என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை.
    • கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். இறைவன் எங்கள் இறைவன். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது (திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு) என்பது எவ்வளவு பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம்.

    தாய் மொழியை இழந்த எந்த இனம் தமிழக வரலாற்றில் வாழ்ந்துள்ளது? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து தான் உரிமையை பெற்றுள்ளோம். தாய்மொழி வழிபாடு என்பது அடிப்படை உரிமை. அதை கேட்டு போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.

    திராவிட ஆட்சியாளர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோவிலில் குடமுழுக்கு நடத்துகிறோம் என்கிறார்கள்.

    தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது. இது யாருக்கும் பயன் தரும்?

    நாட்டில் பாதுகாப்புக்கு உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன? கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன?

    அமலாக்கத்துறை சோதனை வந்த பிறகு முதலமைச்சர், பிரதமர் மோடியின் கையைப் பிடித்து கொண்டு பேசுகிறார். இங்கு வந்த பிறகு பிரதமர் மோடியை எதிரி என்கிறார்.

    நாளை திருச்செந்தூர் அருகே நடக்கும் பனையேறும் போராட்டத்திற்கு காவல்துறை தடை என்றால் அதை உடை. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்களிடம் கிடையாது. பனையேறும்போது வெறும் கையோடு இருக்க மாட்டேன். அரிவாளுடன் இருப்பேன்.

    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்கும்போது எங்கள் மாநிலத்தில் மட்டும் இறக்க அனுமதி இல்லையே ஏன்? கள் என்பது இயற்கையின் அருட்கொடை. கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.

    நாட்டின் மொத்த அரசியலையும் மாற்றுவதுதான் என்னுடைய கடமை. நாம் தமிழர் கட்சி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிடும். கூட்டணி கிடையாது.

    பா.ஜ.க. முருகன் மாநாடு நடத்துவது ஒரு மார்க்கெட்டிங்.

    யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என்பதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அம்பத்தூர் சிட்கோ: EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, யாதவாள் தெரு, வடக்கு கட்ட செக்டார் 3, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கச்சினுகுப்பம், அம்பேத்கர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு, புதிய டைனி ஷெட், டாஸ் எஸ்டேட் 7 முதல் 10-வது தெரு வரை, சிட்கோ எஸ்டேட் 8-வது தெரு, 3-வது மெயின் ரோடு, 1-வது மெயின் ரோடு, தொழிலாளர் குடியிருப்பு, 12-வது தெரு, 5 முதல் 11-வது தெற்கு செக்டார் 3, 3-வது குறுக்குத் தெரு, எஸ்.பி. 17 முதல் 28 வரை.

    • ஆழ்வார்பேட்டையில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனையில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    • சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
    • அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இன்று காலையிலும் தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடையானது நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து, மதிய நேரத்தில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

    • கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.
    • தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிதி நெருக்கடி என்று கூறி குளங்களை சீரமைக்காமல் இருப்பது முறையல்ல. தற்போது பருவமழையும் தொடங்கிவிட்டதால் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சுமார் 25 ஆயிரம் சிறிய ஏரிகள், குளங்கள் நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் பெரும்பாலான நீர்நிலைகளில் சீமை கருவை செடிகளும், ஆகாயதாமரை செடிகளும் புதராக மண்டி கிடக்கின்றன.

    இந்த கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்து உள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

    பல்வேறு துறைகளுக்கு கடன் வாங்கி செலவு செய்யும் அரசு அடிப்படைத் தேவையான, அத்தியாவசியத் தேவையான, அவசியத் தேவையான நீருக்காக நிதி ஒதுக்க முடியவில்லை என்பது மக்களை ஏமாற்றும் செயல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்?

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

    ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!

    நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் மு.க.ஸ்டாலின் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே?

    காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.

    V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.
    • ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு பால்பாண்டி என்பவர் இரவு பணியில் இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.

    அப்போது வீட்டில் அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார்.

    தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனது தந்தையை மிரட்டி அழைத்து சென்றதாக கூறி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் நேற்று இரவு மது போதையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் பால்பாண்டியை மிரட்டியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரர் தனி அறைக்கு தப்பிச்சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்தும், உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

    சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயக்குமார் காவல் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது போலீசார் அவரை முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

    • அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் அருகே உள்ளது பெரிய கண்மாய் என்று அழைக்கப்படும் சோழப்பேரரி கண்மாய் ஆகும்.

    மேலூர் பகுதி கண்மாய்களில் இது ஒரு பெரிய கண்மாயாகும். இங்கு பெரியார் பாசன நீர் தேக்கி வைக்கப்பட்டு திருவாதவூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிவடைந்த பின்பு இங்கு மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கமாய் உள்ளது.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்று (14-ந்தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து திருவாதவூர், மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வேன்கள், பைக்குகள் ஆகியவற்றில் பெண்கள், சிறியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதலில் கூடினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கிராம முக்கியஸ்தர்கள் இங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு சாமி கும்பிட்டு தாரை, தப்பட்டை, வான வெடிகள் முழங்க பெரிய கண்மாய்க்கு ஊர்வலமாய் வந்தனர். அங்கு கண்மாயில் வந்து வெள்ளை துண்டு வீசினர். அப்போது சுற்றி இருந்த மக்கள் போட்டி போட்டு கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, குத்தா, கூடை போன்ற மீன் பிடி சாதனைகளை பயன்படுத்தி ஏராளமான மீன்களை பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர். ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோவிற்கு அதிக மான மீன்களை பிடித்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    இந்த மீன்பிடித் திருவிழா சமத்துவ மீன் பிடித்து விழாவாக ஜாதி மத பேதமின்றி நடைபெற்று வருகிறது. இங்கு பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விலைக்கு விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளில் கொண்டு சென்று சமைத்து சாமி கும்பிட்டு தங்கள் உறவினர்களுக்கும் வழங்கி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் நல்ல மழை பெய்து இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாய் உள்ளது. 

