்களின் உரிமை, மாநிலத்தின் உரிமைகளில் தலையிடக்கூடியதாகும்.

    ஒவ்வொரு மாநிலத்திற்கு உணவு பழக்கவழக்கங்கள் உண்டு.அதில் தலையிட்டு மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்று மத்திய அரசு முடிவெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழக அரசு இதை எதிர்த்து முறையிட வேண்டும் மத்திய அரசியிடம் இதை ஏற்றக்கொள்ளமாட்டோம் என்று வலியுறுத்தவேண்டும்.இதுவரை மாநில அரசு மத்திய அரசை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை... இனியாவது சொல்லும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்படுவதாக நடிகை நக்மா கூறினார்.
    ஆலந்தூர்:

    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த்தான் முடிவு எடுக்கவேண்டும். இதில் நான் என்ன கருத்து சொல்லமுடியும்? நான் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். ஏதாவது கட்சியில் இணைவதா? அல்லது தனிக்கட்சி தொடங்குவதா? என்பது பற்றி அவர்தான் தீர்மானிக்கவேண்டும்.

    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் எப்படி இருக்கின்றன என்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் 100 நாளில் நல்லாட்சி தந்ததாக கூறும் போது, விவசாயிகள் ஏன் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்?

    தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சென்று பிரதமரை சந்தித்து பேசுகின்றனர். ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களை பார்க்க பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை. ரஜினிகாந்த் பற்றி பேசுவது தான் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குளம் தூர்வாரும் பணி உள்பட நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த்தும் பாராட்டி உள்ளார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்படுகின்றன.

    மத்திய பாரதிய ஜனதா அரசு 3 ஆண்டுகள் நிறைவை கொண்டாடுகிறது. எதற்காக கொண்டாடுகின்றனர்? நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு போய்விட்டது. நாட்டில் என்ன திட்டங்களை நிறைவேறி இருக்கிறார்கள்? நிறைய திட்டங்களை நிறைவேற்றியதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் எதுவுமே செய்யவில்லை என்று மக்களுக்கு தெரியும்.

    காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசிடம் என்ன கொள்கை இருக்கிறது? பசுவதை என கூறி சிலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் என்பதால் அடிக்கடி வந்து பெண்களின் பிரச்சினைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு நடிகை நக்மா கூறினார்.
    சோழிங்கநல்லூரில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்ததால் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி இணைப்பு சாலை அருகே பள்ளிக்கூட தெருவில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது.

    சுமார் 20 அடி ஆழத்தில் இந்த பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்காக அருகே பெரிய என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.

    இன்று காலை சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது என்ஜினின் அதிர்வால் திடீரென பள்ளத்தில் மண் சரிந்தது.

    இதில் உள்ளே நின்று கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மீது மணல் விழுந்து அமுக்கியது. அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். இதற்குள் அருகே இருந்த இரும்பு சாரங்களும் அவர்கள் மீது விழுந்தது.

    தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் மற்றும் சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    தொழிலாளர்கள் புதைந்து இருந்த இடத்தின் மேல் பகுதியில் இரும்பு சாரம் கிடந்ததால் உடனடியாக அவர்களை மீட்க முடிய வில்லை. இதற்குள் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடியபடி மற்றொருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    பலியான தொழிலாளி வந்தவாசி கீழ்புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்று தெரிய வந்துள்ளது.
    மணல் கடத்தியது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த பெருநகர் ஆற்றுபடுகையில் மினி லாரியில் மணல் கடத்திய திருவண்ணாமலை மாவட்டம், அன்னபுத்தூர் கிராமத்தை சேர்ந்த அசோக்கை பெருநகர் போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் சின்ன காஞ்சீபுரம் ரங்கராஜவீதி, அம்மங்கார தெரு, மற்றும் அமுதபடி பின் தெரு ஆகிய பகுதிகளில் காஞ்சி போலீசார் சோதனை நடத்தினர் அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட செவிலிமேடு, தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார், ராமதாஸ், வினோத், அன்பு, தசரதன், முனுசாமி, சேகர், அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    வறட்சி மற்றும் மழை இன்மை காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்த மாதம் 31-ந் தேதி மூடப்படும் என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    வேடந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் உலக புகழ் பெற்றது. ஆண்டுதோறும் இங்கு இலங்கை, பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வர்ணநாரை, செந்நாரை, அரிவாள்மூக்கன் உள்ளிட்ட அரியவகை பறவைகள் ஆண்டுதோறும் வந்து முட்டைஇட்டு இனப் பெருக்கத்தில் ஈடுபடும்.

