என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபியில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 32 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அம்பிகை நகரை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி நம்பியாம் பாளையத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது நிறுவனத்தில் இருந்தார். மனைவி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் மேல்மாடி வழியாக இறங்கி வீட்டுக்குள் புகுந்தனர்.

    பிறகு அந்த ஆசாமி வீட்டின் உள்ளே இருந்த பீரோவை திறந்தான். உள்ளே இருந்த லாக்கரில் வளையல், தாலி செயின், நெக்லஸ், செயின், தோடு, பிரஸ்லெட் என மொத்தம் 32 பவுன் நகைகள் இருந்தது.

    அந்த லாக்கரை அப்படியே கொள்ளையன் தூக்கி கொண்டு தப்பி ஓடி விட்டான்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர்.

    இந்த துணிகர நகை கொள்ளை சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    துரோகிகளிடம் நட்பு வைத்துகொள்ளக் கூடாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குட்டி கதை சொன்னார்.
    ஈரோடு:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் பேசும்போது ஒரு குட்டிக்கதை கூறினார். அதன் மூலம் நம்பிக்கை துரோகிகளுடன் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது, நெருக்கடி வரும்போது உதவிக்கரம் நீட்டுபவர்கள்தான் உண்மையான நண்பர்கள் என்று விளக்கினார்.

    அவர் கூறியதாவது:-

    என் கல்லூரி நாட்களில் பல நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்களெல்லாம் உண்மையானவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், உள்ளன்பு மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அப்படிப்பட்ட நட்பும் நம்பிக்கையும் தான் எதிர்காலத்தில் எனது பொது வாழ்க்கைக்கு பலமாக இருந்தது. இதை கூறும்போது, எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

    ஒருவன் தன் ஊரை அடைய காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான். இருட்டிவிட்டது. இருட்டில் நடந்தால் மிருகங்கள் தாக்கிவிடும் என்று நினைத்து அங்குள்ள ஒரு மரத்தடியில் தனியே உட்கார்ந்து இருந்தான். அப்போது அவனைப்போலவே இன்னொருவனும் தனியாக வந்தான்.

    2 பேரும் எதிர்பாராமல் சந்தித்தனர். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். தாங்கள் காட்டினை கடந்து செல்ல வேண்டிய விவரத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்தே காட்டை கடந்து விடலாம் என்று பேசிக்கொண்டனர். மேலும் காட்டினை கடந்து செல்லும்போது வழியில் எந்த ஆபத்து வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்னர் 2 பேரும் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் சென்ற வழியில் கரடி ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் ஒருவன் தங்களுக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறந்து ஓடிப்போய் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டு தப்பித்துக்கொண்டான்.

    இன்னொருவனுக்கு மரம் ஏறத்தெரியாது. எனவே தரையில் படுத்து மூச்சை தம் கட்டிக்கொண்டு கிடந்தான். கரடி அருகில் வந்தது. அது கீழே கிடந்தவனை பார்த்தது. அவனிடம் சென்று முகர்ந்து பார்த்தது. அவன் இறந்துவிட்டான் என்று நினைத்த கரடி திரும்பிச்சென்றது. இதை மரத்தில் இருந்து பார்த்தவன், கீழே வந்து, தரையில் படுத்து கிடந்தவனிடம், “கரடி உன் காதில் ஏதோ கூறியதே, அது என்ன?” என்று கேட்டான்.

    அதற்கு இவன், ‘ஒப்பந்தத்தை மீறிய உன்னை மாதிரி நம்பிக்கை துரோகிகளிடம் இனிமேல் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது!’ என்று கரடி சொன்னது என்று பதில் கூறினான்.

    நெருக்கடி வருகிறபோது உதவிக்கரம் நீட்டுகிறவர்கள்தான் உண்மையான நண்பர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். என் நண்பர்களை நான் முழுமையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. என்னாலும் என் நண்பர்கள் உயர்வார்கள்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறினார்.

    இந்த குட்டிக்கதையை கேட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கைத்தட்டி ரசித்தனர். மேலும், நம்பிக்கை துரோகம் செய்த நண்பன் யார்? முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமா? டி.டி.வி.தினகரனா? கரடி யார்? என்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

    ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.736 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு ரூ.736 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு ஜெயலலிதாவின் கோட்டை. 2016 சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட அனைத்து சட்டமன்ற வேட்பாளர்களும் வெற்றி பெற்று இருக்கக்கூடிய ஒரே மாவட்டம் இது.

    நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளின் பிரச்சினைகள், துயரங்கள் குறித்து தெரிந்தவன். எனவே விவசாயிகள், அணைகள், குளங்கள், ஏரிகளில் இருந்து, வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.

    அதுமட்டுமல்ல இன்றைக்கு மணல் விலை அதிகரித்துக்கொண்டு செல்வதாக என்னிடம் கருத்து தெரிவித்தார்கள். ஏற்கனவே, பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அரசே நடத்தி வருகிறது.

    தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை அனைத்தும் சீர் செய்யப்பட்டு, இன்னும் ஒரு வாரத்தில், மணல் குறைந்த விலையில் உங்கள் இல்லம் தேடி வரும். தேவையான அளவிற்கு, அரசு மணல் வழங்கும் என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

    இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டார். ஏற்கனவே இதற்கு முன்பு கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டபோதும், தோப்பு வெங்கடாசலம் கலந்து கொள்ளவில்லை. அப்போது தனியார் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் வரும்போது கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி இருந்தார்.

    ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் அரசு விழாவிலேயே அவர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து இருப்பது, தான் எடப்பாடி பழனிசாமி அணியில் இல்லை என்பதை உறுதிபடுத்தி உள்ளார்.

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கள்ளியம்புதூரை சேர்ந்தவர் கருப்பன். இவரது மனைவி சரசாள் (வயது50). சம்பவத்தன்று கருப்பன் தனது மனைவியுடன் பெருந்துறைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வண்டியை கருப்பன் ஓட்ட பின்னால சரசாள் உட்கார்ந்து வந்தார்.

    புளியம்பாளையம் விஜயமங்கலம் ரோட்டில் வந்த போது கருப்பன் பின்னால் வந்த ஒரு சரக்கு வேன் எதிர்பாராத வகையில் கருப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கணவன்-மனைவி இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சரசாள் நிலைமை மோசமானதால் அவரை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரசாள் பரிதாபமாக இறந்தார். கருப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தங்கள் கோரிக்கைகளுக்காக ராஜினாமா செய்யப்போவதாக அ.தி.மு.க.. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் கூறிய நிலையில், யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி யூனியனில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாதபட்சத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

    அருகில் இருந்த ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் நானும் ராஜினாமா செய்ய தயார். மாவட்டத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வலியுறுத்துவேன் என்றார்.

    இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் வாழப்பாடியாரை தவிர, எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்கள் கோரிக்கைக்காக ராஜினாமா செய்ததில்லை. அவ்வாறு ராஜினாமா செய்யவும் மாட்டார்கள். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து முதல்-அமைச்சர் பழனிச்சாமி பதிலளிப்பார். அ.திமு.க.வினர் அனைவரும் ஒரே அணியில் தான் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டி.என்.பாளையம் அருகே முதியவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர், பெரிய கொடிவேரி மதுரை வீரன் கோயில் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70).

    பொன்னுசாமிக்கு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு தோல் பட்டை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். எனினும் தோல்வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பொன்னுசாமி கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்ததாராம். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை முடிவெடுத்து பொன்னுசாமி வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து வாந்தி எடுத்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து சமையல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    திருப்பூர் மாவட்டம், வீர பாண்டி அருகே வலசு பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 46). இவர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே சில்லாங் காட்டு வலசை சேர்ந்த சமையல் கான்ட் ராக்டர் ரவி என்பவரிடம் சமையல் வேலை செய்து வந்தார்.

    இவர் ஊத்துக்குளியில் நடந்த ஒரு திருமணத்துக்கு சமையல் வேலைக்கு சென்றார். சமையல் வேலையை முடித்து விட்டு ஊத்துக்குளியில் இருந்து சரக்கு ஆட்டோவில் சில்லாங் காட்டுவலசு வந்து கொண்டிருந்தார்.

