என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்து சாம்பல் பரவல்- சென்னையில் விமான சேவை பாதிப்பு
- பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
- இரண்டு விமானங்கள் சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
ஆலந்தூர்:
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் புகை சுமார் 15 கி.மீட்டர் உயரத்திற்கு எழுந்தது. வான்வெளியில் பரவி வரும் இந்த சாம்பல் புகை இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா மாநில பகுதியிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று காலை 7.15 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா பயணிகள் விமானம், காலை 11 மணிக்கு, தாமதமாக புறப்பட்டு சென்றது. காலை 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு எதிரொலி காரணமாக, சில குறிப்பிட்ட இடங்களில் பறந்த விமானங்களில், முன்எச்சரிக்கை சோதனை செய்யப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சென்னை-மும்பை விமானம் மட்டுமின்றி, டெல்லி-ஐதராபாத், மும்பை-ஐதராபாத், மும்பை-கொல்கத்தா விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதோடு சென்னை விமான நிலையத்தில் லண்டன்-சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், சென்னை லண்டன்-பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள், சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இது தவிர இன்று மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், தாமதமாக இயக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






