என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பக்தர்கள் 60 நிமிடத்தில் இருந்து 75 நிமிடங்களுக்குள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடியும்.
- காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அத்துடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
ராமர் கோவில் திறக்கப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினந்தோறும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும், காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். ராமர் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு நுழைவது முதல் வெளியேறுவது வரை மிகவும் எளிமையான, வசதியான நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் 60 நிமிடத்தில் இருந்து 75 நிமிடங்களுக்குள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடியும். செல்போன்கள், காலணிகள் உள்ளிட்டவைகளை கோவில் வளாகத்திற்கு வெளியில் விட்டுவிட்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பூக்கள், மாலைகள், பிரசாதம் உள்ளிட்டகைகள் ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி மந்திர் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மங்கள ஆரத்திற்காக காலை 4 மணிக்கு, ஸ்ரீங்கர் ஆரத்திற்காக காலை 6.15 மணிக்கு, ஷயன் ஆரத்திற்காக இரவு 10 மணிக்கு அனுமதி பாஸ் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற ஆரத்தி பூஜைகளுக்கு அனுமதி பாஸ் கிடையாது.
இவ்வாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- உ.பி.யைச் சேர்ந்த தேஜ்பால் 26 ஆண்டுகாலமாக வேலை பார்த்து வருகிறார்.
- இதில் தம்பி கல்யாணத்துக்காக ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தேஜ்பால் சிங். இவர் 1995, டிசம்பர் 26-ல் தனியார் நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றத் தொடங்கினார். இவருக்கு 4 குழந்தைகள்.
பயிற்சி எழுத்தராக பணியில் சேர்ந்த இவர், தற்போது கூடுதல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 26 ஆண்டுகால பணியில் அவர் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார். அதுவும் 2003, ஜூன் 18 அன்று அவரது தம்பியின் திருமணத்திற்காக அந்த ஒரு நாள் விடுமுறை எடுத்துள்ளார்.
பணியில் அதீத ஈடுபாடு கொண்டதால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் வேலை செய்கிறார்.
தொழில் மீதான அசாதாரண அர்ப்பணிப்பிற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ஸ் நிறுவனத்தால் தேஜ்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர்
- நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்
குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர் என்பதையும் பாஜக அரசு விளக்க வேண்டும்.
நாட்டின் குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் என்ன நடக்க போகிறது?
பாஜகவின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்றபோது, பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- உ.பி.யின் அசம்கர் நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார்.
லக்னோ:
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று முதல் முதலாக அங்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்துக்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் வரை அவர் ரோடு ஷோ நடத்தினார்.
சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். ஆலயத்துக்குச் சென்ற பிறகு காசி விசுவநாதருக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். நேற்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்கினார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அசம்கர் நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். உத்தர பிரதேச மாநிலத்துக்கான ரூ.42,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார்.
மேலும், 15 விமான நிலைய திட்டங்களுக்கு அடிக்கல் நாடடினார். இந்த விமான நிலையங்கள் ரூ.9,800 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. அதுபோல 12 புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு 70 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
- ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.
அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.
ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.
- இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர்.
- இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் பகுதியில் கடந்த வாரம் இயற்கை உபாதையை கழிக்க, வயல்வெளிக்கு இரு சிறுமிகள் சென்றுள்ளனர்.
அப்போது இந்த சிறுமிகளை செங்கல் சூளையின் காண்டிராக்டர் ராம்பூர் நிஷாத்(48), அவரது மகன் ராஜூ(18) மற்றும் உறவினர் சஞ்சய்(19) ஆகிய 3 பேர் சேர்ந்து கட்டாயமாக மது அருந்த வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ஒரு மரத்தில் சிறுமிகள் 2 பேரின் உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராம்பூர் நிஷாத்-ன் செங்கல் சூளையில் தான் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், அவர்களுடைய பெற்றோரும் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தந்தையும் நேற்று வீட்டின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல்துறை தரப்பில் இது தற்கொலை தான் என்று உறுதி செய்துள்ளனர்.
பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று காவல்துறையினர் அழுத்தம் கொடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்து செய்து கொண்டார் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உ.பி.யில், இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர், இப்போது நீதி கிடைக்காததாலும், வழக்கைத் திரும்பப் பெறுவதற்கான அழுத்தத்தாலும், அவர்களின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ம.பி.யில், தனது மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து புகார் கூறிய ஏழை கணவரின் வழக்கு நியாயமாக விசாரிக்கப்படாததால், தனது ௨ குழந்தைகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாஜகவின் டபுள் என்ஜின் ஆட்சியில் நீதி கேட்பது குற்றமாகி உள்ளது. பாஜக ஆட்சியில் ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், மந்த்சௌரிலிருந்து பவுரி வரையிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குப் பிறகு, அவர்களின் குடும்பங்கள் நீதிக்காக போராடின
இந்த கொடூரமான அநீதிக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள், இல்லையெனில் இன்று இல்லை என்றால் நாளை இந்தக் கொடுமையின் நெருப்பு உங்களையும் சுட்டு விடும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- விவசாயிகளின் காயத்தில் உப்பை தேய்த்தது போன்று பாஜக செயல்பட்டு இருக்கிறது
- கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள்
விவசாயிகள் மீது விபத்து ஏற்படுத்தி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை அஜய் மிஸ்ராவை, மக்களவை தேர்தலுக்காக லக்கிம்பூர் கேரி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"விவசாயிகளின் காயத்தில் உப்பை தேய்த்தது போன்று பாஜக செயல்பட்டு இருக்கிறது. இந்த மக்களவை தேர்தலில் அஜய் மிஸ்ராவையும், பாஜகவையும் நாங்கள் ஒருசேர எதிர்க்க போகிறோம். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள். விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் சர்வான்சிங் பாந்தர் அறிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர்.
அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.
அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனையொட்டி, அஜய் மிஸ்ரா தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாஜக விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அஜய் மிஸ்ராவுக்கு பாஜக வாய்ப்பளித்ததை கண்டு விவசாயிகள் கோபமடைந்துள்ளனர். தனது வேட்பு மனுவை அவர் வாபஸ் பெற வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஒரு பக்கம் பாரத ரத்னா விருது கொடுத்து விட்டு, இன்னொரு பக்கம் விவசாயிகளை கொன்றவரின் தந்தைக்கு எம்.பி சீட்டு கொடுக்கிறது பாஜக. இது பாஜகவின் பாசாங்குத்தனம் என்று விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மிட்டல் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- பாஜக எம்.பி உபேந்திர சிங் ரவாத், வெளியான ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி தொகுதி பாஜக எம்.பி., உபேந்திர சிங் ராவத், மீண்டும் அதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் உடன் உபேந்திர சிங் ராவத் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அறிவுறுத்தலால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது
ஆனாலும், பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத், அந்த ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார். எனது நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் DeepFake AI தொழில்நுட்பத்தால் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், நேற்று மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.
பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- சாலையில் சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.
- காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள விகாஸ் நகரில் தொடர்ந்து மழை பெய்தது.
இந்நிலையில், விகாஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் திடீரென ராசத பள்ளம் ஏற்பட்டது.
இதில், அந்த வழியாக சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
- வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியடைந்தனர்.
வாரணாசி:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியடைந்தனர்.
இதனால் வாரணாசியில் உள்ள பாஜக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் கொண்டாடினர்.
- ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றச்சாட்டு.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.
இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.
அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






