என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்றது.
- மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கையான வனப்பகுதிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்றது.
கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.
கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவில் தாவரவியல் பூங்கா வண்ணமயமாக ஜொலித்தது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சோழ மன்னர்களின் சிறப்பை பிரதிபலிக்கும் விதமாக 2 லட்சம் வண்ண வண்ண கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் அரண்மனை, அரண்மனை நுழைவு வாயில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதுதவிர 7 லட்சம் கார்னேசன் மலர்கள், ரோஜாக்கள், கிராசந்திமம் உள்ளிட்ட மலர்களை கொண்டு கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னப்பறவை ரதம் உள்ளிட்ட அலங்காரம் செய்து சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மேரிகோல்டு, சைக்ளோமென், பால்சம், பெட்டுனியா, பேன்சி, டெல்பினியம் உள்ளிட்ட 275 வகைகளில் 7 லட்சம் வண்ண வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு இருந்தது. இந்த செடிகளில் தற்போது பூக்கள் பூத்து குலுங்கியது.
இதுதவிர அலங்கார மாடங்கள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் வைக்கப்பட்டு, அதில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அவர்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை, யானை உள்ளிட்டவற்றை பார்த்து ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
பூங்காவில் பூத்து குலுங்கிய பல வண்ண வண்ண மலர்களையும் பார்த்து ரசித்து அதன்முன்பு நின்றும் செல்பி எடுத்தனர். சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதற்காக பூங்காவின் பல்வேறு பகுதிகளில் செல்பி பாயிண்டும் வைக்கப்பட்டிருந்தது.
அதில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். கண்காட்சியையொட்டி பூங்காவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் ஊட்டிக்கு இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு களிக்கும் வகையில் சர்க்கியூட் பஸ்களும் இயக்கப்பட்டது. இதில் பயணித்து சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.






