என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
சென்னை வேளச்சேரியில் காவலர் காமராஜை மதுபோதையில் இருந்த தந்தை, மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
117வது வார்டு திமுக சார்பில் வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை காவலர் காமராஜ் ஓரமாக போக சொன்னதாக தெரிகிறது. இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
காவல்துறையினரை தாக்கும் அளவுக்க திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
- கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரிசேரி என்ற ஊரில் திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
திருப்பதியை காப்பற்ற முயன்ற அவரது மனைவி லலிதா மற்றும் திருப்பதியின் பாட்டி பாக்கியம் ஆகியோரும் மின்சாரம் தாக்கியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
- அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி, அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி. விஜயபாஸ்கருக்கு எழுதிய கடிதத்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று சி.பி.ஐ.எம் வலியுறுத்தி உள்ளது.
- ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை.
மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்திந்துள்ளார். உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.
ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலையில் இன்று மேற்கொண்ட சோதனையில் ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் நடைபெற்ற சோதனையில் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 5 பேர் அறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பழனீஸ்வரன் என்பவரும் கடற்கரையோரத்தில் இருந்து 1 கிலோ கோகைன் கிடைத்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி வனக்காப்பாளராக பணிபுரியும் மகேந்திரன் என்பவர் ஏ1 குற்றவாளி என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.
- தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.
மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் "ஆவின்" பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
'தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக" என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பஸ்கள் மூலம் 52 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர்.
- தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் வார விடுமுறை, பவுர்ணமி கிரிவலம், தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் கூடுதலாக சுமார் 1,900 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 நாட்களிலும் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் மற்றும் தமிழ்ப்பு த்தாண்டு விழாவையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 877 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மூலம் 52 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர்.
எனவே கடந்த 3 நாட்களிலும் அரசு பஸ்கள் மூலம் மொத்தம் 4.50 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னைக்கு புறப்படுகிறார்கள். ஒரே நாளில் பொதுமக்கள் அனைவரும் மொத்தமாக புறப்படுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் மற்றும் அரசு பஸ்கள் நிரம்பி வழிந்தன. இதனால் பொதுமக்கள் பலர் சென்னைக்கு திரும்ப ஆம்னி பஸ்களையே நாடியுள்ளனர். இதனால் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக ரூ.1,900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேர் கொண்ட குடும்பம் செல்ல ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் என்பது இல்லை. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து அதற்குள்ளாகவே பஸ்களை இயக்கி வருகிறோம். கட்டண விவரத்தை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளோம். நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் நாங்களே புகார் செய்து நடவடிக்கை எடுக்கிறோம்' என்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் செய்யும் பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் விடப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
- பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும் கோர்ட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். சட்டத்தை நிலைநாட்ட மோடி அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளை சேர்த்து எந்த மாதிரியான கூட்டணி அமைத்து வந்தாலும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள். ஒரு போதும் பாசிச பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அசன் மவுலானா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கோபண்ணா, கே.விஜயன், இதயத்துல்லா, தி.நகர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் முத்தழகன், எம்.வி.ராமசாமி, எஸ்.கே.முகமது அலி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
- வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும்.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அதிகட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது.
நேற்று அதிகபட்சமாக ராஜஸ்தானில் 111 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- சாதிதான் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி.
- தமிழ், தமிழர் என்ற ஒன்றுதான் நம்மை ஒன்றிணைக்கும்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமை குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்.
அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியிலே தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம்.
இன்று காலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும்.
இந்த மண்ணில் இருக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம்.
புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறோம்.
சமூக நீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு வந்துள்ளேன். இந்த மேடையில் சகோதரர் திருமாவளவன் மகிழ்ச்சியோடு அமர்ந்துள்ளார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கி படித்தவர்தான்.
இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைக்கிற நாளில் அந்த விடுதியின் முன்புறம் பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு எண்ணிலடங்கா சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சென்னையில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது.
அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக இருக்கும். எனவே சமூக நீதியை நிலை நாட்டுகிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனை குறித்து 6,977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் அன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 174 மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் இது திராவிட மாடல் அரசின் சாதனை.
மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டி இருக்கிறோம். மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தின் பெண்கள் முன்னேற்றத்தை வைத்து அளவிடுகிறேன் என்று சொன்னார்.
அதனால்தான் பெரிதும் விவசாய தொழிலாளர்களாக இருக்கிற ஆதிதிராவிட மகளிரை நில உடமையாளராக மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு 'நன்னி லம்' என்ற மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 3,950 தொழில்முனைவோருக்கு ரூ.630 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொல் குடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது ஆதிதிராவிட மக்களின் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும்.
சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதை எல்லாம் நம்முடைய கொள்கைகளால் போராட்டங்களால் இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கி விட்டோம்.
கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தி இருக்க கூடிய மாற்றம்.
சாதிதான் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. அந்த ஆயிரம் ஆண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதற்கு தான் இன்று பாடுபடுகிறோம். இந்த ஆட்சிதான் பொற்காலம்.
நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்க கூடிய அரசியல்தான் வலுவானது. ஆற்றல் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன்.
தமிழ், தமிழர் என்ற ஒன்றுதான் நம்மை ஒன்றிணைக்கும். சமூக நீதி, பொதுவுடமை சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். ஜெய்பீம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறார். இந்தியாவில் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார்.
- விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்கப்படவில்லை.
- விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மெட்ரோ ரெயில்களும் ஒரே வழித்தடத்தில் இருந்து ஆலந்தூர் வரை இயக்கப்பட்டது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி செல்லும் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டது. இன்று காலையில் தொழில்நுட்ப கோளாறால் விம்கோ நகர் செல்லும் மெட்ரோ ரெயிலும், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் நோக்கி செல்லும் மெட்ரோ ரெயிலும் ஒரே நடை மேடையில் இருந்து தான் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் காலையில் சிறிது நேரம் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மெட்ரோ ரெயில்களும் ஒரே வழித்தடத்தில் இருந்து ஆலந்தூர் வரை இயக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில் தாமதமாக இயக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. இன்று விடுமுறை தினமாக இருந்ததால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.
- இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும்.
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கூறியதாவது:
* பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.
* இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் பேசிய திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.






