என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது.
    • மருத்துவர்கள் மது போதையில் சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக காலை 6 மணிக்கு நோயாளிகள் வந்து காத்திருந்தனர். அப்போது ஆண்கள் மருத்துவப் பகுதியில் சிகிச்சை அளிக்கக்கூடிய பொது மருத்துவ பிரிவை சேர்ந்த டாக்டர் கண்ணன் என்பவர் காலை 6.30 மணிக்கு பணிக்கு வந்துள்ளார்.

    அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    இந்நிலையில் காலையில் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    இது தொடர்பாக மருத்துவமனையில் பணியில் இருந்த சக டாக்டர்களிடம் புகார் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், மருத்துவர்கள் மது போதையில் இருந்து சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் கண்ணன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு டாக்டர் அமர்த்தப்பட்டு அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

    • தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.
    • நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், கடந்த 4 ஆண்டுகள் ரகுபதி, முட்டுக்கொடுத்து கொடுத்து அ.தி.மு.க. தொண்டர்களிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போதுதான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் விதமாக, அமைச்சர் இலாகா கொடுத்துள்ளார் முதலமைச்சர். அந்த உற்சாகத்தில் பலத்த முட்டுகளுடன் நேற்று, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    யார் இந்த ரகுபதி? இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா கை காட்டவில்லை என்றால், அ.தி.மு.க. தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்? இவருக்கு அரசியல் வாழ்வளித்த அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியை விடக் கேவலமானவர் தானே இந்த ரகுபதி?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உத்தரவிட்டார் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கும் தி.மு.க.-வுக்கும் சம்மந்தமே இல்லை என்று பச்சைப் பொய் பேசியவர் தானே இந்த ரகுபதி? இந்த ரகுபதியின் பொய்யால் சட்டப் பேரவையில் ஸ்டாலினே, ஞானசேகரன் தி.மு.க. பொறுப்பாளர் அல்ல, அனுதாபி என உருட்ட வேண்டிய நிலைக்குத் தானே தள்ளப்பட்டார்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர். லீக் ஆனதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் அரசின் நடவடிக்கைகளை காரித் துப்பியதே, இதெல்லாம் மறந்துபோச்சா ரகுபதி? உங்கள் முதலமைச்சரை போன்றே, உங்களுக்கும் ஞாபக மறதியா?

    கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து, சார்ஜ் சீட் போட்டது அ.தி.மு.க. அரசு. கேரளா குற்றவாளிகளுக்கு வாதாடி ஜாமின்தாரராக இருந்தது தி.மு.க.வினர்.

    கொடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று தானே, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்? நான்கு ஆண்டுகளாக கொடநாடு வழக்கை விசாரித்து முடிக்க வக்கில்லாத ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை?

    முக்கி முக்கி வராத நிதி, எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்?

    அ.தி.மு.க.வால் அரசியல் அடையாளம் பெற்று, அ.தி.மு.க.வில் கொள்ளையடிப்பவர்களுக்கு இடமில்லை என்று தெரிந்ததும், தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.

    மக்களோடு மக்களாக நின்று, மக்களுக்கான அரசியலைச் செய்யும், எடப்பாடி பழனிசாமி மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

    நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.

    1991-ல் சட்டமன்ற உறுப்பினரானபோது ரகுபதியின் சொத்து மதிப்பு என்ன? அதே ரகுபதியின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? பினாமி பெயர்களில் எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? இப்படி எண்ணிலடங்கா சொத்துக்களை வாரிக் குவித்த ரகுபதி தான், நாளை காலை ரெய்டு வந்துவிடுமோ? என்ற பயத்திலேயே தினந்தோறும் இரவுகளைக் கழிக்க வேண்டும்.

    அறிவாலயத்தில், மேலே ரெய்டுக்கு பயந்து, கீழே கட்சியை காங்கிரசுக்கு அடமானம் வைத்த கொத்தடிமைகள், மாநில உரிமைகள் பற்றி பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும்.
    • என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம்.

    புதுக்கோட்டை:

    தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தே.மு.தி.க.வை கட்சி ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த அறிவிப்பு தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகும்.

    கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும். ஆனால், அவருடைய ஆசைகளையும், கொள்கைகளையும் நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதனை அவருடைய நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

    த.வெ.கவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லை. அவர் அண்ணன் தானே.

    விஜயகாந்த் குருபூஜை சமயத்திலும், 'கோட்' திரைப்படத்தின்போதும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது கூட்டணி விஷயங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம். எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. ஆனால் அண்ணனுக்கு 50 வயது.

    அவர் என்னை விட மிகவும் சீனியர். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பல லட்சம் இளைஞர்கள் அவருக்கு பின்னால் இருப்பது அவரது பலமாக நான் பார்க்கிறேன் என பதில் அளித்தார்.

    • சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார்.
    • கடந்த முறை இனி முறையாக ஆஜராகுவேன் என சொல்லி தானே சென்றீர்கள் என சீமான் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக, வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது.

    சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, திருச்சி டிஐஜி வருண்குமார் விசாரணைக்கு ஆஜரான நிலையில் சீமான் ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பினார்.

    கடந்த முறை இனி முறையாக ஆஜராகுவேன் என சொல்லி தானே சென்றீர்கள் என சீமான் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து சீமான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்ற நீதிபதி இதுதான் கடைசி வாய்ப்பு என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.
    • 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர்(வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீடு உள்ள தெருவிற்கு வந்தது. பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசி விட்டு தப்பிச்சென்றது. இதில் மின்விசிறி, விளக்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தது.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

    மேலும் அந்த கும்பல் இந்த 2 சம்பவங்களை நிகழ்த்துவதற்கு முன்பாக ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்ததையும், ஊழியரை தாக்கி விட்டு தப்பி சென்ற காட்சிகளும் சிக்கின.

    இதன்மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் , அந்த கும்பல் டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த கார்த்தி, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 4 பேர் என்பது அடையாளம் தெரிந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 3 தனிப்படைகள், சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் ஆகியோர் தலைமையில் தலா 1 தனிப்படையும், நெல்லை மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் கீதா மேற்பார்வையில் 2 தனிப்படையும் என மொத்தம் 7 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த கும்பல் நேற்று காலையிலேயே சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்றார்களா? அல்லது சென்னை, மதுரை எங்கேனும் தப்பிச்சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த கும்பலிடம் செல்போன் இல்லை. அவர்கள் 4 பேரும் மோடத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலமாகவே தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் அவர்களை செல்போன் சிக்னல் மூலமாக பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    அவர்களது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மெட்ரோ ரெயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது.
    • பயணிகள் பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது.

    எனவே, அனைத்து பயணிகளும் CMRL மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்றது.
    • மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கையான வனப்பகுதிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்றது.

    கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

    கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவில் தாவரவியல் பூங்கா வண்ணமயமாக ஜொலித்தது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சோழ மன்னர்களின் சிறப்பை பிரதிபலிக்கும் விதமாக 2 லட்சம் வண்ண வண்ண கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் அரண்மனை, அரண்மனை நுழைவு வாயில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதுதவிர 7 லட்சம் கார்னேசன் மலர்கள், ரோஜாக்கள், கிராசந்திமம் உள்ளிட்ட மலர்களை கொண்டு கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னப்பறவை ரதம் உள்ளிட்ட அலங்காரம் செய்து சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மேரிகோல்டு, சைக்ளோமென், பால்சம், பெட்டுனியா, பேன்சி, டெல்பினியம் உள்ளிட்ட 275 வகைகளில் 7 லட்சம் வண்ண வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு இருந்தது. இந்த செடிகளில் தற்போது பூக்கள் பூத்து குலுங்கியது.

    இதுதவிர அலங்கார மாடங்கள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் வைக்கப்பட்டு, அதில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது.

    மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அவர்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை, யானை உள்ளிட்டவற்றை பார்த்து ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    பூங்காவில் பூத்து குலுங்கிய பல வண்ண வண்ண மலர்களையும் பார்த்து ரசித்து அதன்முன்பு நின்றும் செல்பி எடுத்தனர். சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதற்காக பூங்காவின் பல்வேறு பகுதிகளில் செல்பி பாயிண்டும் வைக்கப்பட்டிருந்தது.

