என் மலர்
உள்ளூர் செய்திகள்
- யார் அந்த தியாகி என்று கேட்டோம்... தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
- இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
2-வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்!
-இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்?
-தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் இந்த ரெய்டு பற்றி ஏன் பேச மறுக்கிறார்?
-ரத்தீஷ் எங்கே இருக்கிறார்? துபாய் சென்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரத்தீஷ்?
-முதல்வராலும், அவரது மகனாலும் "தம்பி" என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் "Job Description" என்ன?
யார் அந்த SIR என்று கேட்டோம்- பதில் வரவில்லை.
யார் அந்த தியாகி என்று கேட்டோம்... தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?
இந்த தம்பி கைதாகும் போது, தம்பியின் வசம் உள்ள திமுக-வின் குடுமி சிக்கும்! அப்போது பேசித் தானே ஆக வேண்டும்
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு.
- உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.
ஆட்டோ அப்கிரேடஷன் முறையில் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் கலுகையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதி இல்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரெயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.
- யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
- காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரைப்பள்ளம் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.
சாலையை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,
தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது.
கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது ஆசனூர் வனப்பகுதியில் காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.
எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
- நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.
பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில், ஈடுபட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
அதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துரைக்க கனிமொழி தலைமையில் குழு ரஷ்யா, ஸ்பெயின் செல்ல உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.
ஒத்துழைப்பு நல்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தந்த பிரதமர் மோடி, அமைச்ர் உள்ளிட்டோருக்கு நன்றி.
நாட்டின் நலனை பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா?
- அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது.
தேசப்பற்று இல்லாவிடில் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நயினார் நாகேந்திரன் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது. இதனால் வெளிப்படையாகவே தொடர்ந்து வெறுப்பரசியல் பேசி வருகிறார். இதனால் அவருக்கான அடையாளத்தை நயினார் இழந்து விட்டார்.
1500 ஆண்டுகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த மனுஸ்மிருதியும், பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் இந்து ராஷ்ட்ரா முழக்கமும் தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம்.
பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு தங்கள் வயிற்று பிழைப்பை ஆற்றியவர்களின் வாரிசுகள், நாட்டுப்பற்று குறித்து பேசுவது, "சாத்தான் வேதம் ஓதும்" கதை. தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா?
சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவின் 80 சதவீதம் மக்களை மாடுகளாகக் கூட மதிக்காமல் மனுஸ்மிருதி என்னும் கொடிய நச்சுப்பாம்பை உலாவவிட்டு, பாமர மக்களின் இரத்ததை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோழைகளின் வழியை பின்பற்றுபவர்களுக்கு திடீர் மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் வருவது - Patriotism is the last refuge for a Scoundrel என்பதை தெளிவுபடுத்துகிறது.
பிரிட்டிஷாரின் கால்பாதம் தொட்டு தவழ்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தங்களின் கொள்கை மூதாதையர்கள் வழியில் வந்தவர்கள், இப்போது அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருச்சியில் வருகிற 31அம் தேதி பேரணி நடைபெற இருந்தது.
- மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என திருமாவளவன் அறிவிப்பு.
திருச்சியில் வருகிற 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"மதச்சார்பின்மை காப்போம்" என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
- மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிய இது ஒன்றும் மானங்கெட்ட அடிமை அதிமுக ஆட்சி அல்ல.
- தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு.
பொழுது விடிந்தால் திமுக அரசுக்கு எதிராக எந்த அவதூறைப் பரப்பலாம் எனப் பித்தாலாட்ட அரசியல் செய்யவதையே முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார் பித்தலாட்ட பழனிசாமி.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பதில் திராவிட மாடல் அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் எடுத்துவரும் நடவடிக்கைகளினால் பள்ளிக் கல்வியில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்திறனை அண்மையில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் சொல்லும்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்யும் திட்டங்களால் இன்றைக்கு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74 விழுக்காடாக உயர்ந்து வரலாற்றுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 விழுக்காட்டைத் தொட்டுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடனும் வயிற்றெரிச்சலுடனும் செயல்படும் தமிழர் விரோத ஒன்றிய அரசுக்கு எரிச்சலூட்டுவதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய 2152 கோடி ரூபாயை ஒதுக்குவோம் என மிரட்டியது ஒன்றிய அரசு. மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிய இது ஒன்றும் மானங்கெட்ட அடிமை அதிமுக ஆட்சி அல்ல. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு. அந்தத் தொகையையும் மாநில அரசே ஏற்கும் என அறிவித்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காத்து நின்றது.
தமிழ்நாட்டிற்கு எப்படியாவது நெருக்கடியைத் தந்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி கனவை சிதைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை தராமல் இழுத்தடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இது குறித்துப் பல்வேறு நிலைகளில் வலியுறுத்திய போதும் தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் அளித்துள்ள போதும் அமைதிக்காத்து தனது தமிழ்நாட்டிற்கு எதிரான தனது சதியை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ஆதிக்கத்தைக் கேள்வி கேட்க துப்பில்லாத பாஜகவின் எடுபிடி எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு அரசைக் குற்றம் சுமத்தி அவதூறு பேசியிருக்கிறார்.
