என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
- சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக புறநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும், அவர்களை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, அந்தியூர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 100 -க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறியதாவது:- அந்தியூர் காலனியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், அந்தியூர் காலனி பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
அப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மருந்து தெளிக்கப்பட் டுள்ளது. அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
- கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது.
இந்த சூழலில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து ரத்தீஸ் தலைமறைவாகி விட்டார்.
சென்னை:
தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம், 'டாஸ்மாக்' அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியது.
அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை களத்தில் இறங்கி உள்ளனர்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'டாஸ்மாக்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டின் அருகே சாலையோரமாக சிதறி கிடந்த 'டாஸ்மாக்' மதுபான ஒப்பந்த நகல் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சோதனைக்கு மத்தியில், விசாகனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதே வேளையில் அவரது வீட்டில் விடிய விடிய அதிகாரிகள் சோதனை தொடர்ந்தது.
2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது. விசாகனை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக, சூளைமேடு பகுதியில் வசிக்கும் 'டாஸ்மாக்' மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன், பெசன்ட் நகர் கற்பகம் கார்டனில் வசிக்கும் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர்களான தியாகராயநகரை சேர்ந்த கேசவன், ராயப்பேட்டையை சேர்ந்த தேவகுமார், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாபு, குமரன் காலனியில் வசிக்கும் இந்திரஜித் ஆகியோரது வீடுகளும் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கியது.
இந்த இடங்களிலும் 2-வது நாளாக சோதனை நீடித்தது. இதில் மின்சார ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர் தேவகுமார் ஆகிய 2 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து குறுகிய காலத்தில் பட அதிபரான ஆகாஷ் பாஸ்கரனும் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையில் சிக்கினார். தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.
முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ரத்தீஸ் பெயரும் இந்த சோதனை பட்டியலில் இடம் பெற்றது. அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்த சென்றனர்.
அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் அவருடைய வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து ரத்தீஸ் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்து பூட்டி, சாவியை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
- மீரான்குளம் சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றுக்குள் கார் பாய்ந்த கோர விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.
விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் இன்று நேற்று மாலை கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்ததில் 5 நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
- நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன் .
என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள் .
நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் வேன் இழுத்துச் சென்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 8 பேருடன் 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆம்னி வேனில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சென்றுக்கொண்டிருந்தபோது, சாலையோரம் கிணறு இருப்பது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்தது.
வேன் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த வேனில் 8 பேர் பயணித்ததாகவும், அவர்கள் காருக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் 3 பேர் தண்ணீரில் நீந்தி தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதில், கிணற்றுக்குள் சிக்கியுள்ள 5 பேரின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாக இருந்து வந்தது.
கிரேன் கொண்டு மீட்கும் முயற்சி செய்து வந்த நிலையில், ஸ்கூபா டைவிக் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர், 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது.
இதில், வேனில் சிக்கியிருந்த 5 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மீட்புப் பணி நடைபெற்ற இடத்திற்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்துள்ளார்.
- ஆம்னி பேருந்தில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை.
கரூர் செம்மடை நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் அதில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமம் பரணி பார்க் பள்ளியின் கிழக்குப் பக்கம், நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை, சின்ன வடுகப்பட்டி அருகில் இன்று (17.5.2025) காலை சுமார் 5.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று முன்னாள் சென்ற டிராக்டர் ஒன்றின் மீது மோதி பின்னர் எதிர் சாலையில் கோவில்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த மேக்ஸி கேப் வாகனம் ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேக்ஸி கேப் வாகனத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 52) அருண் திருப்பதி (வயது 45) , செல்வன்.காமாட்சி அஸ்வின் (வயது 10), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.எழில் தஷனா (வயது 12) ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.ஹேமவர்ஷினி (வயது 20) சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல், இன்னார்தான் படிக்க வேண்டும் என்பது ஆரிய பாஜக மாடல்.
- மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை- 2020 எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"
நாட்டில் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் காவி மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
புதிய தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை தமிழ்நாட்டை நாசப்படுத்திட அனுமதிக்க மாட்டோம். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை புதிய தேசிய கல்விக் கொள்கையால் நாசப்படுத்திட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து நிற்போம். எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல், இன்னார்தான் படிக்க வேண்டும் என்பது ஆரிய பாஜக மாடல்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை சிதைத்து விடும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான போராட்டம் தொடரும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ரூ.2,158 கோடியை தராமல் மத்திய அரசு அடம்பிடிக்கிறது. நாட்டிற்கே வழிகாட்டியாக இந்த விஷயத்திலும் உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம்.
இது புத்தக வெளியீட்டு விழா என்பதை விடவும் உரிமைக்குரல் எழுப்பும் விழா என்பதே சரியாக இருக்கும். மதயானை நூலாசிரியர் அன்பில் மகேஷை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
தேசிய கல்விக்கொள்கையின் பாதிப்புகள் என்ன என்பது மதயானை நூலில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி, சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மறுப்பு.
- பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தரமணி- திருவான்மியூர் சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில், வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவில் நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது ஏற்பட்ட பள்ளம் நடைபெறும் இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு தான் உள்ளது. அதனால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மெட்ரோ ரெயில் பணி காரணம் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ‘தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை- 2020 எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எல்லாவற்றிலும் சாதக பாதகம் இருக்கும். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் பாதகம் மட்டுமே உள்ளது.
கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் நாடு, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்.
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானையை வீழ்த்த வேண்டும்.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று கூறுவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
தேசிய கல்விக்கொள்கை நமது மாணவர்களின் படிப்பை சீரழிக்கும் திட்டம்.
எத்தனையோ சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடி தமிழ்நாடு வென்றுள்ளது. அந்த வரிசையில் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் சென்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 8 பேருடன் கிணற்றுக்குள் ஆம்னி கார் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஒரு குழந்தை உள்பட 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் சென்றுள்ளது.
இந்த காரில் 8 பேர் பயணித்ததாகவும், அவர்கள் காருக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் 3 பேர் தண்ணீரில் நீந்தி தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கிணற்றுக்குள் சிக்கியுள்ள 5 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் இல்லை. அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






