என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம்- பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு
- அ.தி.மு.க. தலைவர்கள் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள்.
- எப்போது பிரசாரத்தை தொடங்குவார்? என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிய அ.தி.மு.க. மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்த கூட்டணிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.
இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த கையோடு அ.தி.மு.க. தலைவர்கள் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியை விமர்சித்து பேசி உள்ளார். அதே போன்று மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும் அ.தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
இதனால் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டிருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே இணக்கமான சூழல் ஏற்பட வழி பிறக்கும் என்பதே 2 கட்சி தலைவர்களின் எண்ணமாக உள்ளது. அது போன்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே தலைவர்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது ஒன்றுபட்டு செயல்பட முடியும் என்பதால் அதற்கான அனைத்து எற்பாடுகளையும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பங்குனி உத்திர நாளில் முடிவு செய்து மத்திய மந்திரி அமித்ஷா அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக்காட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின சுற்றுப் பயணத்துக்கும் நல்ல நாள் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கூட்டணி பற்றிய கவலை தீர்ந்துள்ளதால் இனி தமிழக அரசுக்கு எதிரான விஷயங்களை முன்னிலைப்படுத்தி தீவிர பிரசாரம் செய்வதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
இப்படி தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்று கூட்டணி பலத்துடன் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்கும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருவதாகவும், அவர் எப்போது பிரசாரத்தை தொடங்குவார்? என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது கோடை காலம் என்பதால் அது முடிந்த பின்பு சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா? இல்லை வெயிலை பொருட்படுத்தாமல் இப்போதே பிரசார பயணத்தை தொடங்கலாமா? என்பது பற்றியெல்லாம் ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
இதே போன்று மற்ற கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள். இதனால் சட்டசபை தேர்தல் களம் ஓராண்டுக்கு முன்பே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.






