search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cash theft"

    திருப்பூரில் பட்டப்பகலில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.14 லட்சத்தை மர்ம ஆசாமிகள் துணிகரமாக திருடி சென்றனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்தியசுந்தரி (39). இவர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பிரிவில் கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை செந்தில்குமாரும், சத்தியசுந்தரியும் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். இரவு 8 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சத்தியசுந்தரி, கணவர் வராத நிலையில் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் அதை திருடி சென்று இருக்கிறார்கள்.

    இதுகுறித்து சத்தியசுந்தரி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் மர்ம ஆசாமிகளின் ரேகை எதுவும் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

    இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன் பின்னர் பணம் இருந்த பீரோவின் லாக்கரை கூர்மையான ஆயுதத்தால் அறுத்து பணத்தை திருடி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருட்டு நடந்த வீட்டில் வெவ்வேறு அறைகளில் மொத்தம் 4 பீரோக்கள் இருந்தன. அதில் ஒரு பீரோவில் மட்டுமே பணம் வைக்கப்பட்டிருந்தது. திருட சென்ற மர்ம ஆசாமிகள் மற்ற 3 பீரோக்களை திறந்து பார்க்காமல் சரியாக பணம் இருந்த பீரோவை மட்டும் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    மேலும் கணவன்-மனைவி இருவரும் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் நேரத்தை நன்கு அறிந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சத்தியசுந்தரிக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்றும், அல்லது அவர் வீட்டு சூழல் தெரிந்தவராக இருக்கக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். எனவே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடமும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் கணவர் நிலத்தை விற்று அதற்கான ரூ.14 லட்சத்தை பீரோவில் வைத்து இருந்தார். தற்போது அந்த பணம் திருடப்பட்டு உள்ளது. எனவே கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் யாரேனும் அவரை நோட்டமிட்டு வீட்டை அடையாளம் கண்டு திருடி சென்றார்களா? எனவும் சந்தேகம் இருப்பதாகவும் சத்தியசுந்தரி போலீசில் தெரிவித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

    திருப்பூர் பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் பக்தர் போல வந்த நபர் ஒருவர் அம்மன் சன்னதி கொடிமரம் முன்பு இருந்த உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை அட்டையில் பசை தடவி நூதன முறையில் திருடினார்.

    அவரை கோவில் ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 770-ஐ போலீசார் பறிமுதல் செய்து கனகராஜை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இதேபோல நேற்றும் அதே உண்டியலில் ஒரு வாலிபர் பணம் திருடியபோது கையும், களவுமாக பிடிபட்டார்.

    அதன் விவரம் வருமாறு:-

    அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தின் கீழ் உள்ள உண்டியல் அருகே நேற்று காலை அடிக்கடி ஒரு நபர் வந்து காணிக்கை போடுவது போல் உண்டியல் உள்ளே இருந்து பணத்தை எடுத்தார். இதைப்பார்த்த கோவில் ஊழியர்கள் சந்தேகமடைந்து அவரை பிடித்து இணை ஆணையர் ஞானசேகரனிடம் ஒப்படைத்தனர். அவர் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பழனியப்பா காலனியை சேர்ந்த தினேஷ் (31) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    தினேஷ் கடந்த சில நாட்களாக கோவிலுக்கு பக்தர் போல வந்து அம்மன் சன்னதி கொடிமர உண்டியல் ஓட்டையில் ஒரு பிளாஸ்டிக் அட்டையை மடித்து உள்ளே வைத்து விடுவார். உண்டியலுக்குள் பக்தர்கள் போடும் காணிக்கை உண்டியல் உள்ளே விழாமல் அந்த அட்டையில் சிக்கி இருக்கும். சிறிது நேரம் கழித்து தினேஷ் சென்று உண்டியலில் பணம் போடுவது போன்று அட்டையில் சிக்கி இருக்கும் பணத்தை எடுத்து விடுவார். இவர் அடிக்கடி வந்துள்ளார்.

    இவை அனைத்தும் கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இவர் உண்டியலில் திருடிய ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் 3 நாட்களாக ஒரே சட்டை அணிந்து வந்துள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கோவில் ஊழியர் முரளி திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

