என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
    X

    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

    • கைதானவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
    • போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் சாதாரண உடையில் வந்திருந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 35 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அந்த வாலிபரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடைமைகளையும் பரிசோதித்தனர். அதில் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது.

    போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    கைதான அவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிந்தது.

    இதுபற்றி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×