என் மலர்tooltip icon

    சென்னை

    • 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் அறிவித்து இருந்தார்.
    • மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் அறிவித்து இருந்தார்.

    அதன்படி திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம், பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    • டி.ஜே. நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினார்.
    • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சுபாஷ் சந்திரபோஸ் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    புதுவண்ணாரப்பேட்டை:

    சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 27). விசுவல் கம்யூனிகேஷன் படித்து உள்ளார். இன்னும் திருமணம் ஆகாத இவர், மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தை தமிழரசனுக்கு உடந்தையாக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்கள் சிலருடன் கலந்து கொண்டார். அங்கு நடந்த டி.ஜே. நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினார்.

    அப்போது சுபாஷ் சந்திரபோஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவரது நண்பர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுபாஷ் சந்திரபோசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சுபாஷ் சந்திரபோஸ் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது.
    • வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் காலை 10 மணி 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    • மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது.

    இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    2025, ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

    தி.மு.க. வேட்பாளர்களாக பி.வில்சன் பி.எஸ்சி, பி.எல்., எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.

    • இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
    • நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

    பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, அடுத்த மாதம் ஜூன் 7 (சனிக் கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவிப்பு.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," சென்னையில் இன்று துல் ஹஜ் பிறை காணப்பட்டதை அடுத்து நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

    ஆகையால் வரும் ஜூன் 7ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
    • மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60க்கும் மேற்பட்டோரா கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகன் என்பவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

    மேகன் என்வர் ஏற்கனவே பல்வேறு இணை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.

    மேலும், இறந்த நபரின் மூலம் கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு சாதாரண வகைக்கு ரூ.105, சன்ன வகைக்கு ரூ.120 மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
    • மத்திய அரசிடமும் பேச்சு நடத்தி, ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2024-25ஆம் ஆண்டில் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் இந்த நெல் வகைகளுக்கு முறையே ரூ.2300, ரூ. 2320 கொள்முதல் விலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் குவிண்டாலுக்கு வெறும் ரூ.69, அதாவது 3% மட்டும் உயர்த்துவது போதுமானது அல்ல.

    ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1579 என்பதை அடிப்படையாக வைத்து, அதனுடன் 50% லாபம் சேர்த்து இந்த விலையை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. உற்பத்திச் செலவை கணக்கிடுவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் நடைமுறை தவறு என்பது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2300 செலவாவதாக உழவர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், அதே அளவுக்கு கொள்முதல் விலையும் நிர்ணயிக்கப்பட்டால் உழவர்களுக்கு லாபமே கிடைக்காது. வட்டிக்கு கடன் வாங்கி வேளாண்மை செய்யும் உழவர்கள், போதிய லாபம் கிடைக்காவிட்டால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.

    நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் போது உழவர்கள் நலனை மத்திய அரசு கருத்தில் கொள்வதில்லை என்பதைப் போலவே, கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை நிர்ணயிப்பதில் தமிழக அரசும் துரோகம் செய்கிறது. கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு சாதாரண வகைக்கு ரூ.105, சன்ன வகைக்கு ரூ.120 மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதைக் கொண்டு உழவர்களின் துயரத்தைத் துடைக்க முடியாது.

    பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஒதிஷாவில் குவிண்டாலுக்கு ரூ.800 வீதமும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானத்தில் குவிண்டாலுக்கு ரூ.500 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், தமிழக அரசும் குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.800 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசிடமும் பேச்சு நடத்தி, ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    • ஜாமின் பெறாத வகையில் நீதிமன்றத்தில் வாதாடியது திமுக அரசின் வழக்கறிஞர்கள்.
    • உடல் முழுவதும் இவ்வளவு எரிவது நல்லதல்ல, மருத்துவரை அணுகுவது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

    தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார்.

    உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான். அந்த SIT தமிழ்நாடு காவல்துறைகோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? அந்த SIT வேறு மாநில அதிகாரிகளோ ஒன்றிய அரசின் அதிகாரிகளோ இல்லை.

