search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் கடத்தல்"

    • போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
    • குழந்தைகள் ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஜெகநாத சாமி கோவில் அருகே உள்ள ஹார்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தையை விற்க உள்ளதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் இருந்து 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசாவில் ஜெய்பூர் ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 6 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி மும்பை ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செயல்பட்டது தெரியவந்தது.

    கடத்தி வரப்படும் குழந்தைகள் ரூ 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

    குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் முழுவதும் கேமராக்களை பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    • குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
    • குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை.

    அயோத்தி:

    பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அயோத்தி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது:

    அயோத்தியில் நாங்கள் குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்குட்பட்டவர்கள்.

    குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை. பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குழந்தைகள் கொண்டு செல்லப்படுவதை அறிந்துகொண்டதாக கூறினார்.

    • ரவீந்திரகுமார் கூறிய தகவல்களை கேட்டு மிரண்டு போன போலீசார், அவரால் கடத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியலை திரட்டினர்.
    • தகவல்களின் அடிப்படையில் ரவீந்திரகுமார் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டெல்லிக்கு வந்தனர். டெல்லி புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர்.

    ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக ஊர் சுற்றிவந்தார். அப்போது போதைக்கு அடிமையானார். அதன்பின்பு ஆபாச படங்கள் பார்க்க தொடங்கினார். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய தொடங்கினார்.

    டெல்லி புறநகர் பகுதியில் கட்டிட வேலை நடைபெறும் பகுதிகளுக்கு சென்று நோட்டமிட்டு அங்கு தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்தி செல்வார். பின்னர் தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வார். தொடர்ந்து அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பிணத்தை எங்காவது கண்காணாத இடத்தில் வீசிவிட்டு சென்றுவிடுவார்.

    ஒரு குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பின்பு மீண்டும் அதே இடத்திற்கு செல்வதில்லை. வேறுபகுதிக்கு சென்று குழந்தைகளை தேட தொடங்குவார். இதற்காக டெல்லி புறநகர் பகுதியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று குழந்தைகளை கடத்தி உள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டு 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த குழந்தையின் கழுத்தை அறுத்து கழிவு நீர் ஓடையில் வீசிவிட்டு சென்றார். அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை உயிர் பிழைத்துவிட்டது. அந்த சிறுமி கொடுத்த தகவலின் பேரில் டெல்லி போலீசார், கொலைகாரனை தேட தொடங்கினர். இதற்காக டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தும், இன்பார்மர்கள் மூலமும் சிறுமியை சீரழித்தவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி, ரோகிணியில் உள்ள சுக்பீர்நகர் பஸ்நிலையம் அருகே ரவீந்திரகுமார் சிக்கினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவர்தான் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், டெல்லி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினார். அவர்கள் மூலம் தன்னை கண்டுபிடித்துவிடாமல் இருக்க அவர்களை உடனே கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

    ரவீந்திரகுமார் கூறிய தகவல்களை கேட்டு மிரண்டு போன போலீசார், அவரால் கடத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியலை திரட்டினர். இதில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ரவீந்திரகுமார் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஏதுமறியா குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ரவீந்திரகுமாருக்கு கோர்ட்டு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    • ஜகைய்யா பேட்டை செருவு பஜாரை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் ஷில்பாவுடன் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டில் 4 குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்.
    • மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் ஜக்கையா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலம், பிரமணி மாவட்டம் பாலம் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் இதுவரை 17 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருந்தது. போலீசார் விசாரணையில் 2 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் காணாமல் போனதாக தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் சங்கீதா ஆனந்த். இவர் மும்பையை சேர்ந்த ருக்சன் சந்த் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டை தானம் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார்.

    சங்கீதா தனது கணவரை சந்திக்க அடிக்கடி மும்பைக்கு சென்று வந்தார். அப்போது மகாராஷ்டிராவில் குழந்தைகளை கடத்தி விற்கும் சுல்தானா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுல்தானா கடத்தி வரப்படும் குழந்தைகளை விற்க இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி சங்கீதா தனக்கு தெரிந்த விஜயவாடாவை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பகடலாவை சேர்ந்த ஷிரவாணியை சந்தித்து குழந்தை இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டு கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

    இதேபோல் ஜகைய்யா பேட்டை செருவு பஜாரை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் ஷில்பாவுடன் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டில் 4 குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர். வட்சவாய், தூக்கு பாலத்தில் 2 குழந்தைகளும், ஜக்கைய்யா பேட்டையில் ஒரு குழந்தையும், விசன்னானா பேட்டையில் ஒரு குழந்தையும், ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அதன்படி சரண், சையத் சுபானி, சயத் அயன் ஆகிய 3 குழந்தைகள் மீட்கப்பட்டது.

    மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் ஜக்கையா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டதால் வழக்கு பதிவு செய்து பின்னர் குழந்தைகளை ஒப்படைக்கப்படும் என போலீசார் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து குழந்தைகள் விற்பனை செய்ததாக தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் ஷிரவாணி, ஷில்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த 5-ந்தேதி ஒரு சிறுவன் மற்றும் இரண்டு குழந்தைகள் அடையாளம் கண்டு மீட்கப்பட்டு மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மேலும் ஜக்கையா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கீதா, மும்பையை சேர்ந்த சுல்தானா ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×