என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.101 கோடி சொத்து குவிப்பு வழக்கு: ரவுடி ஸ்ரீதர் மனைவி அமலாக்க பிரிவில் ஆஜர்
    X

    ரூ.101 கோடி சொத்து குவிப்பு வழக்கு: ரவுடி ஸ்ரீதர் மனைவி அமலாக்க பிரிவில் ஆஜர்

    சென்னையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ரவுடி ஸ்ரீதர் மனைவி குமாரி இன்று காலை ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது ஆள் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

    போலீசார் தேடுவதை அறிந்ததும் ரவுடி ஸ்ரீதர் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

    வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்தபடியே தனது ஆட்கள் மூலம் காஞ்சீபுரம் பகுதியில் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அவர் வாங்கி குவித்து இருந்தார்.

    ரவுடி ஸ்ரீதரை தேடப்படும் குற்றவாளியாக காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு அறிவித்து உள்ளது. அவர் மீது சென்னை அமலாக்க பிரிவும் வழக்கு பதிவு செய்து இருந்தது.

    இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், ஸ்ரீதர் ஆஜராகாததால் அவருக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்த ரவுடி ஸ்ரீதரின் மனைவி குமாரியிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரித்தனர். அப்போது குமாரி பெயரிலும் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி குவித்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து குமாரியின் ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் முடக்கினர். இந்த நிலையில் சென்னையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி குமாரிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை குமாரி ஆஜர் ஆனார்.

    அவரிடம் இவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியது எப்படி? கணவர் ஸ்ரீதர் எங்கு உள்ளார் என்பது உள்ளிட்ட பல்வேறு விசாரணை நடந்தது.
    Next Story
    ×