என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம்.
    • துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    சென்னை தலைமை செயலகத்தில் வரும் 16ம் தேதி பல்கலைக்கழகங்களின் அனைத்து துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 16ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் புத்தாண்டு திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"

    தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.

    சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

    சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். வழக்கம் போலவே இந்த சித்திரையும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும்.

    சங்கக் காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழர்கள் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றால் நிறைக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக தமிழர்களின் தொழில்கள் சிறக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.

    பாமக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், " இந்திர விழாவை நமக்குக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

    மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அவ்வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.

    வெயிலைக் கொடுக்கும் சித்திரை தான் இனி வரும் ஆண்டுகளில் நமக்கு வெற்றிகளையும் வழங்கப் போகிறது. சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையும் கூட. தமிழர்களின் வாழ்வில் வரப்போகும் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது.

    சித்திரை மாதத்தின் தொடக்கமான இந்த நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மைகள் கிடைக்க சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து கூறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக நிர்வாகி சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் 13வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாககந்திரன் அவர்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் லட்சிய பயணம் வெற்றி பெற சூளுரை ஏற்போம்.

    தமிழ் ஆண்டுகளில் உலக நிறைவு என்னும் பொருள் கொண்ட விசுவாசுவ புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த இனிய தமிழ்புத்தாண்டானது கடந்த கால சோதனைகளையும், வேதனைகளையும் அகற்றி மக்கள் அனைவர் வாழ்விலும் உயர்வையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அன்பு நிறைந்த வளத்தையும், ஆரோக்கியத்தையும் அருள்வதாக அமையட்டும்.

    இனிய சித்திரை புத்தாண்டில் மக்கள் வாழ்வில் வளம் பெருக வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் பாஜக சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், " சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இயத இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறையத தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான புதிய சியதனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள் உருவாகி, தமிழ்நாட்டை அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் அழைத்துச் செல்ல இயத இனிய திருநாளில் உறுதியேற்போம்.

    இயத இனிய தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும், இன்பமும், இனிமையும் இல்லயதோறும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை

    எனது மனமார்யத தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    • அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    • உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் ராஜ் பவன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும்.

    புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும்.

    #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047 -க்கான வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்".

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை.

    பிரபல தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவன இயக்குனர்கள் மீது ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையங்களில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவனம் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

    அந்த வகையில் பவுர்ணமி நாளான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலம் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி நிலாச்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • அ.தி.மு.க. தலைவர்கள் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள்.
    • எப்போது பிரசாரத்தை தொடங்குவார்? என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிய அ.தி.மு.க. மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

    இந்த கூட்டணிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த கையோடு அ.தி.மு.க. தலைவர்கள் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியை விமர்சித்து பேசி உள்ளார். அதே போன்று மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும் அ.தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

    இதனால் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டிருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே இணக்கமான சூழல் ஏற்பட வழி பிறக்கும் என்பதே 2 கட்சி தலைவர்களின் எண்ணமாக உள்ளது. அது போன்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே தலைவர்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது ஒன்றுபட்டு செயல்பட முடியும் என்பதால் அதற்கான அனைத்து எற்பாடுகளையும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பங்குனி உத்திர நாளில் முடிவு செய்து மத்திய மந்திரி அமித்ஷா அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக்காட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின சுற்றுப் பயணத்துக்கும் நல்ல நாள் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    கூட்டணி பற்றிய கவலை தீர்ந்துள்ளதால் இனி தமிழக அரசுக்கு எதிரான விஷயங்களை முன்னிலைப்படுத்தி தீவிர பிரசாரம் செய்வதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

    இப்படி தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்று கூட்டணி பலத்துடன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்கும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருவதாகவும், அவர் எப்போது பிரசாரத்தை தொடங்குவார்? என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    தற்போது கோடை காலம் என்பதால் அது முடிந்த பின்பு சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா? இல்லை வெயிலை பொருட்படுத்தாமல் இப்போதே பிரசார பயணத்தை தொடங்கலாமா? என்பது பற்றியெல்லாம் ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

    இதே போன்று மற்ற கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள். இதனால் சட்டசபை தேர்தல் களம் ஓராண்டுக்கு முன்பே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கபட்டது.
    • ரூ .1 கோடி மதிப்பீட்டில் “அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைப்பு.

    சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கபட்டது.

    மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்!

    அவ்வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெரினாவில் நான் திறந்து வைத்த #அனைத்தும்_சாத்தியம் (Museum of Possibilities) அருங்காட்சியகம் பெயருக்கேற்ற வகையில், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது.
    • தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

    நெல்லை:

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் நினைவஞ்சலி கூடுகை பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி எதிரே உள்ள ஒரு தனியார் மகாலில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்னுராஜ் தலைமை தாங்கினார். முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வண்ணமுத்து வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு எழுத்தாளர் நாறும்பூநாதன் படத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னரால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைப்படி எப்படி நிறைவேற்றப்பட்டதோ-அதே போல நீட் தேர்வை ஒழிப்பது குறித்து மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டு கொண்டு செல்லப்பட்டு நீட்டை ஒழிக்க நல்ல முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுத் தருவார்.

    மத்திய அரசின் சில பல்கலைக்கழகங்களில் நீட் விலக்கு உள்ளது. அதுபோல் தமிழகத்திலும் நீட் விலக்கை முதலமைச்சர் போராடிக் கொண்டு வருவார். தமிழக பா.ஜ.க. தலைவராக நெல்லை மண்ணைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வாகி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    • அக்கரையில் உள்ள இல்லத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆலோசனையின் போது, எல்லாம் சரியாகிவிடும் என நிர்வாகிகளிடம் ராமதாஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, சென்னை அக்கரையில் உள்ள இல்லத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 

    • தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக உள்ளது.
    • வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று அ.தி.மு.க. தலைமையில் சிறப்பாக ஆட்சி அமையும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் ஒரே எண்ணத்தில் இருக்கும் மேலும் பல கட்சிகள் சேரக்கூடும். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக உள்ளது. டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்த ஊழல் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் தமிழக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான எண்ணம் அவர்களுக்கு இல்லை. எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

    இங்கு சித்தன் எம்.பி.யாக இருந்த போது நத்தம் தொகுதிக்கு அதிக வளர்ச்சித்திட்ட பணிகள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மக்கள் பணியில் த.மா.கா. ஈடுபடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
    • கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடல் முழுவதும் நகைகள் அணிந்து நடமாடும் நகை கடை போல் வலம் வருவது இவரது வாடிக்கை. இதனால் இவர் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராக உள்ளார்.

    இந்தநிலையில் வரிச்சியூர் செல்வம் கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதற்காக கோவை வந்து பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் பயங்கர ஆயுதங்களுடன் தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு இங்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்வதற்கு முன் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்ய போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தனிப்படையினர் நேற்று இரவு முதல் செல்வபுரம் உள்பட மாநகரம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஓட்டல்கள், லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் வரிச்சியூர் செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ பிடிபடவில்லை. இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்கவும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். வரிச்சியூர் செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்யுங்கள், அப்போது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றாலோ அல்லது அசம்பாவிதத்தில் ஈடுபட்டாலோ அவர்களை சுட்டுப்பிடியுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

    இதன் காரணமாக கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கோவை காந்திபுரம், உக்கடம் பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவை போலீசார் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×