என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு.
    • அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம்.

    சென்னை:

    துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு கல்வி-ஒற்றுமை-போராட்டமுமே நிரந்தவழி என முழங்கியவர். அறிவுச் சாட்டையைச் சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை. இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று!

    இந்நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்வியை குலைத்து, மாணவர்கள் மத்தியில் பிற்போக்குத்தனத்தை நிலைநிறுத்தும் கனவுலகில் மிதந்தவர்களுக்கு அண்ணல் இயற்றிய சட்டத்தின் வழியில் பல்கலைக்கழகங்களை காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

    அண்ணலின் கருத்துகள் கற்றறிவதற்கு மட்டுமல்ல, காலச் சூழலுக்கு ஏற்ப களத்தில் செயல்படுத்தி வெற்றியடைவதும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு. அதற்கு அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் பல கட்சிகள் இணையும்.

    கோவை:

    பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க என்பது ஜனநாயக ரீதியில் இயங்கூடிய ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார்.

    பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. கட்சி சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

    நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.

    தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது தான்.

    2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. சட்டசபையில் பேரவை தலைவரின் செயல்பாடு திருப்தியாக இல்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார்.
    • ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * வரலாற்றை மாற்றிய அம்பேத்கரின் பிறந்தநாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்.

    * தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாள், அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாள்.

    * அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார்.

    * சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர்.

    * ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை உயர வேண்டும் என்பதற்காகத்தான் சமத்துவ நாள் கொண்டாட்டம்.

    * ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார்.
    • மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார்.

    சென்னை:

    ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருப்பவர் மல்லை சத்யா. கட்சியின் மூத்த நிர்வாகி என்பதோடு கட்சி தொடங் கப்பட்டது முதல் வைகோவுடன் பயணித்து கொண்டு இருப்பவர்.

    கட்சி நலிவடைந்த போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பாலவாக்கம் சோமு போன்ற முக்கிய நிர்வாகிகள் வெளியேறினார்கள். ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் மல்லை சத்யா வைகோவுடனேயே இருக்கிறார்.

    இந்த நிலையில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் உச்ச கட்டத்தை அடைந்து திருச்சி யில் ம.தி.மு.க.வினர் மல்லை சத்யாவை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு சென்றிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை தாயகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. வைகோ முன்னிலையில் கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் துரை வைகோவின் ஆதரவாளர் சத்யகுமரன், இது துரை வைகோவின் காலம். அவரது கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு வெளியேறுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.

    இதற்கு பதிலடி கொடுத்து மல்லை சத்யா வெளியிட்ட பதிவில் ம.தி.மு.க.வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினிவேஷம், வெளியேறு என்ற விருதுகளை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் என்பதையும் விசுவாசமுள்ள கட்சியினர் அறிவார்கள்.

    விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத் தன்மையை வைகோ அறிவார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்று வைகோவின் அழைப்பின் பேரில் கோயம்பேட்டில் அம்பேத் கார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் மல்லை சத்யா பங்கேற்றார்.

    இது தொடர்பாக கருத்து கேட்க மல்லை சத்யாவை தொடர்பு கொண்ட போது எதுவும் கூற மறுத்துவிட்டார்.

    அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்த போது, துரை வைகோ கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவரை சுற்றியிருக்கும் சிலர் மல்லை சத்யாவை காயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 4 ஆண்டுகளாக அவரது பெயரை கூட சென்னையில் எந்த நிகழ்ச்சியிலும் போடக் கூடாது. சுவர் விளம்பரங்கள், பேனர்களிலும் பெயர் போட்டோக்கள் இடம் பெறக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டு உள்ளார்கள்.

    கட்சி தொடங்கியதில் இருந்து எவ்வளவு போராட் டங்கள், எத்தனை முறை ஜெயில் என்று கட்சிக்காகவே உழைத்து கொண்டிருப்பவர். தன் மீது போடப்பட்ட பல வழக்குகளை கோர்ட்டில் சந்தித்து வென்று இருக்கிறார். அவரையே அசிங்கப்படுத்தி ஓரம் கட்ட வேலை பார்க்கிறார்கள்.

    நேற்று முன் தினம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய துரை வைகோ வை சமாதானப்படுத்த ஓடியவர்களில் ஒருவர் மல்லை சத்யாவை நான் தாக்குகிறேன் தலைவரே என்று சொன்னபோதும் அதை துரை வைகோ கண்டிக்கவில்லை. எனவே அவரது மனநிலை புரிகிறது.

    20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார். மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார் என்று தெரிய வில்லை. நிச்சயம் மல்லை சத்யா கட்சியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. ஆனால் அவரை வெளி யேற்ற வாய்ப்பு இருப்ப தாகவே கருதுகிறோம் என்றனர்.

    நிர்வாக குழுவில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதாவது 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அதிகமாக காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி வரை இருக்கும். ஆந்திரபிரதேச கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். இதனால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.

    தமிழகத்தில் நேற்று திருத்தணியில் அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரையில் 101.3 டிகிரி, ஈரோட்டில் 101.1 டிகிரி கொளுத்தியது.

    தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினா விளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனி க்கோட்டை, மதுரை மாவட்டம் பெரியபட்டி, தானியமங்கலத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... சமத்துவ நாள்!
    • நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!

    நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... சமத்துவ நாள்!

    ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!

    'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்! ஜெய்பீம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர் விடுதி 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
    • மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அங்குள்ள மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 484 மாணவர்கள் தங்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

    • பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை ராமதாஸ் திரட்டி வருகிறார்.
    • யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம்.

    சென்னை:

    பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சத்தை அடைந்து உள்ளது.

    தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு தலைவர் பதவியையும் தானே ஏற்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் அறிவித் தார். இதனால் தலைவர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பொதுக் குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். எனவே நானே தலைவராக நீடிக்கிறேன் என்று டாக்டர் அன்புமணி அறிவித்தார்.

    இதை அடுத்து இருவரையும் சமாதானப் படுத்தும் முயற்சியில் ஜி.கே.மணி, பு.தா.அருள் மொழி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளார்கள்.

    ஆனால் கட்சி தொடர்பாக நான் எடுத்த முடிவு உறுதியானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் தான் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.

    ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி தனது தலைவர் பதவிக்கு அங்கீகாரம் பெற்று விட்டால் அன்புமணியின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை அவர் திரட்டி வருகிறார்.

    அதே நேரம் தந்தை ஏற்பாடு செய்துள்ள அந்த பொதுக்குழுவுக்குயாரையும் செல்ல விடாமல் தடுப்பதில் அன்புமணி ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். இதனால் யார் சொல்வதை கேட்பது? என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

    அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு இளை ஞர் அணி தலைவர் பதவி கொடுத்ததை அன்புமணி விரும்பவில்லை. அதை வெளிப்படையாகவே எதிர்த்தார். அதனால்தான் இந்த மோதலே உருவானது.

    நேற்று முகுந்தன், அன்புமணி வீட்டுக்கு சென் றார். தாத்தா ராமதாசை சமாதானப்படுத்த வரும்படி அப்போது அழைப்பு விடுத் தார். ஆனால் இதுவரை ராமதாசை சந்திக்க அன்பு மணி செல்லவில்லை.

    ஆனால் திருவிடந்தையில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெறும் வன்னியர் இளைஞர் மாநாட்டு பணி களை தலைவர் என்ற முறை யில் டாக்டர் அன்புமணி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது, நானே பா.ம.க. தலைவராக இருக்கிறேன். ராமதாசுடன் ஏற்பட்டுள்ள சண்டை உட்கட்சி பிரச்சினைதான் விரைவில் முடியும் என்றார்.

    அதே போல் டாக்டர் ராமதாசும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தீவிரமாக செயல்படுங்கள். கட்சியினர் யாரும் சோர்ந்து போக வேண்டாம் என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நீடிக்கும் இந்த மோதல் எப்படி முடியும்? எப்போது முடியும்? என்று தெரியாமல் கட்சி நிர்வாகிகள் தவிக்கிறார்கள்.

    சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, வரும் தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தையை தானே நடத்து வேன் என்பதில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்.

    தலைவர் என்ற ரீதியில் அன்புமணி தனியாக சென்று கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது, யாரையும் சந்திப்பது போன்ற வேலைகளில் அன்புமணி ஈடுபட கூடாது என்பதிலும் கறாராக இருக் கிறார். இதற்கு அன்புமணி சம்மதித்தால் விரைவில் சமாதானம் வரும் என் றார்கள்.

    • நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

    • பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
    • வாழை மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் அவினாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பியநல்லூா் ஊராட்சி கந்தம்பா ளையத்தில் கணேஷ், ராஜாமணி, சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

    இதேபோல் சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால் முறியாண்டம்பாளையம், மங்கரசுவலையபாளையம், சாலையப்பாளையம், கானூா், புலிப்பாா் உள்ளி ட்ட பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி ஆகிய வகைகளை சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

    கடந்த 2 நாட்களில் அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

    மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளனா்.இதையடுத்து சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். 

    • தங்கம் விலை ஏறுமுகத்தில் மீண்டும் பயணிக்க தொடங்கி இருக்கிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் மீண்டும் பயணிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

    கடந்த 9-ந் தேதி சவரனுக்கு ரூ.1,480-ம், 10-ந் தேதி ரூ.1,200-ம், 11-ந் தேதி ரூ.1,480-ம் அதிகரித்து இருந்தது. இப்படியாக 3 நாட்களில் மட்டும் ரூ.4 ஆயிரத்து 160 உயர்ந்து காணப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்ந்துதான் இருந்தது.

    கடந்த 11-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றும் ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    12-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    11-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,960

    10-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-04-2025- ஒரு கிராம் ரூ.110

    12-04-2025- ஒரு கிராம் ரூ.110

    11-04-2025- ஒரு கிராம் ரூ.108

    10-04-2025- ஒரு கிராம் ரூ.107

    09-04-2025- ஒரு கிராம் ரூ.104

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    ×