என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மரக்காணம்:
மரக்காணம் சால்ட் ரோட்டில் வசிப்பவர் அஸ்கர் அலி (51). இவர் மரக்காணம் புதுவை சாலையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு அஸ்கர் அலி வழக்கம் போல் தனது பாத்திரக் கடையை மூடிவிட்டு தனக்கு சொந்தமான விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்க சென்றார்.
இந்நிலையில் இன்று காலையில் எழுந்து அஸ்கர் அலி வெளியில் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை பார்த்து உள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.
இதனைப்பார்த்து அஸ்கர் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அஸ்கர் அலி மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மர்ம நபரை கண்டுபிடிக்க அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் ராஜா (வயது60). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மருமகன், பேத்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு ராஜா தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென மர்ம நபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கினர்.
அப்போது ராஜா வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த கோவிந்தம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி கொடு இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். அவர் உயிருக்கு பயந்து உடனே தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை கழட்டி கொடுத்தார். பின்னர் அங்கு பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்களை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்தில் ஈரோட்டில் முதிய தம்பதியரை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதன்மைத் தேர்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது.
- 13வது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.
இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர்கள், இளநிலை கணக்காளர் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன.
அதன்படி, குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். தொடர்ந்து, முதன்மைத் தேர்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து 13வது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் 53 வேலை நாட்களில் தேர்வாணையத்தில் விரைவாக வெளியிட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
- பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
- உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன்.
கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.
கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன்.
உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- விபத்தில் மேலும் பல மாடுகளின் கால்கள் முறிந்து காயம் ஏற்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கிடை அமர்த்தி வந்தார்.
இந்த நிலையில் மாடுகளை வேறு ஒரு விளைநிலத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்காக ஓட்டிச் சென்றார். அப்போது தேனி-திண்டுக்கல் புறவழிச்சாலையில் சாலையை கடந்து கொண்டிருந்த மாடுகள் மீது அவ்வழியாக வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் 15 மாடுகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தன.
பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் மோதி பலியாகி சாலையில் கிடந்த மாடுகளை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த விபத்தில் மேலும் பல மாடுகளின் கால்கள் முறிந்து காயம் ஏற்பட்டன. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.
- தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார்.
பெரியகுளம்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளம் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை பெரியகுளத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பவர் ஓட்டிச் சென்றார்.
வத்தலக்குண்டு சாலையில் தேவதானப்பட்டி அருகே வேல்நகரில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் அந்த கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனையடுத்து லட்சுமணன் காரை நிறுத்தியபோது கற்களை வீசிய நபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பிரசாந்த் (30) என்பவர் தான் கல்வீசி தாக்கியது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மறுத்து மீண்டும் கால அவகாசம் கேட்டார்.
- நீதிபதி, ஏற்கனவே கடந்த எட்டாம் தேதி கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று கூறினார்.
திருச்சி:
திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் வருண்குமார். இவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தன்னையும் தனது குடும்பத்தையும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நான்காவது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஐ.ஜி. கோர்ட்டில் ஆஜரானார். சீமான் ஆஜராகவில்லை.
பின்னர் டி.ஐ.ஜி தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், ஏற்கனவே டி.ஐ.ஜி. கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலான விளக்கத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் நேரில் அளித்தார்.
அப்போது, மனுதாரரை (டி.ஐ.ஜி. யை) எதிர்தரப்பினர் பிறப்பு வெறுப்பு ஏற்படும் வகையில் பேசியதாகவும், இதனால் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இன்று சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மறுத்து மீண்டும் கால அவகாசம் கேட்டார்.
அப்போது நீதிபதி ஏற்கனவே கடந்த எட்டாம் தேதி கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது நீங்கள் வாதத்தை முன்வைக்கவில்லை.
வருகிற 21-ந் தேதி அடுத்த விசாரணை நடைபெறும். அன்று சீமான் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறினார்.
அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் டி.ஐ.ஜி. தரப்பு வழக்கறிஞர் ஆஜரான நேரத்தில் சீமான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாமல் தாமதம் செய்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிறிது நேரம் நீதிபதி அவகாசம் அளித்தார்.
- ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.வும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.
- கட்சி சார்பற்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக வரலாற்றில், உலகின் பல இடங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகளில் 2009-ம் ஆண்டில் இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத அரசு உலக வல்லரசு நாடுகளிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு முப்படைகளையும் ஏவி கோரமான தமிழீழ இனப்படுகொலை நடத்தியது. அதில் தமிழர்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைக்கும்போதே நமது நெஞ்சம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
தற்போது தமிழர் தாயகத்தில் 90 ஆயிரம் இளம் விதவைகள் இருக்கிறார்கள். ஐ.நா. சபை தலைவராக இருந்த பான் கி மூன், இலங்கைத் தீவில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய ஆராய மார்சுகி தாரீஸ்மென் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சார்பில் அனுப்பினார். அந்தக் குழுவினர் தங்களது அறிக்கையில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரமாயிரம் இளம்பெண்கள், தாய்மார்கள் பாலியல் கொடுமைகளால் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு முன்வரவில்லை என்பதோடு, தமிழர்களை அழிப்பதற்கு ஆயுத உதவி செய்தது. தமிழகத்தில் ஈழ உணர்வுள்ள மக்கள் அனைவரும் கொந்தளித்தனர்.
மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆண்டு தோறும் சென்னை கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி, மடிந்த ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி சுடர் ஏற்றும் கடமையைச் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.வும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.
இந்த ஆண்டும் வரும் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி சுடர்களை ஏந்தி வீரத்தியாகிகளான ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி புகழ் வணக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
தமிழ் உணர்வாளர்களும், ஈழத் தமிழ் பற்றாளர்களும், ம.தி.மு.க. கண்மணிகளும் 18-ந்தேதி மாலை 4 மணிக்கெல்லாம் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வருவதற்கும், கட்சி சார்பற்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த கொலையில் கூட குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை.
- பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு மூலம் தி.மு.க அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்.
ஈரோடு:
ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் பஹல்காமில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
இந்த சமயத்தில் இந்தியா உறைந்து போய் இருந்த நிலையில் மத்திய அரசு ராஜதந்திர செயல்பாடு மூலம் முப்படை வீரர்கள் தேச பற்று அடிப்படையில் ஆபரேஷன் சிந்தூர் போரை தொடுத்து வெற்றி நிலை நிறுத்தி நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பு நம்பிக்கை கொடுத்து உள்ளது.
சிந்தூர் போர் வெற்றி அடிப்படை மூலம் இந்திய வலிமை உலகம் போற்றும் வகையில் உள்ளது. இந்தியாவிடம் தீவிரவாத தலைதூக்க நினைத்தால் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஆபரேஷன் சிந்தூர் காண்பித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை, முப்படை, ராணுவம் என ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தவறான பாதையை மகளிர் இடம் கடைப்பிடிக்கும் செயலுக்கான தண்டனையாக இருக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு எடுத்து காட்டி உள்ளது. சட்டம் படிப்படியாக தன் நடவடிக்கைகள் செய்து இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக இழப்பீடு தொகை கொடுத்து இருக்கலாம். பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு மூலம் தி.மு.க அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். ஆதாயம் தேட வேண்டிய விஷயம் இது இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவம் தொடர் கதையாக இருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த கொலையில் கூட குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை, பண்ணை வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து கொள்ளையடிப்பது தற்போது வழக்கமாக உள்ளது. இதுபோன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. திருப்பூரில் நிகழ்ந்த 3 பேர் கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை பிடிக்கவில்லை.
தமிழகத்தில் பல கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிக்கவில்லை என்பதால் சி.பி.ஐ தலையிட வேண்டி உள்ளது. சிவகிரி இரட்டை கொலை வழக்கு உட்பட ஒரு வருடத்தில் கொலை, கொள்ளை வழக்கை எடுத்து கொண்டால் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கொலை உட்பட பல்வேறு கொலை சம்பவத்திற்கு விடை தெரியாத நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காவல்துறை உண்மை குற்றவாளிகளை பிடிக்க திணறுகிறது. இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சிறிய காலக்கெடுவுக்குள் உண்மை நிலையை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை என்பது அவசியமாகும்.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கிறது. தமிழகத்தில் முதல் பெரிய கட்சி அ.தி.மு.க. இந்தியாவின் முதல் பெரிய கட்சி பா.ஜ.க. தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரு கட்சிகளோடு கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கூட்டணியின் முதன்மைக் கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் செல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் அணியே வெற்றி அணி. அதில் மாற்று கருத்து இல்லை. முதல் அணியோடு வெற்றி அணியோடு இணைந்து வெற்றி பெறக்கூடிய சூழலை ஒத்த கருத்துகள் உடைய கட்சிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள்.
கூட்டணியை பொறுத்தவரை வரும் நாட்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். எங்களோடு இணைந்து செயல்படக்கூடிய ஆதரவு, நிச்சயமாக நல்ல ஆதரவாக அமையும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளேன் என்பது என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டது.
அதை தாண்டி மற்ற கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இருக்கிறதா என்பதை அ.தி.மு.க. -பா.ஜ.க. தலைமை இணைந்து செயல்படும் போது எடுக்கும் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜய குமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கடந்த ஆண்டை விடை இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
- தமிழ்நாடு முன்னாள் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பதவி விரைவில் கொடுப்பார்கள்.
திருச்சி:
பா.ஜ.க. சார்பில் பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பேரணி இன்று மாலை திருச்சியில் நடக்கிறது. ஊர்வலம் வழி விடு வேல்முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேஜர் சரவணன் ரவுண்டானாவில் முடிகிறது.
பேரணி முடிவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் திருச்சி வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சி கொலை வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, மது பழக்க வழக்கம், பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை விடை இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது பழக்க வழக்கம் தான். தமிழ்நாடு அரசு குற்ற சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.
கொடநாடு கொலை வழக்கில் எங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எங்களது எண்ணம். சென்னையில் நடைபெற்ற பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று நடைபெறும் பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க. கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். அனைவரும் தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும்.
தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேசுவோம். தமிழ்நாடு முன்னாள் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பதவி விரைவில் கொடுப்பார்கள்.
இவ்வாறூ அவர் கூறினார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டி முத்து, புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் கவுதம் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் அழகேசன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் சங்கர், கூட்டுறவு பிரிவு எம்பயர் கணேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், எம்.ஆர்.கோபிநாதன், மாவட்ட செயலாளர் சதீஷ், உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ், ஜி.டி. தினகர், கற்பகம் அரிசி மண்டி குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.
18-ந்தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதிய வேளையில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.
- சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
- தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் காலையில் இருந்து கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. மாலை, வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று இடி, மின்னலுடன் திடீர் கனமழை பெய்தது.
இந்தநிலையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், நேற்றும் மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் விளம்பர பலகைகள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. பலத்த காற்று வீசத் துவங்கி, சில நிமிடத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகள், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. திடீர் மழையால் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதேபோல் தருமபுரி நகரில் மாலை சூறை காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவி வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
இரண்டாவது நாளாக நேற்று மாலை ஊத்தங்கரை பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
காற்றுடன் பெய்த மழையால் ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முறிந்து சாலையில் விழுந்தது. ஊத்தங்கரை, கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, சாமல் பட்டி உட்பட பல்வேறு பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






