என் மலர்
ஈரோடு
ஈரோடு சூரம்பட்டி வலசு, முத்தம்பாளையம், கருங்கல் பாளையம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.
இந்த மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனினும் அந்த மதுக்கடைகள் பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது.
கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் அருகே செயல்படும் மதுக்கடைகள் எதிராக பொதுமக்களின் போராட்டம் தீவிரமாக உள்ளது.
2 நாட்களாக அவர்களது போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக மதுக்கடைக்கும், மதுக்கடைக்கு வரும் குடிமகன்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே போராட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் மதுக்கடையை நெருங்காமல் இருக்க அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
கோவில் விழாக்கள், அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களில் பாதுகாப்புக்காக கம்புகளால் தடுப்புகள் அமைப்பதுபோல மதுக்கடையை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்புகளை மதுக்கடையை சுற்றி 100 அடி சுற்றளவுக்கு அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.
காந்திய பேரவை தலைவர் குமரி அனந்தன் ஈரோட்டில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பூரண மதுவிலக்கு கேட்டு நான் 14 முறை பாத யாத்திரை சென்று வந்துள்ளேன். இப்போது மதுவுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பூரண மதுவிலக்கு வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களை ஒன்று திரட்டி ஜூலை மாதம் 15-ந் தேதி கோவையில் உண்ணாவிரதம் நடத்த உள்ளேன்.
ஒருவர் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் இந்த உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. எனவே மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது சரியல்ல.
தமிழை உலக பொது மொழியாக அறிவிக்க வேண்டும், இதை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய அரசுக்கு நான் கடிதம் எழுதி வருகிறேன்.
தமிழக எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசி அவர் மூலம் தமிழ் உலக பொது மொழியாக அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.
கொடுமுடி அருகே உள்ள சோளங்காபாளையம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி, விவசாயி. இவரது மகன் நந்தகோபால் (வயது 24).
நந்தகோபால் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் பூர்ணிமா (18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஐ.டி. படித்து வருகிறார்.
இந்த நிலையில் நந்த கோபாலும் பூர்ணிமாவும் கடந்த 5 ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவர் வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.
இதையடுத்து காதல் ஜோடியினர் வீட்டைவிட்டு வெளியேறினர். கொடுமுடி அடுத்த பாசூர் பழனியாண்டவர் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் காதலர்கள் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு காதல் தம்பதியினர் மாலையும் கழுத்துமாக மலையம்பாளையம் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் இருவரது வீட்டு பெற்றோருக்கும் அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கொங்க நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்தது. மாநாட்டுக்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சென்னியப்பன், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன், பொருளாளர் கே.கே.சி.பாலு, துணைத்தலைவர் சக்தி கோச் நடராஜன் மாநகர் மாவட்ட தலைவர் ஜெக நாதன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
94-வது பிறந்த நாளை கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்த மாநாடு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.
வட இந்திய நதிகளை தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கின்ற தென்னிந்திய நதிகளோடு இணைக்கும் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு துவங்கி இதன் மூலம் நீர் வழிபாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விவசாய விளை நிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்.விவசாய துறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய -மாநில அரசுகள் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது.-
தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். யாரை அழைத்தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று பார்த்தால் அது சட்ட மன்ற எதிர் கட்சி மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும். எனவே அவரை இந்த மாநாட்டிற்கு அழைத்தோம்.
நாங்கள் எங்கு மாநாடு போட்டாலும் அங்கு மழை வந்து விடுகிறது. இன்று தமிழகத்தில் எங்கு மழை இல்லை என்று சொல்லுங்கள் அங்கு நாங்கள் மாநாடு போடுகிறோம்.
கடந்த 20 ஆண்டுகள் முன்பு இத்தனை வெயில் இல்லை. இப்போது ஏன் இந்த வெயில்? மழை குறைந்தது ஏன்? சாய கழிவு பிரச்சனை ஏன்?. அப்போது 200 அடி தோண்டினாலே தண்ணீர் வந்தது. ஆனால் இப்போது 2ஆயிரம் அடி தோண்டினாலும் தண்ணீர் வருவது இல்லை.
நதிநீர் இணைப்பை மூன்று வகையாக பிரிக்கலாம். தேசிய அளவில் நதிநீர் இணைப்பு, தமிழகத்துக்குள் உள்ள தென் இந்திய நதிகளை இணைப்பது, தமிழ்நாட்டில் உள்ள நதிகளை நமக்கே திருப்பி விடுவது. இவ்வாறு செய்தால் நிலத்தடி நீர் உயரும்.
