என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜெயலலிதா கை காட்டாவிட்டால் ரகுபதி எங்கு இருந்திருப்பார்?- செல்லூர் ராஜூ கண்டனம்
    X

    ஜெயலலிதா கை காட்டாவிட்டால் ரகுபதி எங்கு இருந்திருப்பார்?- செல்லூர் ராஜூ கண்டனம்

    • தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.
    • நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், கடந்த 4 ஆண்டுகள் ரகுபதி, முட்டுக்கொடுத்து கொடுத்து அ.தி.மு.க. தொண்டர்களிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போதுதான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் விதமாக, அமைச்சர் இலாகா கொடுத்துள்ளார் முதலமைச்சர். அந்த உற்சாகத்தில் பலத்த முட்டுகளுடன் நேற்று, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    யார் இந்த ரகுபதி? இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா கை காட்டவில்லை என்றால், அ.தி.மு.க. தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்? இவருக்கு அரசியல் வாழ்வளித்த அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியை விடக் கேவலமானவர் தானே இந்த ரகுபதி?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உத்தரவிட்டார் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கும் தி.மு.க.-வுக்கும் சம்மந்தமே இல்லை என்று பச்சைப் பொய் பேசியவர் தானே இந்த ரகுபதி? இந்த ரகுபதியின் பொய்யால் சட்டப் பேரவையில் ஸ்டாலினே, ஞானசேகரன் தி.மு.க. பொறுப்பாளர் அல்ல, அனுதாபி என உருட்ட வேண்டிய நிலைக்குத் தானே தள்ளப்பட்டார்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர். லீக் ஆனதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் அரசின் நடவடிக்கைகளை காரித் துப்பியதே, இதெல்லாம் மறந்துபோச்சா ரகுபதி? உங்கள் முதலமைச்சரை போன்றே, உங்களுக்கும் ஞாபக மறதியா?

    கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து, சார்ஜ் சீட் போட்டது அ.தி.மு.க. அரசு. கேரளா குற்றவாளிகளுக்கு வாதாடி ஜாமின்தாரராக இருந்தது தி.மு.க.வினர்.

    கொடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று தானே, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்? நான்கு ஆண்டுகளாக கொடநாடு வழக்கை விசாரித்து முடிக்க வக்கில்லாத ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை?

    முக்கி முக்கி வராத நிதி, எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்?

    அ.தி.மு.க.வால் அரசியல் அடையாளம் பெற்று, அ.தி.மு.க.வில் கொள்ளையடிப்பவர்களுக்கு இடமில்லை என்று தெரிந்ததும், தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.

    மக்களோடு மக்களாக நின்று, மக்களுக்கான அரசியலைச் செய்யும், எடப்பாடி பழனிசாமி மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

    நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.

    1991-ல் சட்டமன்ற உறுப்பினரானபோது ரகுபதியின் சொத்து மதிப்பு என்ன? அதே ரகுபதியின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? பினாமி பெயர்களில் எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? இப்படி எண்ணிலடங்கா சொத்துக்களை வாரிக் குவித்த ரகுபதி தான், நாளை காலை ரெய்டு வந்துவிடுமோ? என்ற பயத்திலேயே தினந்தோறும் இரவுகளைக் கழிக்க வேண்டும்.

    அறிவாலயத்தில், மேலே ரெய்டுக்கு பயந்து, கீழே கட்சியை காங்கிரசுக்கு அடமானம் வைத்த கொத்தடிமைகள், மாநில உரிமைகள் பற்றி பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×