தரங்கெட்ட தறுதலை மொழியில் பச்சைப் பொய்களை அறிக்கையாக வெளியிட்டால் அவை உண்மையாகிவிடாது என்பதை அறியாமல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் எனும் பொறுப்பிற்குக் கொஞ்சமும் தகுதியற்ற முறையில் பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் தொடைநடுங்கி பழனிசாமி.
முதலமைச்சரின் தலைமையில் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு வரலாற்றில் இல்லாத வகையில் நிதியை ஒதுக்கி சாதனைப் படைத்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்குரிய கல்விநிதியை ஒதுக்காமல் மாணவர்களின் கல்வி உரிமையைச் சிதைக்கத் துடிக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் கேள்விக் கேட்க முடியாமல் தொடைநடுங்கிக் கிடக்கும் துரோகி. பழனிசாமிக்குத் துணிவிருந்தால், உண்மையில் மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் ஒன்றிய அரசை நோக்கி கேள்வி கேட்கட்டும்.
"அமைச்சர் பெயர் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம்!" எனத் தனது ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பெயர் கூடத் தெரியாமல்தான் விளையாட்டுத் துறை செயல்பட்டது என ஒத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இன்றைக்கு விளையாட்டுத் துறையில் இந்தியாவை அல்ல உலகத்தையே ஈர்க்கிற வகையில் புகழ்பெற்றிருக்கிறது தமிழ்நாடு. இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 2021-2022 ஆம் ஆண்டில் 225.62 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்ட நிதி ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து நடப்பு ஆண்டிற்கு 572 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை வலுவாக்கி தமிழ்நாட்டு இளைஞர்களின் திறனை உலகத் தரத்திற்கு வளர்த்து வருகிறது திராவிட மாடல் அரசு.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு, இந்தத் திட்டத்தில் பயன்பெறுகிற பயனாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலகளவில் பல்வேறு பதக்கங்களை ஆண்டுதோறும் வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால் மாண்புமிகு துணை முதலமைச்சரின் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் உயர்தரத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளும்தான் காரணம்.
இன்றைக்கு உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள மாநிலமாகத் தமிழ்நாடே விளங்குகிறது.
இச்சாதனைகளால்தான் இந்திய தொழில் கூட்டமைப்புச் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாமல் சீர்கெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி விளையாட்டு மேம்பாட்டுத் துறையைப் பற்றியெல்லாம் பேசலாமா?
தனது ஆட்சியையே தமிழ்நாட்டு உரிமைகளைப் பாஜகவிடம் அடகு வைக்கும் அடிமை விளையாட்டாக நடத்திய துரோகி பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது.
பாஜகவின் அடிமைகளிலேயே தான் தான் சிறந்த அடிமை எனக் காட்டுவதற்காகப் பழனிசாமி நடத்தும் இந்தக் கோமாளித் தனங்களைக் கேலிக் கூத்துகளாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் மற்றுமொரு படுதோல்வியைப் பரிசாகத் தந்து பழனிசாமியின் பித்தலாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் காத்திருக்கிறார்கள்.
- திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
- மின்தடை ஏற்பட்டு தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 4ம் தேதி நடைபெற்றது.
நீட் தேர்வின்போது மின்தடை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
மின்தடை காரணமாக குறைந்த வெளிச்சம், மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் மாற்று இடத்திற்கு சென்றதால் சிரமம் ஏற்பட்டது என்றும் இதனால் முழுமையாக நீட் தேர்வை எழுத முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மே மாதம் 4ம் தேதி அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து 4.15 வரை மின்தடை ஏற்பட்டு தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு கோரிய மனு குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு) முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார்.
- பலத்த காயங்களுடன் தந்தை சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பாடி மேம்பாலம் அருகே லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கீழே விழுந்தனர்.
இதில், பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தை கரோலின் பலியான நிலையில், தந்தை சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
- பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் கூட்டத்திற்கு வந்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பா.மக. மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பல்வேறு கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸ் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவது எப்படி என பா.ம.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன் என்றார். இந்த கூட்டத்தில் பா.மக. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.மக. எம்.எல்ஏ. சேலம் அருள், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் போன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து டாக்டர் ராமதாசிடம் கேட்ட போது, அவருக்கு அழைப்பு கொடுத்துள்ளோம். வரலாம். வந்து கொண்டிருக்கலாம் என பதில் அளித்தார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் பா.ம.க. மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இக்கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் வந்தனர். மேலும் விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் நின்ற மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தவுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 2026 சட்ட மன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
- டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.
- அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.
சென்னை:
வீட்டு வசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறு வனத்தின் தலைமை அலு வலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.
இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடை பெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.
இந்த சோதனைகளின்போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.
பல அமலாக்கத்துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைபட்டி- சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே வீரர்கள், காளைகள் தேர்வு நடைபெற்ற நிலையில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என ரத்து செய்யப்பட்டது. மீண்டும் போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி இன்று காலை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 700 காளைகளும், 300 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளி தாவி சென்றன.
காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. கட்டில், சேர், அண்டா, டைனிங் டேபிள், பேன், வேஷ்டிகள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
போட்டியை காண திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்ததால் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.