    அதில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். கண்காட்சியையொட்டி பூங்காவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் ஊட்டிக்கு இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு களிக்கும் வகையில் சர்க்கியூட் பஸ்களும் இயக்கப்பட்டது. இதில் பயணித்து சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    • கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
    • கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை பழைய ரேசன் கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகள் புவனேஷ்வரி (26)-க்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

    பாலுவின் வீட்டின் எதிரில் அவருடைய உறவினர் விஜய் (26) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். புவனேஸ்வரிக்கும், விஜய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி கணவரை பிரிந்து கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்தார். மேலும் அவர் கர்ப்பமானார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் பாலுவுக்கு குடிப்பழக்கம் அதிகரித்தது. தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மனைவி இல்லாமல் தவித்தார் .

    நேற்று இரவு அவர் அதிக அளவில் மது குடித்ததாக தெரிகிறது. இதனைதொடர்ந்து கீழ் புதுப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பாலுவின் மாமியார் பாரதி (45) தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலு கத்தியால் அவருடைய மாமியாரை வெட்ட முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி அவரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். பாலு அவரை விரட்டி சென்று தலை மற்றும் பின்பக்க கழுத்து ஆகிய இடங்களில் மாறி மாறி வெட்டினார். இதில் பாரதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதனைக் கண்ட பாலு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பாலுவுக்கு ஆத்திரம் தீரவில்லை. மனைவியின் பிரிவுக்கு காரணமான விஜயையும் வெட்டிக்கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதனையடுத்து புதுப்பேட்டையில் இருந்து அவருடைய சொந்த ஊரான புதுக்குடியானூர் கிராமத்திற்கு வந்தார்.

    அப்போது வாலிபர் விஜய் வீட்டில் இல்லை. அவர்கள் அதன் அருகில் ஒரு புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார்கள். அங்கு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பாலு அங்கு விஜயை தேடி சென்றார்.

    அப்போது விஜயின் தந்தை அண்ணாமலை (60) அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் அடைந்த பாலு இரும்பு கம்பியை எடுத்து அண்ணாமலையின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அண்ணாமலையின் மனைவி ராஜேஸ்வரி (55) வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாலு அவரையும் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்தார்.

    ஒரே நாளில் மாமியார் மற்றும் உறவினர் 2 பேரை கொலை செய்த பாலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா மற்றும் கொண்டபாளையம் போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை வாலாஜா போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலு கீழே விழுந்தார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    போலீசார் அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் பாலுவை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது.
    • மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்காடு வருகை தந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாரமங்கலம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து இல்லம் தேடி மருத்துவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபயிற்சியாக சென்று மக்களை சந்தித்து பேசினார்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.

    காலை 5.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    பழைய ஆஸ்பத்திரி ரோடு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கை யம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.

    தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராத னைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர்.

    தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவு ண்டன்ய ஆற்றங்கரை யில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றும் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    குறிப்பாக சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    இதே போல ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது.

    ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழையாக கொட்டியது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மக்கள் கருதிய நிலையில் லேசான தூறலுடன் மழை நின்று போனது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 46.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 0.7, ஏற்காடு 8.6, ஆனைமடுவு 1, ஆத்தூர் 7, ஏத்தாப்பூர் 10, கரியகோவில் 1, மேட்டூர் 14 மி.மீ., டேனீஸ்பேட்டை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 91.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • கவர்னருடன் அவரது மனைவி மற்றும் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.
    • கவர்னரின் திடீர் டெல்லி பயணத்திற்கு காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு ஏர்-இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். கவர்னருடன் அவரது மனைவி மற்றும் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.

    கவர்னர் 4 நாள் பயணமாக, டெல்லி சென்று உள்ளதால், வருகின்ற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகிறார்.

    கவர்னரின் இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவர் வழக்கமாக டெல்லி செல்லும் பயணம்தான் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனாலும், 4 நாட்கள் பயணமாக திடீரென டெல்லி சென்றுள்ள கவர்னர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னரின் 4 நாட்கள் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×