    இந்த சரணாலத்திற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்து செல்லும். வழக்கமாக நவம்பர் மாதம் முதல் ஜூலை இறுதிவரை திறந்திருக்கும் சரணாலத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் வருவார்கள். பெரிய ஏரியில் உள்ள மரங்களில் பறவைகள் தங்கி இருக்கும் அழகை அவர்களை ரசித்து செல்வார்கள்.

    இந்த நிலையில் பருவ மழை பொய்த்து போனதாலும் கடும் வெப்பம் நிலவுவதாலும் இங்குள்ள ஏரி முழுமையாக வறண்டு விட்டது.

    இதனால் சரணாலயத்துக்கு பறவைகள் ஏதும் தற்போது வருவது இல்லை. வழக்கமாக ஜூலை மாத இறுதியில் மூடப்படும். தற்போது வறட்சி மற்றும் மழை இன்மை காரணமாக இரண்டு மாதத்திற்கு முன்பாகவே இந்த மாதம் 31-ந் தேதி சரணாலயம் மூடப்படும் என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
    சட்டசபையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. அவர் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. தண்டனையும் தரவில்லை. இது எல்லோரும் அறிந்தது.

    ஜெயலலிதா 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர். அவர் மக்களின் தலைவி. எனவே சட்டசபையில் அவரது படத்தை திறப்பதை வரவேற்கிறேன். அதுவும் பிரதமர் திறந்து வைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

    அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டு முடிந்துள்ளது. இந்த ஆட்சி சரியில்லை என்றும் இந்த ஆட்சியை தமிழக மக்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். எப்படியாவது முதல்- அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. அதனால் இப்படி பேசியிருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்கள். எந்த நேரத்திலும் முறையான தேர்தல் நடந்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வே வெற்றி பெறும்.


    உள்ளாட்சி தேர்தல் தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அவர் சில மாதங்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டியதுதானே?

    அ.தி.மு.க. என்றுமே ஒன்றுதான். நாங்கள் இரு அணி சகோதரர்களாக இருக்கிறோம். சகோதரத்துடனும், நட்புடனும் எங்களை வளர்த்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. இரு அணிகளும் கண்டிப்பாக இணையும்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை இரு அணிகளும் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை. எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்ற கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தலைவர். அவரது நூற்றாண்டு விழாவை தி.மு.க.வும் கூட கொண்டாடலாம்.

    பிரதமரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் மற்றும் தலைமை செயலாளர் இல்லாமல் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மக்கள் நலனுக்காகவும், விவசாயிகள், மீனவர்கள் பிரச்சனை பற்றியும் பேசி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
    தாம்பரம்:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் போடுவதற்கான 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி கழகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிதி துறை துணை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், 47 தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையின் போது கடந்த 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றாமல் நிலுவையில் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக தொழிற்சங்க உறுப்பினர்கள், நிர்வாகத்தினர் இணைந்து குழு அமைத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பு இது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தை குறித்து தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் கூறியதாவது:-

    கடந்த 14-ந்தேதி அமைச்சரவை குழு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேலை நிறுத்தம் செய்த நாட்களை 4 நாட்கள் விடுப்பாக கருத வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் இப்போது 3 நாட்கள் என புதிதாக மாற்றி இருக்கிறார்கள். வேலை நிறுத்த நாட்களை வேலைக்கு வராததாக கருதினால் கடும் விளைவுகள் ஏற்படும் என சொல்லி இருக்கிறோம்.