    ஆட்டோவை சமையல் கான்ட்ராக்டர் ரவி மகன் ஹரிஹரன் ஓட்டினார். அந்த ஆட்டோவில், ரவி மனைவி லட்சுமி, அய்யம் பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோரும் வந்தனர்.

    ஆட்டோ சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சிறுக்களஞ்சி என்ற இடத்தில் வந்து கொண்டி ருந்தது. ஒரு வளையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம் இருந்த ஆலமரத்தில் மோதியது.

    இதில் ஆட்டோ கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே சமையல் தொழிலாளி செல்வராஜ் இறந்தார். ஆட்டோவில் வந்த லட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விபத்தில் இறந்த செல்வராஜுக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பெருந்துறையில் கார் மீது மொபட் மோதியதில் தூக்கிவீசப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை காடபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் காடபாளையத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    மேலும் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து பால் கறந்து விற்பனையும் செய்து வந்தார்.

    இன்று காலை இவர் தனது மொபட்டில் பால் எடுத்துக்கொண்டு பெருந்துறை வாவிகடைக்கு வந்தார். அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார், குப்புசாமி சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குப்புசாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    பலியான குப்புசாமிக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்றுவந்த மாணவி திடீரென இறந்தார். இதுதொடர்பாக போலீசார் 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஈரோடு:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சினம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் சக்தி. அவருடைய மனைவி மங்கையர்கரசி கோர்ட்டு ஊழியர். இவர்களுடைய ஒரே மகள் பாக்யஸ்ரீ (வயது 17) ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு, 2-ம் ஆண்டு செல்ல இருந்தார்.

    பாக்யஸ்ரீ 60 கிலோ எடை இருந்தார். அதனால் தன்னுடைய உடல் எடையை குறைக்க சிகிச்சை பெறவேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது அதிக எடை இல்லை என்று கூறினாலும், அதை ஏற்க மறுத்த பாக்யஸ்ரீ எடையை குறைக்க வேண்டும் என்று கூறினார். அவருக்கு ஏற்கனவே கண்பார்வை குறைபாடும், தீராத சளித்தொல்லையும் இருந்தது.

    சக்தியின் உறவினர் நவீன்பாலாஜி ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமியூரில் இயற்கை மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் கடந்த 2-ந் தேதி பாக்யஸ்ரீயை அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அவர்களும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர். டாக்டர் நவீன்பாலாஜி பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்துவந்தார்.

    இதற்கிடையே மங்கையர்கரசியின் தம்பி திருமணம் கடந்த 7-ந் தேதி நடந்தது. பாக்யஸ்ரீயை பார்த்துக்கொள்வதாக நவீன்பாலாஜி கூறியதால் அவரது பெற்றோர் அந்த திருமணத்துக்கு சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் சிகிச்சை பெற்றுவந்த பாக்யஸ்ரீ நேற்று முன்தினம் காலை திடீரென இறந்துவிட்டார். ஆஸ்பத்திரி பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அவருடைய பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு மகளை பார்ப்பதற்காக சக்தியும், மங்கையர்கரசியும் புறப்பட தயாராக இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மருத்துவமனை பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை கொண்டுவந்து வைத்துவிட்டு, ‘உங்கள் மகள் இறந்துவிட்டார்’ என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

    தங்களது ஒரே மகள் பிணமாக கொண்டுவரப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள். உறவினர்களுடன் ஒரு ஆம்புலன்சில் பாக்யஸ்ரீயின் உடலை ஏற்றி மீண்டும் நவீன்பாலாஜியின் மருத்துவமனைக்கே கொண்டு சென்றார்கள். உடலை ஆஸ்பத்திரிக்குள் வைத்து முற்றுகையிட்டார்கள்.

