என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளக்காதல் தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்
    X

    கொலை செய்யப்பட்ட பாரதி, ராஜேஸ்வரி, அண்ணாமலை.

    கள்ளக்காதல் தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

    • கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
    • கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை பழைய ரேசன் கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகள் புவனேஷ்வரி (26)-க்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

    பாலுவின் வீட்டின் எதிரில் அவருடைய உறவினர் விஜய் (26) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். புவனேஸ்வரிக்கும், விஜய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி கணவரை பிரிந்து கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்தார். மேலும் அவர் கர்ப்பமானார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் பாலுவுக்கு குடிப்பழக்கம் அதிகரித்தது. தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மனைவி இல்லாமல் தவித்தார் .

    நேற்று இரவு அவர் அதிக அளவில் மது குடித்ததாக தெரிகிறது. இதனைதொடர்ந்து கீழ் புதுப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பாலுவின் மாமியார் பாரதி (45) தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலு கத்தியால் அவருடைய மாமியாரை வெட்ட முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி அவரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். பாலு அவரை விரட்டி சென்று தலை மற்றும் பின்பக்க கழுத்து ஆகிய இடங்களில் மாறி மாறி வெட்டினார். இதில் பாரதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதனைக் கண்ட பாலு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பாலுவுக்கு ஆத்திரம் தீரவில்லை. மனைவியின் பிரிவுக்கு காரணமான விஜயையும் வெட்டிக்கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதனையடுத்து புதுப்பேட்டையில் இருந்து அவருடைய சொந்த ஊரான புதுக்குடியானூர் கிராமத்திற்கு வந்தார்.

    அப்போது வாலிபர் விஜய் வீட்டில் இல்லை. அவர்கள் அதன் அருகில் ஒரு புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார்கள். அங்கு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பாலு அங்கு விஜயை தேடி சென்றார்.

    அப்போது விஜயின் தந்தை அண்ணாமலை (60) அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் அடைந்த பாலு இரும்பு கம்பியை எடுத்து அண்ணாமலையின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அண்ணாமலையின் மனைவி ராஜேஸ்வரி (55) வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாலு அவரையும் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்தார்.

    ஒரே நாளில் மாமியார் மற்றும் உறவினர் 2 பேரை கொலை செய்த பாலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா மற்றும் கொண்டபாளையம் போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை வாலாஜா போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலு கீழே விழுந்தார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    போலீசார் அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் பாலுவை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×