என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த இன்ஸ்பெக்டர், காவலர் மீது தாக்குதல்- 4 பேர் கைது
    X

    அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த இன்ஸ்பெக்டர், காவலர் மீது தாக்குதல்- 4 பேர் கைது

    • போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்தை பா.ஜ.க.வினர் சிலர் சட்டையை பிடித்து தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    கோவில்பட்டி:

    இந்துக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், ஜீப் டிரைவர் காவலர் பாண்டி ஆகியோர் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கி சென்றதாக தெரிகிறது.

    இந்து முன்னணியினரின் போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்தை பா.ஜ.க.வினர் சிலர் சட்டையை பிடித்து தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    பின்னர் போலீசார் அவர்களை விரட்டி சென்றதில் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், காவலர் பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

    மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை தாக்கியதாக பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு, இந்து ஆலய பாதுகாப்பு மாவட்ட பொதுச்செயலாளர் பரமசிவம், இந்து முன்னணி நகர தலைவர் சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×