என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விருதுநகரில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
    X

    விருதுநகரில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

    • நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ராமபிரான் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
    • பல்பொருள் அங்காடியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

    விருதுநகர்:

    விருதுநகர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராமபிரான் (வயது 58). இவர் மதுரை சாலையில் சூப்பர் மார்க்கெட் வைத்து கடை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ராமபிரான் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    நள்ளிரவில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் உங்களுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராம பிரான் பதறியடித்துக் கொண்டு கடைக்கு விரைந்தார்.

    அங்கு சென்று பார்த்தபோது, கடையின் உள்பகுதி பற்றி எரிந்துகொண்டிருந்தது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். தீயின் தாக்கத்தால் அருகில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் கதவுகளை திறந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் பல்பொருள் அங்காடியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

    நள்ளிரவில் இடி, மின்னல் ஏற்பட்டதால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×