என் மலர்
நீங்கள் தேடியது "காவலர் மீது தாக்குதல்"
- பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
- கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார்.
பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் போலீஸ் ஒருவர் வந்து தனது பைக்கில் ரூ.120க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி இருக்கிறார்.
ஆனால், பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
இதனால், கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், போலீசாரை சுற்றி வளைத்து தாக்கினர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பின் மோதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
சென்னை வேளச்சேரியில் காவலர் காமராஜை மதுபோதையில் இருந்த தந்தை, மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
117வது வார்டு திமுக சார்பில் வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை காவலர் காமராஜ் ஓரமாக போக சொன்னதாக தெரிகிறது. இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
காவல்துறையினரை தாக்கும் அளவுக்க திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்தை பா.ஜ.க.வினர் சிலர் சட்டையை பிடித்து தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கோவில்பட்டி:
இந்துக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், ஜீப் டிரைவர் காவலர் பாண்டி ஆகியோர் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கி சென்றதாக தெரிகிறது.
இந்து முன்னணியினரின் போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்தை பா.ஜ.க.வினர் சிலர் சட்டையை பிடித்து தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் போலீசார் அவர்களை விரட்டி சென்றதில் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், காவலர் பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை தாக்கியதாக பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு, இந்து ஆலய பாதுகாப்பு மாவட்ட பொதுச்செயலாளர் பரமசிவம், இந்து முன்னணி நகர தலைவர் சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.






