என் மலர்
செய்திகள்

நாங்கள் மாநாடு நடத்தும் இடங்களில் எல்லாம் மழை பெய்கிறது: ஈஸ்வரன் மகிழ்ச்சி
ஈரோடு:
கொங்க நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்தது. மாநாட்டுக்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சென்னியப்பன், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன், பொருளாளர் கே.கே.சி.பாலு, துணைத்தலைவர் சக்தி கோச் நடராஜன் மாநகர் மாவட்ட தலைவர் ஜெக நாதன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
94-வது பிறந்த நாளை கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்த மாநாடு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.
வட இந்திய நதிகளை தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கின்ற தென்னிந்திய நதிகளோடு இணைக்கும் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு துவங்கி இதன் மூலம் நீர் வழிபாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விவசாய விளை நிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்.விவசாய துறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய -மாநில அரசுகள் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது.-
தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். யாரை அழைத்தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று பார்த்தால் அது சட்ட மன்ற எதிர் கட்சி மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும். எனவே அவரை இந்த மாநாட்டிற்கு அழைத்தோம்.
நாங்கள் எங்கு மாநாடு போட்டாலும் அங்கு மழை வந்து விடுகிறது. இன்று தமிழகத்தில் எங்கு மழை இல்லை என்று சொல்லுங்கள் அங்கு நாங்கள் மாநாடு போடுகிறோம்.
கடந்த 20 ஆண்டுகள் முன்பு இத்தனை வெயில் இல்லை. இப்போது ஏன் இந்த வெயில்? மழை குறைந்தது ஏன்? சாய கழிவு பிரச்சனை ஏன்?. அப்போது 200 அடி தோண்டினாலே தண்ணீர் வந்தது. ஆனால் இப்போது 2ஆயிரம் அடி தோண்டினாலும் தண்ணீர் வருவது இல்லை.
நதிநீர் இணைப்பை மூன்று வகையாக பிரிக்கலாம். தேசிய அளவில் நதிநீர் இணைப்பு, தமிழகத்துக்குள் உள்ள தென் இந்திய நதிகளை இணைப்பது, தமிழ்நாட்டில் உள்ள நதிகளை நமக்கே திருப்பி விடுவது. இவ்வாறு செய்தால் நிலத்தடி நீர் உயரும்.
மு.க.ஸ்டாலின் தூர்வாருவதை பார்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை தூர்வாருகிறார். அதனால் உங்களிடம் (மு.க.ஸ்டாலின்) ஒரு கோரிக்கை வைக்கிறேன்.அத்திகடவு- அவினாசி திட்டத்திற்கு போராட நாங்கள் ரெடி. அதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல் ஆளாக ஸ்டாலின் வர வேண்டும்.
இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்க தலைவர் அய்யாகண்ணு, கீழ் பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






