search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை விமான நிலையம்"

    • கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.
    • சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது.

    அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு, சந்தேகம் அதிகமானது.

    இதை அடுத்து அவருடைய உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலை கண்டுபிடித்தனர்.

    அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.35 கோடி என்று கணக்கிடப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

    இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதைப் பொருள் கடத்தல் பயணியின், பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் இந்தப் பயணி சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இதுகுறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    நேற்றைய தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.35 கோடி மதிப்புடைய, போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ.63 கோடி போதை பொருள் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போதைப் பொருள் கடத்திய இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டெல்லியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ போதைப்பொருளை டெல்லி சிறப்பு போலீசாரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கைப்பற்றினார்கள்.

    மேலும் அந்த குடோனில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்தச் சம்பவத்துக்கு பிறகு போதைப்பொருள் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    தமிழகத்திலும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கத்தார் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.28 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுஉள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்களை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் இன்று அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28), என்ற பயணி, தோகாவில் இருந்து சென்னை வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார்.

    மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த பையை பரிசோதித்தபோது அதில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவின் பயணத்தை ரத்துசெய்தனர். பின்னர் அவரை தனியாக அழைத்துச் சென்று அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அவர் கடத்தி வந்த போதை பொருளை பரிசோதித்தபோது, அது மிகவும் விலை உயர்ந்த கோகைன் போதைப்பொருள் என்பது தெரிய வந்தது. அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.28 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவை கைதுசெய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் போதைப்பொருளை எங்கு கடத்திச் சென்றார் என்பது தொடர்பாக விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் பாரத் வசித்தா, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

    எனவே அவர் எவ்வளவு நாட்களாக போதைப்பொருட்களை கடத்தி வருகிறார்? அவருக்கு இந்தியாவில் யார்-யாருடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    • துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
    • சுமார் ரூ.85 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஆண் ஊழியர், தனது இரவு பணியை முடித்துவிட்டு நேற்று விமான நிலைய ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக வந்து கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர் அணிந்திருந்த ஷூவை கழற்றும்படி பாதுகாப்புப் படை வீரர்கள் கூறினர். அவர் ஷூவை கழற்ற மறுத்ததால் சந்தேகம் அடைந்த வீரர்கள் அவரை தனி அறைக்குச் சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் காலில் அணிந்திருந்த சாக்சுக்குள் 3 சிறிய பார்சல்கள் இருந்தன. அவைகளைப் பிரித்துப் பார்த்தபோது தங்கம்இருந்தது தெரியவந்தது. சுமார் 1.281 கிலோ எடையுடைய தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒப்பந்த ஊழியரையும், தங்கத்தையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
    • சர்வதேச விமானம் உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர்.

    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் அபுதாபியில் இருந்து வரும் சென்னை விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவர்களுடைய உடமைகளையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் யாரிடமும் தங்கம் சிக்கவில்லை.

    மேலும் அந்த சர்வதேச விமானம் உள்நாட்டு விமானம் செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்லக்கூடிய பகுதியில் நம்பர் லாக்குடன் கருப்பு நிற டேப் சுற்றப்பட்டு சோப் வடிவில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மொத்தம் 4½ கிலோ தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 ½ கோடி ஆகும். கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.
    • வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு புறப்பாடு, வருகை பகுதி வளாகங்கள் அருகே நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களை அடுக்குமாடி நிறுத்துமிடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க விமான பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்.

    தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழா நெருங்கும்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விமானத்தை இயக்குவதற்கு முன், இயந்திரங்களை சரி பார்த்த போது விமானத்தில் ஏசிக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
    • பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் சென்னையில் அவதிக்கு உள்ளாகினர்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து 276 பயணிகளுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை இயக்குவதற்கு முன், இயந்திரங்களை சரி பார்த்த போது விமானத்தில் ஏசிக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தங்கள் நாடுகளுக்கு செல்ல இருந்த பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் சென்னையில் அவதிக்கு உள்ளாகினர்.

    • பாதுகாப்பு அதிகாரிகள் பயணி விஜய கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.
    • சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக விஜய் கிருஷ்ணாவிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பினர். அப்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 35) என்ற பயணியின் கைப்பையை ஸ்கேனில் பரிசோதித்த போது, அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது.

    இதனால் பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணியின் கைப்பையை தனியே எடுத்து சென்று பரிசோதித்தனர். அந்த கைப்பைக்குள், துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அது 9 எம்.எம் ரகத்தை சேர்ந்த குண்டு ஆகும். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பயணி விஜய கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது விஜய கிருஷ்ணா, 'தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், காலையில் லண்டனிலிருந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, தற்போது டிரான்சிட் பயணியாக மதுரை செல்ல உள்நாட்டு விமான நிலையம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தான் அமெரிக்காவில் ரைபிள் கிளப் உறுப்பினர். எனவே எனது சொந்த உபயோகத்திற்காக துப்பாக்கி குண்டுகளை, அமெரிக்காவில் இருக்கும்போது, ஆன்லைனில் வாங்கினேன், அதில் ஒரு குண்டு தவறுதலாக இந்த பையில் இருந்திருக்கிறது. நான் அந்தப் பையை கவனிக்காமல் எடுத்து வந்து விட்டேன்'என்று தெரிவித்தார்.

    ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள் விஜய கிருஷ்ணாவின் பயணத்தை ரத்து செய்து, அவரையும், துப்பாக்கிக் குண்டையும், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

    சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக விஜய் கிருஷ்ணாவிடம் மேலும் விசாரணை நடத்தினர். அதன்பின்பு, துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்த போலீசார், பயணி விஜய கிருஷ்ணாவை, விசாரணைக்கு அழைக்கும் போது, மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நேற்று இரவு அனுப்பி வைத்துள்ளனர்.

    • 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
    • மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை 20 செ.மீ வரை மழை கொட்டியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியவில்லை. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வந்த விமானங்களும் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நேரம் செல்லசெல்ல ஓடுதளத்தில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் விமானத்தை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்த சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அரபு நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வந்த 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஓடு தளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினால்தான் வழக்கமான விமான சேவைகளை இயக்க முடியும். இதனால் இன்று இரவு 11 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பயணிகள், சரக்கு, தனி, ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வகையிலான விமானங்களும் வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இருந்தபோதிலும் பெங்களூரு, டெல்லி, திருச்சி, கோவை, மதுரை, போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    • மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் கடத்தல் கும்பல் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் ஊழியர்கள் சிலரது உதவியுடன் தங்கத்தை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு செல்வது தெரிந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் இருந்து சென்னை விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது விமான நிலையத்தில் ஓப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வரும் பல்லாவரம், குரோம்பேட்டையை சேர்ந்த சினேகா, சங்கீதா ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பணிமுடிந்து வீட்டுக்கு சென்ற பெண் ஊழியர்களை பின் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் பெண் ஊழியர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சினேகா, சங்கீதா ஆகியோரது வீடுகளில் கழிவறை மற்றும், பீரோக்களில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர். மொத்தம் 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

    விசாரணையில் அவர்கள், விமானங்களில் தங்கம் கடத்தி வரும் கும்பலிடம் தங்கத்தை ரகசியமாக வாங்கி, தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, சுங்க அதிகாரிகளின் சோதனை இல்லாமல், வீடுகளுக்கு கொண்டு வந்து உள்ளனர். பின்னர் கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகள் பெண் ஊழியர்களின் வீட்டுக்கு வந்து கடத்தல் தங்கத்தை வாங்கிச் செல்வது விசாரணையில் தெரியவந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின் படி நேற்று அதிகாலை மண்ணடியில் தங்கம் கடத்தலில் குருவியாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹர்ஷத் என்பவர் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்திய போது 1½ கிலோ தங்கம், ரூ. 45 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் என்வரது வீட்டில் தங்கியிருந்தது தெரிந்தது. மேலும் கலையரசன் தங்கம் கடத்தும் ஆசாமிகளை பெண் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரையும் மத்திய வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை.
    • நான் இதுவரை தரம்குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் சம்பவத்திற்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்படி சொல்வீர்கள்?

    என்னுடைய டுவீட்டில் தெளிவாகவே நான் கூறியுள்ளேன். சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

    புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்? வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன?

    அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது

    திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம். உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சம்.
    • சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1,218 விமானங்கள் அதிகரித்து உள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம், 3,129 சர்வதேச விமானங்கள், 8,962 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் முழுவதும், சென்னை உள்நாட்டு விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 12,873 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

    நாள் ஒன்றுக்கு சராசரியாக 104 சர்வதேச விமானங்களும், 299 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 403 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த செப்டம்பர் மாதம் சென்னை சர்வதேச உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. மொத்தம் 17.6 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சர்வதேச பயணிகள் 5.02 லட்சம். உள்நாட்டு பயணிகள் 12.58 லட்சம் ஆவர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட மொத்த விமானங்கள் 10,873. அதில் சர்வதேச விமானங்கள் 2,704. உள்நாட்டு விமானங்கள் 8,169. நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 சர்வதேச விமானங்களும், 272 உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 362 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 2022 செப்டம்பரில், சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 15.1 லட்சம். அதில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம். உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சம்.

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1,218 விமானங்கள் அதிகரித்து உள்ளன. அதேபோல் பயணிகள் எண்ணிக்கை, 1.8 லட்சம் அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பிட்டுப் பார்க்கையில், சென்னை விமான நிலையத்தில், விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், தொழில், வர்த்தக துறையினர் அதிகரித்து வருவதால், இந்த சாதனையை சென்னை விமான நிலையம் படைத்து உள்ளது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

    ×