    அவர்கள் தமிழ்நாடு அரசின் காவல்துறை தானே? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் SIT குழு சிறப்பாக செயல்பட்டது என்றால் திமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது என்று தான் பொருள்.

    அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தது திமுக அரசின் காவல்துறை.

    அவர் ஜாமின் பெறாத வகையில் நீதிமன்றத்தில் வாதாடியது திமுக அரசின் வழக்கறிஞர்கள்.

    வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் நியமித்த SIT குழு பெண் அதிகாரிகள் மூவரும் அவர்களுக்கு துணையாக இருந்த விசாரணை குழுவும் திமுக அரசின் காவல்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள்.

    இப்படி, திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறையால் தான் ஐந்தே மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி ஏன் எரிகிறது? உடல் முழுவதும் இவ்வளவு எரிவது நல்லதல்ல, மருத்துவரை அணுகுவது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிமுகவினர், விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளை கைது செய்தது சிபிஐ. தீர்ப்பு வழங்கியது சிபிஐ நீதிமன்றம். சாட்சிகள் பிறழ்சாட்சியமாக மாறாமல் காத்தது திமுக அரசின் காவல்துறை என்ற போதிலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தாம் தான் காரணம் வாய்க்கூசாமல் எடப்பாடி பழனிசாமி கூறியதை பார்த்து சந்தி சிரித்தது என்பது தானே உண்மை.

    அண்ணா பல்கலை. வழக்கில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடந்தது என்பதற்காக நீதிமன்றம் தான் பாராட்டுக்குரியது எடப்பாடி பழனிசாமி சொல்வதும், விசாரித்து ஆதாரங்களை சமர்பித்த காவல்துறையினருக்கும், குற்றத்தை நிரூபிக்க வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பாராட்டுக்குரியவர்கள் இல்லை என சொல்வதும் அவரின் அறியாமையை காட்டுகிறது.

    "அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?" என்று முதலமைச்சரைப் பார்த்து கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரத்தை SIT நியமித்த நீதிமன்றத்திடம் ஓரிரு நாட்களுக்குள் கொடுத்துவிட்டு, சொல்லும் செயலும் ஒன்றே மானமுள்ளவர் பழனிசாமி என்று நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு மானங்கெட்ட பிறவி பழனிசாமி என ஊடகங்கள் முன்பு ஒப்புக்கொள்ள வேண்டும். அதை செய்வீரா?...

    அதிமுக ஆட்சி அமைந்தால் "அந்த சார்கள்?" யார் என்பதை கண்டுபிடிப்போம் என எந்த அடிப்படை அறிவோ வெட்கவோ இல்லாமல் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, கொடநாடு கொலை, கொள்ளை... போன்ற அதிமுக ஆட்சியில் நடந்த குற்றங்களின் விசாரணையை எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி கையாண்டது என்பது உலகத்திற்கே தெரியும்.

    அண்ணா பல்கலை. வழக்கை விசாரித்த SIT குழு நீதிமன்றத்தின் முழு மேற்பார்வையில் செயல்பட்டது, அதுகூட திமுக அரசின் காவல்துறைக்கு உட்பட்டது என்றாலும் விசாரணை நீதிமன்றமும் மேற்பார்வை பார்த்த சென்னை உயர்நீதிமன்றமும் திமுக ஆட்சிக்கு உட்பட்டவை இல்லையே?... அந்த சார் யார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால் நேரடியாக நீதிமன்றத்தில் சமர்பித்து சந்தேகத்தை இப்போதே உறுதி செய்யலாமே?

    எந்த ஆதாரமும் கையில் இல்லாமல் கடந்த 5 மாதமாக புலம்பியது போதும் எடப்பாடி பழனிசாமி அவர்களே? குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கி தரும் வேலையை திமுக அரசு சிறப்பாக செய்துவிட்டது. நீங்கள் புலம்பாமல் அமைதியாக தூங்குங்கள்...

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததை திமுக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அம்பலப்படுத்தியால், காழ்ப்புணர்ச்சியாக அண்ணா பல்கலை.