    துணை குழு அமைத்து வருகிற 1-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் வருவதற்கு முன்பு அதை இறுதி செய்யலாம் என அறிவித்து இருக்கிறார்கள். அக்கறை இல்லாமல் செயல்பட்டால் நாங்கள் மீண்டும் போராடக்கூடிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அரசும், போக்குவரத்து கழக நிர்வாகங்களும் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்பதையும் தெரிவித்து இருக்கிறோம்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை இருக்காது என வாய் மொழியாக உத்தரவாதம் தந்திருக்கிறார்கள். அந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி கூறியதாவது:-

    13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 7 கட்டங்களாக நடைபெற்று உள்ளது. நிலுவை தொகை பாக்கிக்கு ரூ.750 கோடியை தமிழக முதல்-அமைச்சர் வழங்கி இருந்தார்கள். அந்த தொகை போதாது என்று வலியுறுத்தியதால் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கி ரூ.1,250 கோடி வழங்க உறுதி அளிக்கப்பட்டதன் விளைவாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை முழுமையாக வழங்கப்படும். மீண்டும் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நிர்வாகம் - தொழிற்சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.

    இதில் நல்ல சுமுகமான உடன்பாடு ஏற்பட்ட பிறகு வருகிற 1-ந்தேதி அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும். அந்த பேச்சுவார்த்தையில் தான் 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு எந்த அளவிற்கு உள்ளது என்பது தெளிவாக தெரியும்.

    இவ்வாறு கூறினார்.
    காஞ்சீபுரத்தில் சிறுமி குழந்தை பெற்றதால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூரை சேர்ந்த 14 வயது சிறுமி ஆடு மேய்த்து வந்தாள்.

    கடந்த ஆண்டு ஆடு மேய்க்க சென்றபோது அதே பகுதி எட்டியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன், முருகதாஸ் ஆகியோர் சிறுமியை மிரட்டி கற்பழித்தனர்.

    இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டினர். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய 2 பேரும் தொடர்ந்து சிறுமியை கற்பழித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். பெற்றோர் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனும், முருகதாசும் மிரட்டி கற்பழித்து இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி அவர்கள் 2 பேரிடமும் நியாயம் கேட்டு வந்தார்.

    இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை பிரசவத்துக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    சிறுமி குழந்தை பெற்றதால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் காஞ்சீபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விசாரணை செய்தபோது சிறுமியை எட்டியப்பனும், முருகதாசும் கற்பழித்து கர்ப்பம் ஆக்கியது தெரிந்தது.

    இது குறித்து காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன், முருகதாசை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இருவரும் மாமனார்-மருமகன் ஆவர்.

    துபாய்-சிங்கப்பூரில் இருந்து சென்னை விமானத்தில் ரூ.15 லட்சம் தங்கம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது கடலூரை சேர்ந்த ராஜசேகரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்த போது சிறுசிறு துண்டுகளாக தங்க கம்பிகளை ஆசன வாயில் பகுதியில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும். ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சிவக்குமாரை சோதனை செய்ய போது உள்ளாடையில் மறைத்து 4 தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிந்தது.

    அதனை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனர். தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.10½ லட்சம் ஆகும்.

    சென்னையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ரவுடி ஸ்ரீதர் மனைவி குமாரி இன்று காலை ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது ஆள் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

    போலீசார் தேடுவதை அறிந்ததும் ரவுடி ஸ்ரீதர் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

    வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்தபடியே தனது ஆட்கள் மூலம் காஞ்சீபுரம் பகுதியில் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அவர் வாங்கி குவித்து இருந்தார்.

    ரவுடி ஸ்ரீதரை தேடப்படும் குற்றவாளியாக காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு அறிவித்து உள்ளது. அவர் மீது சென்னை அமலாக்க பிரிவும் வழக்கு பதிவு செய்து இருந்தது.

    இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், ஸ்ரீதர் ஆஜராகாததால் அவருக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்த ரவுடி ஸ்ரீதரின் மனைவி குமாரியிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரித்தனர். அப்போது குமாரி பெயரிலும் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி குவித்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து குமாரியின் ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் முடக்கினர். இந்த நிலையில் சென்னையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி குமாரிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை குமாரி ஆஜர் ஆனார்.

