என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் கொலை, கொள்ளை தொடர் சம்பவமாக நடந்து வருகிறது- ஜி.கே.வாசன்
    X

    தமிழகத்தில் கொலை, கொள்ளை தொடர் சம்பவமாக நடந்து வருகிறது- ஜி.கே.வாசன்

    • ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த கொலையில் கூட குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை.
    • பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு மூலம் தி.மு.க அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீர் பஹல்காமில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

    இந்த சமயத்தில் இந்தியா உறைந்து போய் இருந்த நிலையில் மத்திய அரசு ராஜதந்திர செயல்பாடு மூலம் முப்படை வீரர்கள் தேச பற்று அடிப்படையில் ஆபரேஷன் சிந்தூர் போரை தொடுத்து வெற்றி நிலை நிறுத்தி நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பு நம்பிக்கை கொடுத்து உள்ளது.

    சிந்தூர் போர் வெற்றி அடிப்படை மூலம் இந்திய வலிமை உலகம் போற்றும் வகையில் உள்ளது. இந்தியாவிடம் தீவிரவாத தலைதூக்க நினைத்தால் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஆபரேஷன் சிந்தூர் காண்பித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை, முப்படை, ராணுவம் என ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தவறான பாதையை மகளிர் இடம் கடைப்பிடிக்கும் செயலுக்கான தண்டனையாக இருக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு எடுத்து காட்டி உள்ளது. சட்டம் படிப்படியாக தன் நடவடிக்கைகள் செய்து இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக இழப்பீடு தொகை கொடுத்து இருக்கலாம். பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு மூலம் தி.மு.க அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். ஆதாயம் தேட வேண்டிய விஷயம் இது இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவம் தொடர் கதையாக இருக்கிறது.

    ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த கொலையில் கூட குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை, பண்ணை வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து கொள்ளையடிப்பது தற்போது வழக்கமாக உள்ளது. இதுபோன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. திருப்பூரில் நிகழ்ந்த 3 பேர் கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை பிடிக்கவில்லை.

    தமிழகத்தில் பல கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிக்கவில்லை என்பதால் சி.பி.ஐ தலையிட வேண்டி உள்ளது. சிவகிரி இரட்டை கொலை வழக்கு உட்பட ஒரு வருடத்தில் கொலை, கொள்ளை வழக்கை எடுத்து கொண்டால் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கொலை உட்பட பல்வேறு கொலை சம்பவத்திற்கு விடை தெரியாத நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    காவல்துறை உண்மை குற்றவாளிகளை பிடிக்க திணறுகிறது. இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சிறிய காலக்கெடுவுக்குள் உண்மை நிலையை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை என்பது அவசியமாகும்.

    தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கிறது. தமிழகத்தில் முதல் பெரிய கட்சி அ.தி.மு.க. இந்தியாவின் முதல் பெரிய கட்சி பா.ஜ.க. தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரு கட்சிகளோடு கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து கூட்டணியின் முதன்மைக் கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் செல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் அணியே வெற்றி அணி. அதில் மாற்று கருத்து இல்லை. முதல் அணியோடு வெற்றி அணியோடு இணைந்து வெற்றி பெறக்கூடிய சூழலை ஒத்த கருத்துகள் உடைய கட்சிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள்.

    கூட்டணியை பொறுத்தவரை வரும் நாட்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். எங்களோடு இணைந்து செயல்படக்கூடிய ஆதரவு, நிச்சயமாக நல்ல ஆதரவாக அமையும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளேன் என்பது என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டது.

    அதை தாண்டி மற்ற கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இருக்கிறதா என்பதை அ.தி.மு.க. -பா.ஜ.க. தலைமை இணைந்து செயல்படும் போது எடுக்கும் முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜய குமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×