search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறம்பக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
    X

    கறம்பக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    கறம்பக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் உள்ள மாடகாளி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு அடிக்கடி பக்தர்கள் கிடாவெட்டு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேலும் நேர்த்திக்கடனாக கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்க நகைகளையும் காணிக்கையாக செலுத்துவதும் உண்டு. இந்தநிலையில் நேற்று முன்தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பின்னர் இரவு வழக்கம்போல கோவில் பூசாரி கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கும், வடகாடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலை பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் திறக்கப்படாததால் பக்தர்கள் செலுத்திய பணத்தின் மதிப்பு பல ஆயிரக் கணக்கில் இருக்கும். மேலும் சென்ற ஆண்டும் கும்பாபிஷேகத்தின்போது கோவிலில் இருந்த மற்றொரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. கோவிலுக்கு செலுத்தும் காணிக்கை தொடர்ந்து திருட்டுபோவது வேதனை அளிக்கிறது” என தெரிவித்தனர். 
    Next Story
    ×