என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.
- முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை.
* தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.
* தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ்மொழியில் குடமுழுக்கு நடக்காது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
* முருகனே தமிழ் தான், முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள்.
* எங்கள் சமயம் சைவம். சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது. தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது.
* முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- தமிழக அரசின் இந்த அணுகுமுறை உயர்கல்வியின் தரத்தை குழி தோண்டி புதைக்கும் நிலைக்குதான் இட்டுச் செல்லும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தரமானக் கல்வியை வழங்குவதாகக் கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசு, 4 ஆயிரத்துக்கும் கூடுதலான பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவே நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு கலைக் கல்லூரிகளின் துறைகளையும் ஓராசிரியர் துறைகளாக மாற்ற தமிழக அரசு துடிக்கிறது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை உயர்கல்வியின் தரத்தை குழி தோண்டி புதைக்கும் நிலைக்குதான் இட்டுச் செல்லும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
தென்னிந்திய கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நிவாரண முகாம்களும் தயார் செய்யப்பட்டு உள்ளது.
மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்புக்குழுவினர் நீலகிரி மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு, வருவாய், காவல்துறையினரும் முகாமிட்டு உள்ளனர்.
மேலும் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. நீலகிரியில் நேற்றும், இன்றும் மழை மிதமான அளவிலேயே பெய்துள்ளது. மழை அதிகரிக்கும்பட்சத்தில் சுற்றுலாதலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.
மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர். மழையின் தீவிரத்தை பொறுத்து சுற்றுலாதலங்களை மூடுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு உடனடியாக அறிவிக்கப்படும். நீலகிரிக்கு சுற்றுலா வர திட்டமிடும் மற்றும் வந்துள்ள சுற்றுலாபயணிகள் மழை சம்பந்தமான வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப பயணங்களை திட்டமிட வேண்டும் என்றார்.
அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கமாண்டர் கோபிநாத் தலைமையில் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். கமாண்டர் கோபிநாத் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் 283 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் அபாயகரமான மரங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். பேரிடா் மீட்புக் குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா். நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளோம். தீயணைப்பு, வருவாய்த் துறையினருடன் இணைந்து அவ்வப்போது மழை வெள்ளம், இயற்கை சீற்றம் குறித்த தகவல்களை பகிா்ந்து வருவதால் அதி கனமழையை எதிா்கொள்ள தயாராக உள்ளோம் என்றாா்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 7 செ.மீ. மழை கொட்டியது. அவலாஞ்சியில் 6 செ.மீ, சேரங்கோட்டில் 5, தேவாலாவில் 5, அப்பர்பவானியில் 4 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.
கோவை மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படும் வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர்.
மழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் இன்றும், நாளையும் மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பில்லூர் அணையில் நீர்மட்டம் உயரும்போது உபரிநீர் வெளியேற்றம் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமத்தூர் பகுதியில் இருந்து சமயபுரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பா ளையம் உள்ளிட்ட ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 19 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகா சின்னக்கல்லாரில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் மாலையில் திடீரென நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,500 கன அடி யாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது.
- அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 5 ஆயிரம் கன அடியாகவும், இரவு 8 மணியளவில் அது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
அதே போல் அணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7507 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம்.
- சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.
வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
* 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.
* எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம்.
* சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.
* தேர்தலில் ராமராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று அதன் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 295-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்தை தாண்டி பின்னர் விலை குறைந்ததால், ரூ.71 ஆயிரத்துக்கு வந்தது. மீண்டும் விலை அதிகரித்ததால், ரூ.72 ஆயிரத்தை கடந்த 11-ந் தேதி கடந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.73 ஆயிரம் மற்றும் ரூ.74 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 22-ந் தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனதுதான் உச்சபட்ச விலையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய விலை உயர்வு அதனையும் கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
12-06-2025- ஒரு கிராம் ரூ.119
11-06-2025- ஒரு கிராம் ரூ.119
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
- 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
- தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது.
- தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 170 மையங்களில் தேர்வானது நடைபெறுகிறது.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சென்ட்ரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது.
- வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும்.
சென்னை:
மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கவர்னரிடம் இருந்த 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதேபோல் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அவருக்கு அனுப்பட்டு இருந்த மசோதாக்களில் 5 மசோதாக்களுக்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார்.
அதில் 2 மசோதாக்கள் மிக முக்கியமானது ஆகும். முதலாவது, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (கடும் வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டம்) 2025. இந்த சட்டத்தின்படி கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.
மேலும் அவர்களுக்கு இடையூறு, வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகுமிடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குற்றமாக கருதப்படும்.
இந்த குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி ஏஜென்சிகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108-ம் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும். அதாவது அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதா, குறிப்பாக ஏழை தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் மீது நடக்கும் இந்த கொடுமைகளை நிறுத்த தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டாவது மசோதா, தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி இனி உயிரி-மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்துவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும். எனவே மருத்துவ கழிவுகளை இனி கண்டபடி கொட்டக்கூடாது. முறைப்படி அகற்ற வேண்டும்.
இதுதவிர தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்ட மசோதா ஆகியவற்றுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது.
- தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்காத ஒரு போலி விவசாயிதான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு பயிர்க் காப்பீடாக சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை அ.தி.மு.க. அரசு வழங்கி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வழங்க சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் ஆனவுடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 மட்டுமே வழங்கினார்.
2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, இன்றுவரை அதனை செயல்படுத்தவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதுமில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.
தலைவாசலில் கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி என்பதை பெருமையாகக் கூறுவேன். இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.
விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி.
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும் தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.