    • மனநலம் பற்றிய பல்வேறு கருத்துகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.
    • நிகழ்ச்சி மகளிர் நலனில் கல்லூரியின் அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் உன்னத் பாரத் அபியான் மற்றும் மாதா மருத்துவமனை ஆகியவை இணைந்து நேற்று கல்லூரித் திரையரங்கில் மகளிர் நல விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை நடத்தின. கல்லூரித் தாளாளர் வெங்கடேஷ் ராஜா, இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோரின் மேலான ஆதரவுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்குச் சிறப்பு விருந்தினர்களாக மாதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் ஜோஸ்பின் ரோஸி அவர்களும், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறைப் பேராசிரியர் டாக்டர் விஜயலட்சுமி ஞானசேகரன் அவர்களும், தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் மேனாள் பேராசிரியர் டாக்டர் பிரேமலதா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    டாக்டர் ஜோஸ்பின் ரோஸி அவர்கள் மகளிருக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு, உணவு மேலாண்மையைக் கையாளும் முறை, நல்ல உறக்கம் ஆகிய உடல் நலனைப் பேணுகின்ற வழிமுறைகள் பற்றிக் குறிப்பிட்டார்.

    அடுத்து உரை நிகழ்த்திய டாக்டர் விஜயலட்சுமி ஞானசேகரன் அவர்கள் மாதவிடாய் பற்றிய பிரச்சனைகள், மாதவிடாயை நேர்மறையாக எதிர்கொள்ளுதல், மகளிர்க்கு ஏற்படும் நோய்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வு போன்ற பல கருத்துகளை முன் வைத்தார்.



    டாக்டர் பிரேமலதா அவர்கள் மகளிர் மனநலம், ஆரோக்கியமான மனநலத்தைப் பாதுகாத்தல், நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற மனநலம் பற்றிய பல்வேறு கருத்துகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

    நிகழ்ச்சியின் இறுதியாக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் பல்வேறு வினாக்களுக்கு மகளிர் நல மருத்துவர்கள் பதில் அளித்து பல்வேறு ஐயங்களைத் தீர்த்து வைத்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் நலனில் கல்லூரியின் அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

    • வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்.
    • மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும்.

    சென்னை அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த கார்த்திகா என்ற பெண்ணின் குடும்பத்திடம், அவரைப் பிரசவ வார்டுக்கு மாற்றவும், குழந்தையை சுத்தம் செய்யவும் வார்டு பாய்கள் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

    பயந்த கார்த்திகாவின் குடும்பத்தினர், வேறு வழியின்றி பணம் செலுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை, மொத்தம் ரூ.10,000 வரை செலவழித்ததாகத் தெரிகிறது.

    இதுகுறித்து பேசிய கார்த்திகா, "வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் என்று குறிப்பிட்ட கார்த்திகா,மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும் என்று கூறினார்.

    மருத்துவமனை ஊழியர்களின் லஞ்சப் பட்டியல் :

    வார்டு பாய்கள் - அறுவை சிகிச்சை அறையில் இருந்து குழந்தையை சாதாரண வார்டுக்கு மாற்றுதல், குழந்தையை சுத்தம் செய்தல் மற்றும் நோயாளிக்கு பிற வகையான உதவி ஆகியவற்றுக்கு சராசரியாக ரூ.500 முதல் ரூ.3000 வரை லஞ்சம் கேட்கின்றனர்.  

    பெண் மருத்துவ உதவியாளர்கள் - பிரசவ உதவி, குழந்தைக்கு குளிப்பாட்டுதல், துணிகள் கொண்டு வருதல் மற்றும் பிற சேவைகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 லஞ்சம் கேட்கின்றனர்.

    துப்புரவு பணியாளர்கள் - துப்புரவு சேவை மற்றும் நோயாளிகளின் வார்டுக்கு வழிகாட்டுதலுக்கு குறைந்தது ரூ.20 முதல் ரூ.50 லஞ்சம் கேட்கின்றனர்.

    இதுதவிர வாட்ச்மேன்கள் ரூ.100 லஞ்சமாக பெறுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா, இந்த பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகவும், ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    "பணம் கேட்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் கூறுகிறோம், இருப்பினும் இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊழியர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர்களை அடையாளம் காண முடியவில்லை" என்றும் அவர் டாக்டர் சங்கீதா வருத்தத்துடன் தெரிவித்தார்.

    சிறுசிறு வேலைகள் முதல் நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றுவது அல்லது ஸ்கேன் எடுப்பது போன்ற பெரிய வேலைகளுக்கும் ரூ.50 முதல் ரூ.500 அல்லது அதற்கு மேல் பணம் கோரப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    பணம் கொடுக்க மறுப்பவர்கள் வாய்மொழித் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாகவும், பார்வையாளர்கள் நேரத்திலும் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

    • வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. இரண்டு நாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், மேலும் வருகிற 16-ம் தேதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமான இன்று (14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×