என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நத்தம் சொறிப்பாறைப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
    X

    நத்தம் சொறிப்பாறைப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்

    • காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைபட்டி- சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே வீரர்கள், காளைகள் தேர்வு நடைபெற்ற நிலையில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என ரத்து செய்யப்பட்டது. மீண்டும் போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 700 காளைகளும், 300 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    மேலும் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளி தாவி சென்றன.

    காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. கட்டில், சேர், அண்டா, டைனிங் டேபிள், பேன், வேஷ்டிகள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    போட்டியை காண திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்ததால் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    Next Story
    ×