என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரந்தூர் புதிய விமான நிலையம்"

    • நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.
    • மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர். கடந்த ஜூலை 9-ந்தேதி பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் தங்கள் நிலங்களை, முதன்முதலாக விமான நிலைய திட்டத்திற்கு வழங்கினார்கள்.

    கடந்த செப்டம்பர் மாத வரையிலான கணக்கீட்டின்படி, 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் அக்டோபர் மாதம் இறுதியிலான கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இதற்காக இழப்பீடு தொகையாக, 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்திற்கு தேவையான மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • பரந்தூரில் 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    இந்நிலையில், 1000 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில், தமிழக வெற்றக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதற்கு ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் 13 கிராம மக்களும் கிராம சபை கூட்டத்தின்போது பரந்தூர் புதிய விமான நிலையம் வருவதை எதிர்த்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.

    இதைத்தொடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் 13 கிராமங்களை சேர்ந்த விமானநிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் 300-வது நாள் போராட்டத்தை இன்று காலை திடீரென வயலூர் பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய், சிங்கிள்பாடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 432-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இதுவரை நடந்த 6 கிராம சபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். மேலும் ஒரு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களை கடந்த வாரம் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. ஆய்வுகுழு நேரில் பார்வையிட இருந்தது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று பரந்தூர் பகுதியில் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் ஐ.ஐ.டி. ஆய்வுகுழு ஆய்வு செய்ய மீண்டும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள், ஆய்வுக்குழு வரும்போது போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது.

    • பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள சுமார் 20 கிராமங்களில் 3 ஆயிரத்து 774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியாள நாள் முதலே கிராமமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள், பணியாற்ற உள்ளனர். மேலும் இந்த அதிகாரிகளின் கீழ் 24 தாசில்தார்கள், 24 துணை தாசில்தார்கள், சர்வேயர், வருவாய் ஆய்வாளர்கள், 326 வருவாய் துறை ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிலம் எடுப்புக்காக பணியாற்ற உள்ளனர். நில எடுப்புக்கு நியமிக்கப்பட உள்ள மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில் முதற்கட்டமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் நில எடுப்பு அலுவலகம் செயல்பட இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

    • சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.
    • நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 746.18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதில் 1917.17 ஏக்கர் நிலம் மட்டுமே அரசுடையது. மற்றவை அனைத்தும் விவசாய மற்றும் பட்டா நிலங்கள் ஆகும். இவை அனைத்தும் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது.

    புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள்முதலே பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த மாதம் விமான நிலைய பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    இந்தநிலையில் நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிப்பது, கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை, இழப்பீடு தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

    விமான பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணி முடிவடைய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம்.
    • ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.4.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர். ஆர்.கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில் பின் புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    • பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.
    • நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.

    விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவையும் உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமானநிலையத்துக்கு முதல் கட்டமாக நிலம் எடுப்பதற்காக அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. பொடாவூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இடங்களில் 566 பனை மரங்கள் மற்றும் காட்டுவாமரம், அரசமரம், மாமரம், வேப்பமரம், தைலமரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பரந்தூர் விமான நிலைய பணிக்கு முதல் கட்டமாக பொடாபூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் தரப்படும். அவர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதன்மீது ஏப்ரல் மாதம் 4-ந்தேதி விசாரணை மேற் கொள்ளப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்கு வோருக்கு சந்தை மதிப்பை விடம கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    ×