என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
    • நேபாள தம்பதியிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.

    சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் மகேஷ்குமார் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் வேலை பார்த்த நேபாள தம்பதி மாயமாகி இருந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    மகேஷ்குமார் அளித்த புகாரையடுத்து அவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் கைவரிசை காட்டிய நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியை நீலாங்கரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு மாயமான நேபாளத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ், நிகிதாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    • ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்.
    • அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்...

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், தமிழகத்தில் சாலைகள், உள்கட்டமைப்பு சரியில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சேகர்பாபு, தமிழிசை பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர். அங்கு தள்ளாடின்னே இருந்தவர்களை பார்த்துட்டு கவர்னராக வந்தவங்க. அதனால அவங்க எது பார்த்தாலும் தள்ளாட்டமாவே தெரிகிறது.

    அன்பு சகோதரிக்கு மீடியா மேனியா. ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார். நீங்கள் நின்று கொண்டு இருக்கும் இந்த சாலை எப்படி தரமானதாக இருக்கிறது என்று நீங்கள் அவரிடம் அடுத்த முறை கேள்வி கேளுங்கள் என்றார்.

    இதனிடையே, திமுக துரோகி, காங்கிரஸ் எதிரின்னு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அவர் வசைபாடாத ஆள் யாராவது இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அவருக்கு தினந்தோறும் தான் மட்டும் தான் புத்தன். மற்றவர்கள் அத்தனை பேரும்... என் வாயால் சொல்லக்கூடாது. அவர் வசைபாடா ஆட்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்றார்.

    • மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.
    • 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!

    அயோத்திதாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:

    சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் 'திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு!

    சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.
    • மாணவர்களை நீட் என்ற ஒரு தேர்வு தொடர்ந்து பலி வாங்குவதை அனுமதிக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருந்த சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாணவர் கவுதமை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவர் கவுதம் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த முறையும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காமல் போய் விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு மாணவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதற்கு மாணவன் கவுதமின் தற்கொலை எடுத்துக்காட்டு ஆகும்.

    நீட் தேர்வுக்கு அஞ்சி நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, கடந்த மே 4-ஆம் தேதி கயல்விழி என 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது மாணவர் கவுதம் உயிர்நீத்திருக்கிறார். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடரும் நிலையில், அதற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை. நீட் எந்த நோக்கங்களுக்காக கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு கூறியதோ, அந்த நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை. நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண் எடுத்தவர்கள் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ஆனால், 500க்கும் கூடுதலான மதிப்பெண்கள் எடுத்திருந்தும் கூட லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கையை தகுதியை விட பணம் தான் தீர்மானிக்கிறது என்பது தான் நீட் தேர்வின் அறிமுகத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழலாகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும் நீட் தேர்வு தேவையா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

    இன்னொருபுறம் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி வசனம் பேசிய முதலமைச்சர், அதன் பின் 50 நாட்களாகப் போகும் நிலையில் சட்டப் போராட்டம் நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்கையும் தொடரவில்லை.

    மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களை நீட் என்ற ஒரு தேர்வு தொடர்ந்து பலி வாங்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் திறந்த மனதுடன் நீட் தேர்வின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • தவறு நடப்பதற்கு முன்பு வருமுன் காப்பது என்பது போல் தவறு நடக்காமல் நடவடிக்கை என்பது ஒருபுறம்.
    • தவறு நடந்துவிட்ட பிறகு அதன் கடுமையான நடவடிக்கை எடுப்பது என்பது இன்னொருபுறம்.

    சென்னை:

    "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" என்று அரக்கோண சம்பவத்தை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஏற்கனவே துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி என்றும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், ஆட்சியை பொறுத்தளவில் தவறு நடக்கின்ற பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம்சாட்ட வேண்டும். தவறு நடப்பதற்கு முன்பு வருமுன் காப்பது என்பது போல் தவறு நடக்காமல் நடவடிக்கை என்பது ஒருபுறம். தவறு நடந்துவிட்ட பிறகு அதன் கடுமையான நடவடிக்கை எடுப்பது என்பது இன்னொருபுறம். இன்னார், இனியவர் என்று எங்களுடைய முதலமைச்சருக்கு பாகுபாடு இல்லை.