மு.க.ஸ்டாலின் தூர்வாருவதை பார்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை தூர்வாருகிறார். அதனால் உங்களிடம் (மு.க.ஸ்டாலின்) ஒரு கோரிக்கை வைக்கிறேன்.அத்திகடவு- அவினாசி திட்டத்திற்கு போராட நாங்கள் ரெடி. அதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல் ஆளாக ஸ்டாலின் வர வேண்டும்.
இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்க தலைவர் அய்யாகண்ணு, கீழ் பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈரோடு வ.உ.சி.பூங்கபா மைதானத்தில் நடந்த நதிநீர் இணைப்பு மாநாட்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.-
நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுக்க தமிழகத்தின் தளபதியும், கொங்கு மண்டல தளபதியும் இங்கு வந்திருக்கிறார்கள். விவசாயிகளை வாழ வைப்பதற்காக வந்திருக்கிறார்கள். உண்மையிலேயே விவசாயிகள் சந்தோஷமாக உள்ளனர்.
லட்சக்கணக்கான டி.எம்.சி. தண்ணீர் வங்க விரிகுடா கடலிலும், அரபிக் கடலிலும் கலக்கிறது. அந்த தண்ணீரை திருப்பி விட்டால் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய கொங்கு மண்டலம் செழிக்கும். அதற்கு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் டெல்லியில் ஏன் போராடினோம். கொங்கு மண்டலம் தானே அந்த காலத்திலேயே வளமையான விவசாயிகள் கொண்ட மண்டலமாக இருந்தது. விவசாயிகளை யாரும் கண்டு கொள்ளாததால் தான் கருணாநிதி 7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.
இப்போது விவசாயிகளை ஆங்கிலேயர் ஆட்சி போல் துண்டாடுகின்றனர். இது நியாயமா? நாங்கள் டெல்லியில் போராடிய போது அங்கு வந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று சொல்லி அழைத்து சென்றார். ஆனால் இப்போது விவசாயிகளை மறந்து விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் ஈரோடு வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மு.க.ஸ்டாலின் உத்தரவு படி ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் ஈரோடு திண்டல் செம்மாம் பாளையம் குளத்தை தூர்வாரி வருகிறார்கள். இந்த குளத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். திறம்பட பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை அவர் பாராட்டினார்.
அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எனது ஆலோசனைபடி தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள குளங்களை தூர்வாரி வருகிறார்கள். தி.மு.க.வினரின் இந்த பணியை பார்த்து ஆளும் அரசு விழிப்படைந்து உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை தூர்வாரப் போவதாக கூறி பணியை தொடங்கி வைத்தார். வெறும் விளம்பரத்துக்காக தொடங்கப்பட்ட பணி இன்றும் அப்படியே தான் கிடக்கிறது. மக்களை ஏமாற்றவே இப்படி செய்துள்ளார்கள்.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதை மக்களும் அறிவார்கள்.
அதன்படி நீர்நிலைகளை தூர்வார கட்சி தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருந்தேன். அவர்களும் தூர்வாரும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த பணிகளை நானே நேரில் சென்றும் பார்த்து வருகிறேன்.
அந்த வகையில் ஈரோடு செம்மாம்பாளையம் குளத்தை ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரி உள்ளார்கள். மழை பெய்தால் இந்த குளத்தில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த தண்ணீர் விவசாயத்துக்கும் பயன்படும் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பணியை மிகவும் சிறப்பாக செய்த தி.மு.க. முன்னோடிகளையும், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பாராட்டி அவர்களுக்கு நன்றியும் கூறுகிறேன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது தவறில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பால் குற்றவாளி என்று கூறப்பட்ட ஜெயலலிதா படம் வைக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி படம் வைப்பதில் ஒரு தவறுமில்லை.
வரும் 14-ந்தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ளது. சட்டமன்றம் கூடும் வரை இந்த ஆட்சி நீடிக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. சட்டசபை கூடும் முன் இந்த அரசு இருக்குமா? என்பதை முதலில் பார்ப்போம்.
சட்டசபை கூடினால் தி.மு.க. தனது ஜனநாயக கடமையை சிறப்பாக ஆற்றும்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அ.தி.மு.க ஒரு அணியாக இருந்தது. அவர் மறைந்தபிறகு 2 அணியாக மாறி இப்போது 3-வது அணியும் உருவாகிவிட்டது. இன்னும் போக...போக எத்தனை அணிகள் உருவாகுமோ...? தெரியவில்லை.