    அவரிடம் இவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியது எப்படி? கணவர் ஸ்ரீதர் எங்கு உள்ளார் என்பது உள்ளிட்ட பல்வேறு விசாரணை நடந்தது.
    அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், கட்சி இரண்டாக உடைந்து 3 முதல்வர்கள் மாறி உள்ளனர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அ.தி.மு.க. அரசு சாதனை என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. ஓராண்டுக்குள் கட்சி 2 ஆக உடைந்துள்ளது. 3 முதல்வர்கள் மாறி உள்ளனர். 3 அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. சின்னத்தை தொலைத்து உள்ளனர்.

    இடைத்தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கொடுத்து தேர்தல் ரத்தாகி உள்ளது. ஊழல் வழக்கில் 2 பொதுச்செயலாளர்களும் சிறையில் உள்ளனர்.

    தமிழக அமைச்சர்கள் பலர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதுதான் நடந்த நிகழ்வுகளாக இருக்கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் இந்த ஓராண்டு அ.தி.மு.க. அரசில் இல்லை. இனிமேலாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசு 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தங்கள் சாதனைகளை வெளியிட்டுள்ளனர். அதே போல் எடப்பாடி அரசு அமைச்சர்களும் தாங்கள் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும்.


    இந்த ஆட்சியில் டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி ஊழல் என இன்னும் ஊழல் முற்றிலுமாக ஒழியவில்லை.

    காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், கூட்டணிக்கு ஆள் வராத கட்சி பா.ஜனதா. அதனால்தான் ரஜினியை கூப்பிடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். முதலில் திருநாவுக்கரசர் அவரது கட்சியை பார்க்க வேண்டும்.

    பா.ஜனதாவுக்கு ரஜினி வந்தால் கூடுதல் பலம். பா.ஜனதாவுக்கு ரஜினி மட்டுமே பலமல்ல.

    ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் ரஜினியை பா.ஜனதாவில் சேரக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ஏன் இந்த பதட்டம்?

    தேசிய தலைவர் அமித் ஷா, ரஜினிக்கு பா.ஜனதா கதவு திறந்து இருக்கிறது என்று கூறியிருப்பதற்கு ரஜினி எந்தவொரு பதிலும் கூறவில்லை என்று சொல்கிறார்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் பலத்தை கூட்டுகிறோம்.

    பிரதமர் மோடி ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்குகிறார். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமரும், ஓ.பன்னீர்செல்வமும் என்ன பேசினார்கள் என்று கூறியுள்ளார்.

    யூகங்கள் அடிப்படையில் பேசுகிறார்கள். பிரதமருக்கு யாரை, எதற்கு என்ன காரணத்திற்காக பார்க்க வேண்டும் என்று தெரியும்.

    இந்துக்கள் திருடர்கள் என்று சொன்ன தி.மு.க. இன்று கோவில் குளத்தில் தூர் வாருகிறது, இறைவா என்று எனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்து உள்ளேன். இது எனது சொந்த கருத்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வனப்பகுதிகளை ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
    தாம்பரம்:

    ஒவ்வொரு ஆண்டும் அகில உலக உயிர் பன்மை தினவிழா மே 22-ந்தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விழா தாம்பரம் சேலையூர் அருகே உள்ள நன்மங்கலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

    விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு சிறுவன மகசூல் வருவாய் பயன் பங்கீட்டுத்தொகை ரூ.10 லட்சத்தை வழங்கினார். மேலும், 42 கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனுதவியும் வழங்கினார்.

    இதனையடுத்து வனப்பகுதிகளை ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆள் இல்லா விமானம் மூலம் அடர்ந்த வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணி நடைபெற உள்ளது. ரூ.20 லட்சம் செலவில் ஓசூர், கோவை, நீலகிரி, கொடைக்கானல், மதுரை பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் சிறுத்தை மற்றும் புலிகள் காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதை கண்காணித்து தடுக்க முடியும். மேலும், காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானைகளை மீண்டும் காட்டிற்குள் விரட்டவும் முடியும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் முகமதுநசிமுதீன், முதன்மை தலைமை வன பாதுகாவலர் (துறைத்தலைவர்) பசவராஜூ மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    ×