என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இலங்கை தமிழர் இனப்படுகொலைக்கு 18-ந்தேதி நினைவு அஞ்சலி: ஈழத்தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க வைகோ அழைப்பு
- ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.வும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.
- கட்சி சார்பற்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக வரலாற்றில், உலகின் பல இடங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகளில் 2009-ம் ஆண்டில் இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத அரசு உலக வல்லரசு நாடுகளிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு முப்படைகளையும் ஏவி கோரமான தமிழீழ இனப்படுகொலை நடத்தியது. அதில் தமிழர்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைக்கும்போதே நமது நெஞ்சம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
தற்போது தமிழர் தாயகத்தில் 90 ஆயிரம் இளம் விதவைகள் இருக்கிறார்கள். ஐ.நா. சபை தலைவராக இருந்த பான் கி மூன், இலங்கைத் தீவில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய ஆராய மார்சுகி தாரீஸ்மென் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சார்பில் அனுப்பினார். அந்தக் குழுவினர் தங்களது அறிக்கையில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரமாயிரம் இளம்பெண்கள், தாய்மார்கள் பாலியல் கொடுமைகளால் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு முன்வரவில்லை என்பதோடு, தமிழர்களை அழிப்பதற்கு ஆயுத உதவி செய்தது. தமிழகத்தில் ஈழ உணர்வுள்ள மக்கள் அனைவரும் கொந்தளித்தனர்.
மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆண்டு தோறும் சென்னை கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி, மடிந்த ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி சுடர் ஏற்றும் கடமையைச் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.வும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.
இந்த ஆண்டும் வரும் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி சுடர்களை ஏந்தி வீரத்தியாகிகளான ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி புகழ் வணக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
தமிழ் உணர்வாளர்களும், ஈழத் தமிழ் பற்றாளர்களும், ம.தி.மு.க. கண்மணிகளும் 18-ந்தேதி மாலை 4 மணிக்கெல்லாம் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வருவதற்கும், கட்சி சார்பற்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