    தவறு யார் இழைத்து இருந்தாலும் சொந்தக்கட்சிக்காரர் இழைத்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் முதல்வருடைய நோக்கம், நிலைப்பாடு. அந்த வகையில், மாநகராட்சியில் 2 மாமன்ற மாநகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகளோடு சண்டையிடுவது குறித்து அவருடைய கவனத்திற்கு சென்ற உடன் பதவியில் இருந்தே நீக்கிய ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சி. நீதியின் ஆட்சி. சட்டத்தின் ஆட்சி.

    கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி.. அதற்கு சாட்சி சாத்தான்குளம் சம்பவமே அதற்கு ஒரு சாட்சி என்றார். 

    • போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் இந்தியா முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகள், மற்றும் அமெரிக்க ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, ஆசியா நாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த தொழிலை நம்பி இந்தப்பகுதியில் நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    தற்போது ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு நெசவு செய்யும் தொழில் கூடங்களுக்கு கூலி உயர்வு வழங்காத நிலையில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழில் ஈடுபடக்கூடிய விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் இந்த தொழில் சார்ந்த மறைமுக தொழிலில் ஈடுபடக் கூடியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கி விசைத்தறி கூடங்களை இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும் என தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கும் ஏற்று மதியாளர் மற்றும் விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி கூட அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டால் மீண்டும் இப்பகுதியில் பேண்டேஜ் தொழில் புத்துயிர் பெறும் என சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.

    • தற்போது 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் மற்றும் கோடை விடுமுறை சீசன் காலம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை இருமடங்காக உயர்த்தி உள்ளது.

    இதனையடுத்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையில் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பொதிகை, குகன் மற்றும் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் மட்டுமே இந்த சேவையில் பயன்பட்டு வந்தன. ஆனால் தற்போது, விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கரையேற்றப்பட்டுள்ளதால், சில வாரங்களாக 2 படகுகள் மட்டுமே சேவையில் இருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு படகுகளான 'திருவள்ளுவர்' மற்றும் 'தாமிரபரணி' ஆகிய 2 படகுகளை வட்டக்கோட்டைக்கு இயக்குவதற்கு பதிலாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கி வருகிறது.

    மேலும் விவேகானந்த கேந்திரத்துக்கு சொந்தமான 'ஏகநாத்' படகும் ஒப்பந்த அடிப்படையில் கூட்டம் நெரிசலை பொறுத்து அவ்வப்போது விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது மொத்தம் 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முன்பு சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இப்போது சற்றே விரைவாக படகுகளில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேற்கொண்ட இந்த ஏற்பாடு சுற்றுலா துறையில் ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    • சமூக பொருளாதார மாற்றங்களையும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கையையும் பிரித்து பார்க்க முடியாது.
    • இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * நீதிபதி குரியன் குழு ஆய்வு, இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கை வெளியிடுக.

    * 69% இடஒதுக்கீட்டால் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.

    * சமூகநீதியின் பயன் குறித்த விவரத்தை முழுமையாக வெளியிடாமல் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஆய்வு செய்வது அர்த்தமற்றது.

    * சமூக பொருளாதார மாற்றங்களையும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கையையும் பிரித்து பார்க்க முடியாது.

    * இடஒதுக்கீட்டால் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது.
    • அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,683 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 108 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்துள்ளது.

    நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் வரிசையில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    திருவண்ணாமலை:

    கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.

    அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.

    இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.

    இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

    இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.

    • நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ராமபிரான் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
    • பல்பொருள் அங்காடியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

    விருதுநகர்:

    விருதுநகர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராமபிரான் (வயது 58). இவர் மதுரை சாலையில் சூப்பர் மார்க்கெட் வைத்து கடை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ராமபிரான் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    நள்ளிரவில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் உங்களுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராம பிரான் பதறியடித்துக் கொண்டு கடைக்கு விரைந்தார்.

    அங்கு சென்று பார்த்தபோது, கடையின் உள்பகுதி பற்றி எரிந்துகொண்டிருந்தது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். தீயின் தாக்கத்தால் அருகில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் கதவுகளை திறந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் பல்பொருள் அங்காடியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

    நள்ளிரவில் இடி, மின்னல் ஏற்பட்டதால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×