என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு
    X

    அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு

    • 3-வது நாள் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை.
    • பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக் கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அண்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாமல்லபுரம் அருகே பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார்.

    கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி என்று கூறினார்.

    மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

    2-வது நாளாக பா.ம.க. மகளிரணி, இளைஞர் அணி, மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓரளவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 3-வது நாளாக பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

    3-வது நாள் கூட்டத்திலும் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை. அவர் கூட்டத்தை புறக்கணித்தார். மேலும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., பா.ம.க.பொருளாளர் திலகபாமா, சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோரும் 3 நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் அன்புமணியின் தீவிர ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும்போது,

    டாக்டர் ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். சுமூக முடிவு ஏற்படும். இந்த சலசலப்பு விரைவில் தீரும் என்றார்.

    மேலும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விரைவில் அன்புமணி சமரசம் ஆவார் என பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதற்கிடையே பா.ம.க. சமூக ஊடக பேரவை, மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பாரா? என பா.ம.க. நிர்வாகிகள் தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ராமதாசும் அன்புமணியும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்பதே பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×