இன்னும் 60 நாளில் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு சசிகலா கெடுவிதித்துள்ளதாக தினகரன் கூறி உள்ளாரே? என்று கேட்டதற்கு இதுபற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஈரோட்டில் இன்று மாலை கொ.ம.தே.க. சார்பில் நடக்கும் நதிகள் இணைப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியில் உள்ள பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராவாரம் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரைத்தேங்காய் ஏலம் நடைபெறும்.
இதில் திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது கொப்பரைத்தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் 3 ஆயிரத்து 873 மூட்டைகளில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ அளவுள்ள கொப்பரைத்தேங்காய்கள் ஏலத்திற்கு வந்திருந்தன.
இதில் முதல் தர கொப்பரைத்தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ 82.35 முதல் ரூ 85.60 வரையிலும், இரண்டாம் தர தேங்காய் ரூ 48.10 முதல் ரூ 79.80 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. கடந்த வாரத்தை விட 38ஆயிரம் கிலோ தேங்காய்கள் அதிகமாக வரத்தும், விற்பனை விலை 2 ரூபாயும் அதிகமாகவும் இருந்தது.
பு.புளியம்பட்டி:
பு.புளியம்பட்டி அருகே உள்ள காரப்பாடி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபா (வயது 32).
இவர் தொட்டிபாளையம் பகுதியில் திருமண வீட்டுக்கு போய்விட்டு இரவு 10.30 மணியளவில் நடந்துசென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் தீபாவை வழிமறித்தனர்.
பிறகு கத்தி முனையில் மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசையும் பறித்து சென்று தப்பிவிட்டனர்.
இதேபோல் அதே பகுதியில் செண்பகப்புதூரை சேர்ந்த ஜெயமணி (40) என்ற பெண்ணும் ஒரு திருமணத்துக்கு சென்று விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அவரிடமும் காதில் அணிந்திருந்த கம்மலை மிரட்டி அபகரித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இப்படி அடுத்தடுத்து நடந்த 2 சம்பவம் குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெருந்துறை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சுந்தர் (வயது 31). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இவரும் இவரது நண்பர் பிரபுவும் (28) மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நேற்று இரவு சாப்பிட சென்றனர்.
சாப்பிட்டு விட்டு நிதி நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பைபாஸ் வழியாக சென்ற போது பின்னால் வந்த ஒரு கார் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர் பாராத விதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். அவரது நண்பர் பிரபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியான ஊழியர் சுந்தருக்கு நந்தினி என்ற மனைவியும், ஸ்ரீமதி (5) என்ற ஒரு மகளும், தர்ஷன் (2) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை மற்றும் பவானி அருகே குட்ட முனியப்பன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு கடந்த 3 மாத காலமாக குடிநீர் வினியோகம் சரியாக செய்ய வில்லையாம்.
இது குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அந்த பகுதி மக்கள் குடிநீர் ஒழுங்காக வழங்க கோரி பவானி-மேட்டூர் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என மக்கள் கூறினர். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி துணை அலுவலர் லதா மற்றும் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் ஆகியோர் விரைந்தனர்.
அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி-3 சேர்ந்தவர் மங்கயர்கரசி (வயது68). இவரது மகன் பரந்தாமன். இவரது மகள் காயத்ரி.
பரந்தாமன் தற்போது பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மகள் காயத்ரி திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
மங்கயர்கரசியின் கணவர் சில வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். இதனால் மங்கயர்கரசி மட்டும் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனது தம்பிக்கு வீட்டிற்கு மங்கயர்கரசி செல்வது வழக்கம்.
அதே போன்று நேற்று காலையும் மங்கயர்கரசி தனது தம்பி வீட்டிற்கு சென்று விட்டார். இரவு திரும்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுகுள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிகிடந்தது. பீரோ திறந்திருந்தது. பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
மாநாட்டுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி பேசுகிகிறார். மாநில தலைவர் திருச்சி தேவராஜன், அவைத்தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன், பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மாநாட்டில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, காங்கேயம் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மைய செயலாளர் கார்த்திகேய சேனாபதி ஆகியோர் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.
முன்னதாக மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினர் தூர் வாரிய ஈரோடு செம்மாம்பாளையம் குளத்தை பார்வையிடுகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடுகிறார்.






