search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pound jewel"

    தலைவாசல் அருகே ஆசிரியர் வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை ரோட்டை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 49). இவர் தலைவாசல் அருகே பெரியேரி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(45). இவர் ஆறகளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜனனி, பிரீத்தி ஆகிய 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜனனி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி எம்.எஸ்சி படித்து வருகிறார். பிரீத்தி பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். மகள்கள் இருவரும் கல்லூரியில் தங்கி படித்ததால் சத்தியமூர்த்தியும், அவரது மனைவியும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தியும், சாந்தியும் படுக்கை அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த சத்தியமூர்த்தி படுக்கை அறை கதவை திறக்க முயற்சித்தார். அவரால் கதவை திறக்க முடியவில்லை. கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பக்கத்து வீட்டை சேர்ந்த நண்பரான ஆசிரியர் மாணிக்கராஜூக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அவரும் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தார். வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்றார். அங்கு பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியே வீட்டுக்குள் புகுந்த அவர் படுக்கை அறை கதவை திறந்தார்.

    வெளியே வந்த சத்தியமூர்த்தியும், அவரது மனைவியும் வீட்டின் மற்ற அறைகளுக்கு சென்று பார்த்தனர். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. அங்கு வைத்திருந்த 15 பவுன் நகை, ரொக்க பணம் 30 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருக்கிறார்கள். திருடும் போது சத்தம் கேட்டு வெளியே வந்து விட கூடாது என்பதற்காக சத்தியமூர்த்தியின் படுக்கை அறை கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். திருட்டு நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் மர்ம ஆசாமிகளை கண்டறிய முடியவில்லை. இதனால் பெரிய வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தினால் இது போன்ற திருட்டு ஆசாமிகளை கண்டறிந்து குற்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று போலீஸ் அதிகாரி அறிவுறுத்தினார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு சம்பவத்தில் தொடர்பு உடைய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ×