என் மலர்
உள்ளூர் செய்திகள்
- டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது.
சேலம்:
டி என் பி எல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடிய துஷார் ரஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 25 ரன்கள் எடுத்தனர்.
சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. நிதிஷ் ராஜகோபால் அரை சதம் கடந்தார். அவர் 44 பந்தில் 69 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஆர்.கவின் 34 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் பூபதி குமார் 19 ரன்னும், ஹரிஷ் குமார் 23 ரன்னும் எடுத்து பொறுப்புடன் ஆடினர்.
இறுதியில், சேலம் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. சேலம் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
- அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
- முழு ஆண்டு தேர்வுக்குப் பிறகு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில், 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு 2026ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி வேலை நாட்கள் 2026 ஏப்ரல் 24ம் தேதியுடன் நிறைவுபெறும் என்றும் ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 14) விடுமுறை அறிவிப்புக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திட்டத்தின் பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ணா, திட்ட மேலாளர் டாடா ராவ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரெயில் பால தூண்கள் விழுந்து உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ.5 லட்சமும், எல் அண்ட் டி நிறுவனம் ரூ.20 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருக்கிறது.
- மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது.
- பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சந்தித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு, சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் சந்தித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது.
பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சந்தித்துள்ளனர்.
பரந்தூர் மக்களின் சந்திப்பு முடிந்த பிறகு, ஜாக்டோ- ஜியோ ஒரு பிரிவினரும் சந்திக்க உள்ளனர்.
- திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
- குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "189 குடும்பங்களுக்கு நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை" என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்யும் “உடன்பிறப்பே வா’’ தொடங்கியது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.
இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது.
இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் பேசுகையில்," ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ''உடன்பிறப்பே வா'' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக, தனித்தனியாக பேசுவோம்.
தி.மு.க. உடன் பிறப்புகளுடனான உறவு என்பது அரசியல் கட்சி என்ற அளவிலும், நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற அளவிலும் இருக்கும் தொடர்புகளை போன்றதல்ல.
தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க.வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காத்து நிற்கக் கூடியவர்கள்.
அப்படிப்பட்ட உடன் பிறப்புகளை கலைஞர் வழியில், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எளிமையாக உரையாட உள்ளேன்" என்றார்.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசும் ''உடன்பிறப்பே வா'' நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இன்று காலையில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து உரையாடினார்.
இந்த ஆலோசனையில் 3 தொகுதிகளையும் சேர்ந்த ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரூர் செயலாளர் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 7 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக அழைத்து, தொகுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசம் சென்றன. எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ''உடன்பிறப்பே வா'' என்னும் தொகுதி வாரியான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார்.
அதன்படி சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய போது, ''வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
- பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
- என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார்.
இந்த நிலையில் இன்று அவர் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும், தாயை பாட்டிலால் தாக்குவதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.
என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்.
2026 வரை நான் தலைவராக இருப்பேன் என நான் கூறியிருந்தேன். அந்த முடிவை மாற்றி கொள்கிறேன்.
அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.
- துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது.
இதில் தொடர்புடைய ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மதுரை மாவட்ட சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கில் இருந்து மன ரீதியான உடல்நல பிரச்சனை காரணமாக தன்னை விடுவிக்க கோரி துரை தயாநிதி தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலை குறித்து உறுதி செய்ய வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது.
- அ.தி.மு.க. இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நலம் என்ற பெயரில் இந்துக்களை அணி திரட்டுகிறார் கள்.
அந்த வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.
முத்தலாக், வக்பு, திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு, அரசமைப்புக்கு எதிரானது. அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் திருச்சியில் வி.சி.க. சார்பில் நாளை மதசார்பின்மை காப்போம் பேரணி நடைபெறுகிறது.
இந்தியாவில் பிற மாநிலங்களில் ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக் கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டம் அது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவது தான் விடுதலை சிறுத்தை ஏற்றுக்கொண்ட பேரணி நோக்கமாகும்.
மதவாதத்திற்கு இடம் தராத ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மண்ணாக தமிழ் மண் தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒரு இலக்காக வேண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை முருக பக்தர்கள் மாநாடு இதுபோன்ற செயல்படுத்துகின்றனர்.
அகமதாபாத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்தில் எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
தலைமை தாங்கி இருக்கும் கட்சியுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அந்த நேரத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் உள்ளது.
நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியில் நலம் முதன்மையானது.
தி.மு.க.வுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதே போல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம், கோரிக்கையாக வெளிப்படுத்தி இருக்கும். இன்றைக்கும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடமிருந்து கூடுதல் சீட் கேட்போம்.
அ.தி.மு.க.வால் வெளியில் உள்ளவர்களையே இணைக்கவில்லை. அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்து விட்டார்.
கூட்டணி தயாராக இல்லை. அ.தி.மு.க. இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை.
நிரந்தரமாக டாஸ்மாக் மூட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த தேர்தலிலாவது திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
எங்கெல்லாம் அரசு இருக்கிறதோ அங்கு ஊழல் உள்ளது. ஊழல் என்பதை சொல்லி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது என்பது சொற்பமான நிகழ்வுகள் தான்.
அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை.
ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் முன் வைக்கட்டும் மக்களிடத்தில் எடுத்து வைக்கட்டும், விசாரணைக்கு கொண்டு செல்லட்டும். ஊழல் மிகப்பெரிய பிரச்சனை தான். ஆனால் ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் கொடூரமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தலைமை நிலையச்செயலாளர் பாலசிங்கம், முதன்மைச் செயலாளர் பாவரசு, மண்டல பொறுப்பாளர் பெரம்பலூர் இரா.கிட்டு மற்றும் பலர் உள்ளனர்.
- தொழில் அதிபர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ 3-வது தெருவில் முத்து என்ற தொழில் அதிபர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழில் அதிபர் முத்துவின் வீட்டுக்கு காலை 7 மணி அளவில் சென்ற வீட்டில் உள்ள ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தினார்கள்.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தொழில் அதிபர் முத்துவின் பின்னணி மற்றும் தொழில்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






