என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் - கையகப்படுத்தப்பட்ட 1,000 ஏக்கர் நிலம்
- நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.
- மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர். கடந்த ஜூலை 9-ந்தேதி பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் தங்கள் நிலங்களை, முதன்முதலாக விமான நிலைய திட்டத்திற்கு வழங்கினார்கள்.
கடந்த செப்டம்பர் மாத வரையிலான கணக்கீட்டின்படி, 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் இறுதியிலான கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்காக இழப்பீடு தொகையாக, 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு தேவையான மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