    கோவிலில் கடந்த சில நாட்களாக பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    புகழ்பெற்ற அண்ணாமலை கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் சிக்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரணமல்லூர் அருகே கோவில்களில் உண்டியலை உடைத்து திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் ராமலிங்கம் சாமி கோவிலும், வெங்கடேசப்பட்டி கிராமத்தில் அனுமான் கோவிலும் உள்ளது. இந்த 2 கோவில்களிலும் கடந்த 10-ந் தேதி இரவு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று முன்தினம் பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், கன்னியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமணி கிராமத்தில் பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) மற்றும் திருமணி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (18) என்பதும், ராமலிங்க சாமி கோவில், அனுமான் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    தலைவாசல் அருகே ஆசிரியர் வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை ரோட்டை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 49). இவர் தலைவாசல் அருகே பெரியேரி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(45). இவர் ஆறகளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜனனி, பிரீத்தி ஆகிய 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜனனி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி எம்.எஸ்சி படித்து வருகிறார். பிரீத்தி பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். மகள்கள் இருவரும் கல்லூரியில் தங்கி படித்ததால் சத்தியமூர்த்தியும், அவரது மனைவியும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தியும், சாந்தியும் படுக்கை அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த சத்தியமூர்த்தி படுக்கை அறை கதவை திறக்க முயற்சித்தார். அவரால் கதவை திறக்க முடியவில்லை. கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பக்கத்து வீட்டை சேர்ந்த நண்பரான ஆசிரியர் மாணிக்கராஜூக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அவரும் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தார். வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்றார். அங்கு பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியே வீட்டுக்குள் புகுந்த அவர் படுக்கை அறை கதவை திறந்தார்.

    வெளியே வந்த சத்தியமூர்த்தியும், அவரது மனைவியும் வீட்டின் மற்ற அறைகளுக்கு சென்று பார்த்தனர். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. அங்கு வைத்திருந்த 15 பவுன் நகை, ரொக்க பணம் 30 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருக்கிறார்கள். திருடும் போது சத்தம் கேட்டு வெளியே வந்து விட கூடாது என்பதற்காக சத்தியமூர்த்தியின் படுக்கை அறை கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். திருட்டு நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் மர்ம ஆசாமிகளை கண்டறிய முடியவில்லை. இதனால் பெரிய வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தினால் இது போன்ற திருட்டு ஆசாமிகளை கண்டறிந்து குற்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று போலீஸ் அதிகாரி அறிவுறுத்தினார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு சம்பவத்தில் தொடர்பு உடைய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே நள்ளிரவில் அய்யனார் கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #CashTheft
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கல்லுமேட்டு பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கலியங்குப்பத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி கருவிகள், 100 கிலோ எடையுள்ள பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களையும் காணவில்லை. இதுகுறித்து அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தையும், கோவிலில் இருந்த ஒலிபெருக்கி கருவிகள், பித்தளை உள்ளிட்ட பொருட்களையும் திருடி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. 2 உண்டியல்களிலும் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 
    ஆரணியில் தோஷம் கழிப்பதாக கூறி தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 ஆயிரத்து 100-ஐ மோசடி செய்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி காந்தி ரோடு பகுதியில் தனியார் கூட்டுறவு சங்க நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் அம்சவேணி (வயது 22) என்ற ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை 11 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது லுங்கி உடுத்திக்கொண்டு ஒரு நபர் வந்து அவரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர் உங்களுக்கு திருமணம் நடைபெறாததற்கு காரணம் தோஷம் உள்ளது. அதை நீக்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.

    இதையடுத்து அந்த நபர் மாந்திரீக செயலில் ஈடுபடுவது போன்று சைகை காட்டினார். பின்னர் அம்சவேணி சுயநினைவை இழந்து விட்டார்.

    அப்போது அவர் பணப்பெட்டியில் இருக்கும் பணத்தை கேட்டவுடன் அதில் இருந்த பணத்தை அம்சவேணி எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

    சிறிதுநேரம் கழித்து சுயநினைவு வந்ததும் அம்சவேணி பணப்பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த ரூ.4 ஆயிரத்து 100-ஐ காணவில்லை. அந்த நபர் பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நிதிநிறுவன ஊழியர்களிடம் அம்சவேணி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ஊழியர்கள் வெளியே சென்று அவரை தேடினர். அப்போது அந்த நபர் பக்கத்து தெருவில் நின்று கொண்டிருந்தார். அவரை ஊழியர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு அவரை ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் செய்யாறு தாலுகா மேல்பூதேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25) என்பதும், ‘பூம்பூம்’ மாட்டுக்காரர் என்பதும் தெரிய வந்தது. மேலும் சந்தோசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கறம்பக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் உள்ள மாடகாளி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு அடிக்கடி பக்தர்கள் கிடாவெட்டு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேலும் நேர்த்திக்கடனாக கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்க நகைகளையும் காணிக்கையாக செலுத்துவதும் உண்டு. இந்தநிலையில் நேற்று முன்தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பின்னர் இரவு வழக்கம்போல கோவில் பூசாரி கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கும், வடகாடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலை பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் திறக்கப்படாததால் பக்தர்கள் செலுத்திய பணத்தின் மதிப்பு பல ஆயிரக் கணக்கில் இருக்கும். மேலும் சென்ற ஆண்டும் கும்பாபிஷேகத்தின்போது கோவிலில் இருந்த மற்றொரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. கோவிலுக்கு செலுத்தும் காணிக்கை தொடர்ந்து திருட்டுபோவது வேதனை அளிக்கிறது” என தெரிவித்தனர். 
    ×