    மாணவி வழக்கில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி "யார் அந்த சார்?" என சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தில் கொடுத்து நிரூபித்திருக்க வேண்டாமா? - ஏன் ஆதாரங்களை இதுவரை தரவில்லை? அவதூறுக்கு ஆதாரம் இருந்தால் தானே தர முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
    • நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.

    உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.

    கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்பட்டது.

    • வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?
    • நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர்," 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது என்பது திமுக குடும்பத்தின் DNA-வில் கலந்தது. அதற்கு ஸ்டாலினின் தங்கையான கனிமொழி எப்படி விதிவிலக்காவார்?

    தன் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக இளைஞர்கள் குறித்தோ, திமுக அனுதாபி ஞானசேகரனின் தொடர்புகள் குறித்தோ, SIR குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மிதவாதியாக இருந்த கனிமொழி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பை, தங்களுக்கு கிடைத்த வெற்றி போல சித்தரித்து அறிக்கை உருட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்த வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி?

    நீங்கள் இந்த வழக்கில் தலையிடவே கூடாது எனத் தானே நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது?

    அதனை நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

    நீங்கள் தலையிடவே கூடாது என்று அமைக்கப்பட்ட இந்த SIT விசாரணையில் நீங்கள் தலையிட்டு, நீர்த்துப் போகச் செய்து, வழக்கை அவசரப்படுத்தி முடித்துவிட்டு, அந்த "SIR"-ஐ காப்பற்றிவிட்டோம் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?

    பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வர 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என Timeline போடும் கனிமொழி, அதில் 4 1/2 ஆண்டுகள் அவர் அண்ணன் ஆட்சி என்று மறந்துவிட்டாரா? அல்லது, தெரிந்தே, உட்கட்சி பூசலில் Same Side Goal அடித்துவிட்டாரா?

    பொள்ளாச்சி வழக்கை முறையாக CBI விசாரித்து, சரியான தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. அதிலும் சம்மந்தம் இல்லாத நீங்கள் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றதால் தான், இந்த கேள்வியைக் கேட்கிறோம்.

    "அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை"- அப்படியா? நாங்கள் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட SIT என்று தானே நினைத்தோம்? அப்படியென்றால், நீதிமன்ற உத்தரவை மீறி நீங்கள் விசாரித்தீர்களா? நீதிமன்ற தீர்ப்பை மீறி விசாரித்து, யாரைக் காப்பாற்றினீர்கள்?

    அண்ணா பல்கலை வழக்கு மட்டுமல்ல- ஒவ்வொரு வழக்கிலும் உங்கள் அண்ணன் அரசு எந்த லட்சணத்தில் விசாரிக்கிறது என்பதற்கு நீதிமன்றங்கள் கொடுக்கும் தொடர் சம்மட்டி அடிகளே சாட்சி!

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பான பேரிடியாக தங்கள் பாதுகாப்பை இழந்து நிற்கும் தமிழக மக்கள், ஜனநாயகப் பூர்வமாக 2026-ல் கொடுக்கப் போகும் தர்ம அடி காத்திருக்கிறது!

    #யார்_அந்த_SIR

    #SIRஐ_காப்பாற்றியது_யார்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது.
    • சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.

    இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.

    பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது.

    அப்போது, தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.

    தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    இதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது.

    ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழ்நாடு காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை தி.மு.க. தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.

    சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
    • விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

    தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கடுமையான கவலை குறித்து தெரிவிக்கவே தாம் இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.

    தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.

    குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும்.

    அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது.

    தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகளால் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைத்து, கடன் வாங்குபவர்கள் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதை குறைத்துவிடும்.

    நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

    இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்.

    மேலும், கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக, சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம் .

    இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும்.

    எனவே, மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (தங்க பிணையத்திற்கு எதிராகக் கடன் வழங்குதல்) வழிகாட்டுதல்கள் 2025-இல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு நிதியமைச்சர் அவர்களை கேட்டுக்கொகிறேன்.

    நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

    கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதே வேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தான் கருதுகிறேன்.

    எனவே, விவசாய சமூகத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    இதே கருத்தை வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×