என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நிஷாலினி ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி (வயது 36). இவர் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதில் அவர் கடந்த 1998-ம் ஆண்டு இலங்கை கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு குடி பெயர்ந்துள்ளார்.

    அங்கு 2019-ம் ஆண்டு மேற்கண்ட திருமயம் முகவரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் நிஷாலினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரது இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எம்பலூர் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52), துபாய் செல்ல இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சேர்ந்த அப்துல் ரபீக்(49) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
    • தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

    போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

    எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.
    • திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவர்; சங்க காலத்தில் உதித்த சரித்திர நாயகர்; முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவராக போற்றப்படுபவர்; முது தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரியவர், பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.

    தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து அவை, காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் ஆற்றிய பணிகளை வரலாறு பதிவு செய்கிறது. கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.

    போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன.
    • அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன. அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கைலாசபுரம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் 63 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 392 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

    காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதி 1 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 51 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 527 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 152 திட்டப் பகுதிகளில் 5,946.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 52,397 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், 773.64 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3113 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், 841.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1447 அடுக்குமாடி குடியிருப்புகள், 56.31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1603 மனை மேம்பாட்டு திட்டம்,

    117.17 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 வணிக வளாகங்கள், 67.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 7 வாரிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு 10.88 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 கோட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாவட்டம், நெற்குன்றத்தில் 25 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 6-ல் 64 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 7-ல் 66 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் மதுரை மாவட்டம், தோப்பூரில் 51 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் என மொத்தம் 207 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்கள் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 3-வது நாள் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை.
    • பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக் கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அண்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாமல்லபுரம் அருகே பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார்.

    கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி என்று கூறினார்.

    மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

    2-வது நாளாக பா.ம.க. மகளிரணி, இளைஞர் அணி, மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓரளவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 3-வது நாளாக பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

    3-வது நாள் கூட்டத்திலும் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை. அவர் கூட்டத்தை புறக்கணித்தார். மேலும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., பா.ம.க.பொருளாளர் திலகபாமா, சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோரும் 3 நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் அன்புமணியின் தீவிர ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும்போது,

    டாக்டர் ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். சுமூக முடிவு ஏற்படும். இந்த சலசலப்பு விரைவில் தீரும் என்றார்.

    மேலும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விரைவில் அன்புமணி சமரசம் ஆவார் என பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதற்கிடையே பா.ம.க. சமூக ஊடக பேரவை, மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பாரா? என பா.ம.க. நிர்வாகிகள் தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ராமதாசும் அன்புமணியும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்பதே பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • எங்கே ஓடி, ஒழிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
    • ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் தி.மு.க. அரசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தெரியும்.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அறிக்கை வந்தவுடன் தி.மு.க. அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

    எங்கே ஓடி, ஒழிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் குடும்பமே டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் தி.மு.க. அரசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தெரியும்.

    ஊழலை மடைமாற்றும் விதமாக தி.மு.க. அரசு மும்மொழி கொள்கை குறித்து பேசியது அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தெரியவரும்.

    ஆபரேசன் சிந்தூரில் ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணைகள் ரியல் ஹீரோவாக செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தும் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் மோடியின் பலவீனத்தை காட்டுகிறது என தமிழகத்தில் உள்ள முட்டாள்கள் பேசியுள்ளனர். நாட்டிற்கு எதிராக செயல்படுவதை ராகுல்காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • விபத்தில் மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு சுமார் 450 அடி ஆழமுள்ள குவாரி இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கு முன்பாக அந்த குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வெடி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மண் சரிந்ததில் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

    உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்ததாக தெரிகிறது.

    இறந்தவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மண்ணில் புதைந்து இறந்தவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    • தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர்களான காந்தி, துரை. செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாரதி மோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகே பந்தமங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாலையன் (வயது 50) அரசு பஸ் டிரைவர்.இவர் திருவக்கரையிலிருந்து திண்டிவனம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் திடீரென்று நிறுத்தி பயணிகளை ஏற்றியுள்ளார்.

    அப்போது கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த கூட்டேரிப்பட்டை சேர்ந்த முனுசாமி மனைவி கவுரி( 42) உட்பட 32 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாளை மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் மத்தியகிழக்கு அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். நாளை மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்தம் உருவாகலாம்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.
    • ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!

    ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது மு.க.ஸ்டாலின் உணர்வாரா?

    அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே-

    திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்!

    ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து "தம்பி"யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (#யார்_அந்த_தம்பி?)

    இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!

    ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.

    இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.

    NEVER EVER GIVE UP!

    தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்! என்று கூறியுள்ளார். 



    • 2025-26-ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.
    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் ஜூன் 2 -ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாட்டில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே அனைத்து பாட புத்தகங்களும் விநியோகிக்கப்படும்.

    * விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன் புத்தகங்கள் வழங்கப்படும்.

    * 2025-26-ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

    * அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×