    பின்னர் கவுந்தப்பாடி போலீசில் இதுகுறித்து மங்கையர்கரசி புகார் அளித்தார். அதில் ‘என்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. தவறான சிகிச்சையால் தான் என் மகள் இறந்துவிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    போலீசார் மருத்துவமனைக்கு சென்று பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் நவீன்பாலாஜி, கல்பனா, நிவேதினி மற்றும் நிர்வாகிகள் மாலதி, வர்மா, பணியாளர்கள் பிரியதர்ஷினி, தேவிமோகன், ஜோதி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அந்த மருத்துவமனையை அதன் நிர்வாகிகளே பூட்டிவிட்டனர்.

    இதற்கிடையே, பாக்யஸ்ரீயின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த உறவினர்கள் தெரிவித்தனர். அப்போது டாக்டர்கள் நவீன் பாலாஜி, கல்பனா ஆகியோர் அங்கு வந்தனர். மாணவியின் உறவினர்களுக்கும், நவீன் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர் தாக்கப்பட்டார்.

    போலீசார் அவரை மீட்டு அழைத்துச்சென்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை ஏற்று மாணவியின் உடலை பெற்றுச்சென்றனர்.
    ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வினரின் ஆதரவு தேவைப்படுவதால் இப்போதைக்கு ஆட்சி கலைப்பு ஏற்பட வாய்ப்பில்லை என ஈரோட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

    பாட்டாளி மக்கள் கட்சி மது ஒழிப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பா.ம.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியா முழுவதும் உள்ள மாநில-தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளும், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.

    மது ஓழிப்பு குறித்தும், பூரண மதுவிலக்கு கொண்டு வர பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், வரும் 11-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மாலை 4 மணிக்கு பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், நானும் (ஜி.கே.மணி) கலந்து கொள்கிறோம். மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க கூடாது.


    மத்திய அரசு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரியால்(ஜி.எஸ்.டி) சிறு-குறு, நெசவு தொழில்கள் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி.வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வினர் தங்கள் உள்கட்சி பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வினரின் ஆதரவு தேவைப்படுவதால் இப்போதைக்கு ஆட்சி கலைப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பவானியை அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது55). தொழிலாளி.

    முத்துசாமி சம்பவத்தன்று வேலை விசயமாக தனது மோட்டார்சைக்கிளில் சித்தோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் தாண்டி சென்ற போது முத்துசாமிக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் முத்துசாமி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு முத்துசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம் அருகே 2-வது நாளாக ஊருக்குள் சுற்றி திரியும் காட்டெருமை மயக்க ஊசி போட்டு பிடிக்க தீவிர நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கி உள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. பொதுவாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுவது அரிது.

    ரோட்டோரம் அவ்வப்போது ஒன்றிரண்டு காட்டெருமைகள் மேயும். பிறகு அடர்ந்த வனத்துக்குள் சென்றுவிடும்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சத்தியமங்கலம் அருகே சின்னட்டி பாளைம்,புளியங்கோம்பை வழியாக ஆஜாணுபாகு தோற்றம் கொண்ட ஒரு காட்டெருமை சதுமுகை ஊருக்குள் புகுந்தது.

    திடீரென ஊருக்குள் காட்டெருமை புகுந்ததை கண்ட கிராம மக்கள் பீதி அடைந்தனர். அந்த காட்டெருமையை விரட்ட முயன்றனர்.

    தாரை-தப்பட்டை அடித்து விரட்டினர்.ஆனால் அந்த காட்டெருமை காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்தது.

    இன்று(வியாழக்கிழமை) அந்த காட்டெருமை 2-வது நாளாக ஊருக்குள்ளேயே நடமாடிக் கொண்டிருக்கிறது. அந்த காட்டெருமை இன்று கொடிவேரி, சதுமுகை பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இதையொட்டி சத்தி வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காட்டெருமை அருகே யாரும் செல்ல வேண்டாம். எப்படியும் அதனை வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என்று கூறினர்.

    பட்டாசு வெடித்து மற்றும் தப்பட்டை அடித்து காட்டெருமையை இன்று எப்படியும் காட்டுக்குள் விரட்டி விட வேண்டும், இல்லாத பட்சத்தில் அதனை மயக்க ஊசி போட்டு பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    ×