என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
- சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார்.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பொறுப்பு ஏற்று அண்ணாமலை பணியாற்றி வந்தார். இவரது தலைமையிலான பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவே தலைமை கருதியது. இருப்பினும் இவர் மீது அ.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர். கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை மாற்றம் குறித்து கேட்டதற்கு, பா.ஜ.க.வின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா சூசகமாக தெரிவித்தார். இதற்கு மறுநாளே பா.ஜ.க. மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, பா.ஜ.க. யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. மத்திய தலைமை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
- அரசு தரப்பில், வரி விதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- குவாரி உரிமையாளர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த சங்கத்தினருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன், இயற்கை வளங்கள் துறை செயலர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் முன்னிலையில், நேற்று குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது அரசு தரப்பில், வரி விதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்று குவாரி உரிமையாளர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இன்று முதல் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான எம்.சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது.
ஒரு யூனிட் ஜல்லி 4000-ல் இருந்து 5000-க்கும், எம்.சாண்ட் 5000-ல் இருந்து 6000-க்கும், பி.சாண்ட் 6000-ல் இருந்து 7000-க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பழங்கள், வெங்காயம், காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் மொத்தமாக வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து உள்ளார்கள்.
வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வைத்துள்ளவர்கள், மளிகை கடை வியாபாரிகள் மூட்டை மூட்டையாக வாங்கி திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது திருப்பூருக்கு கர்நாடகா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து டன் கணக்கில் லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் விற்பனை சூடு பிடிக்கும் என நினைத்த வியாபாரிகள் விற்பனை மந்தமாக காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் தரம் வெங்காயம் விலை குறைந்தாலும் அதிகளவில் விற்பனை நடைபெறவில்லை. வடமாநிலங்களில் இருந்து பல லாரிகளில் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சேமித்து வைக்கும் குடோன்களில் வெங்காயங்கள் நிரம்பி வழிந்து மேலும் சேமிக்க இடமில்லாததால் தேக்கம் அடைந்துள்ளது.
மேலும் பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது. இதன் காரணமாக அழுகும் நிலையில் இருந்த பெரிய வெங்காயங்களை தென்னம்பாளையம் மார்க்கெட் அருகில் ஓடும் நொய்யல் ஆற்றின் கரையோரம் மூட்டை மூட்டையாக வியாபாரிகள் வேதனையுடன் வீசிச்சென்றனர்.
மேலும் இருப்பு வைக்க இடமில்லாததால் வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகள் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் மேலும் பெரிய வெங்காய மூட்டைகள் அழுகுமோ என்ற அச்சத்திலும், கலக்கத்திலும் மொத்த வியாபாரிகள் உள்ளனர்.
- போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் மணி (வயது 44). இவரின் குழந்தைகளையும், தனது சகோதரரின் குழந்தைகளையும் சூலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விரும்பினார். அதற்காக கார்த்திகேயன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் தனது நண்பர்களான சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆணை பெற்று தருவதாக கூறி போலீசார் மணியை நம்ப வைத்துள்ளனர்.
இதனை நம்பிய மணி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த சேர்க்கை ஆணையை வைத்து குழந்தைகளை மணி பள்ளியில் சேர்த்துள்ளார்.
பின்னர் அந்த ஆணை போலியானது என்பதை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்து குழந்தைகளை பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோா் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவர் ராஜா தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
- போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது50). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று மாலை தருமபுரி 4 ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போதையில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், நாங்கள் கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும், உடனே பஸ்சை திருப்புங்கள் என்று கூறியுள்ளனர். டிரைவர் இந்த பஸ் கிருஷ்ணகிரிக்கு செல்லாது. தருமபுரி பஸ் நிலையத்திற்கு செல்கிறது என்றார்.
நீங்கள் பஸ்நிலையத்தில் இருந்து வேறு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து டிரைவர் ராஜா தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அரசு பஸ் டிரைவர் ராஜாவை தாக்கியது அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சர்மா (24), பிடமனேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), பிடமனேரி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது.
- வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி, பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீரை தேடி சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று உணவுக்காக பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் அருகே அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.
நீண்ட நேரமாக கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது.
குறிப்பாக உணவு தண்ணீருக்காக யானைகள் வெளியே வருகின்றன. இதனால் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.
- மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா?
- பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் முடிவை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முதலமைசசர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியை 3வது மொழியாக திணிக்க முயன்ற மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸூக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கட்டாயம் என பட்னாவிஸ் கூறுகிறார்.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக எழுந்த கண்டனத்தின் வெளிபாடு தான் இது.
மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா? பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழியை கற்பது கட்டாயமல்ல என மத்திய அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்குமா ?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அநீதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பரந்தூரில் 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், 1000 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில், தமிழக வெற்றக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மழை நீரில் சிறுவன் கால் வைத்தபோது மின்சாரம் தாக்கியது.
- அந்த வழியாக வந்த இளைஞர் அச்சிறுவனை துணிச்சலுடன் காப்பாற்றினார்.
கடந்த 16.4.2025 அன்று சென்னை அரும்பாக்கம் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ரேகன் (வயது 8) என்ற 3-ம் வகுப்பு மாணவன், தண்ணீரில் காலை வைத்தவுடன் மின்சாரம் தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தஞ்சாவூர், ஒரத்தநாட்டைச் சேர்ந்த
கண்ணன் என்ற இளைஞர் உடனடியாக அச்சிறுவனைக் காப்பாற்றினார்.
தன் உயிரைத் துச்சமென மதித்து அச்சிறுவனைக் காப்பாற்றிய இளைஞரின் துணிவைப் பாராட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இளைஞர் கண்ணனை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து அவரது துணிவைப் பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார்.
- 01.04.2024 முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
- 22.04.2025 முதல் கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடலூர் ஆகிய 4 நுழைவு வாயில்களில் மட்டும் பின்பற்றப்படும்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர்நீதி மன்ற உத்திரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு 01.04.2024 முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
தற்போது 07.04.2025 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி பின்வரும் நுழைவு வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படும்
1. கல்லாறு, 2. குஞ்சப்பணை, 3. மசினகுடி, 4. மேல்கூடலூர்
இந்த நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருச்சி மாவட்டம் தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.
தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.
வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.
நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்துள்ளார்.
பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயின் எதிர்ப்பையும் மீறி சொத்தை விற்பதற்காக கோபிநாத் ரூ.9 லட்சம் முன்பணம் வாங்கியுள்ளார்.
பிறகு, தாயிடம் பணத்தை தராமல் தானே வைத்துக் கொண்டு குடிபோதையில் கோபிநாத் திளைத்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தாய் செல்வி கோடாலியால் கழுத்தை வெட்டி பின்னர் டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன்.
- நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சீமான்" சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்.. வரும் தேர்தலில் இனி என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்.
நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






