என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.
- விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.
சென்னை:
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும் முதற்கட்டமாக கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டதுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்காக விஜய் நிர்ணயித்தார்.
இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கைக்கென தனி சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
கட்சியில் புதிதாக சேர்வதற்காக ஆர்வமுடன் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதள சர்வரே அடிக்கடி முடங்கியது. கட்சியில் சேர ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டினர்.
கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.
இதுவரை கட்சியில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி 70, 80, 90 வயதான முதியவர்களும் ஆர்வமுடன் கட்சியில் இணைந்து உள்ளனர்.
கட்சியில் சேர்ந்துள்ள முதியவர்கள் இதுவரை எந்த கட்சியிலும் இருந்ததில்லை.
உறுப்பினர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக த.வெ.க. தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கென ஏற்கனவே மாநில அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.
த.வெ.க. கொள்கை மற்றும் திட்டங்களை மாவட்ட செயலாளர்களும் தொண்டர்களும் வீடு வீடாக காலையிலும், மாலையிலும் மக்களிடையே கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். தி.மு.க.வை சேர்ந்த வீடுகளுக்கு அ.தி.மு.க.வினர் செல்வதில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்த வீடுகளுக்கு தி.மு.க.வினர் செல்வதில்லை.
ஆனால் த.வெ.க.வினர் இரண்டு கட்சியினர் வீடுகளுக்கும் சென்று த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதையடுத்து புதிய உறுப்பினர்களாக சேருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் த.வெ.க.வில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் இணைந்துள்ளனர்.
மேலும் பல அரசியல் பிரபலங்கள் கட்சியில் இணைவதற்காக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
த.வெ.க. தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி இருக்கும் நிலையில் த.வெ.க.வின் அரசியல் பணிகளும் புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே கோவை, மதுரையில் விஜய் ரோடு-ஷோ நடத்தி மக்களை சந்தித்தார். அடுத்தக்கட்டமாக பல மாவட்டங்களுக்கு விரைவில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார்.
இதையடுத்து த.வெ.க. புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. மாநில செயலாளராக இருந்தவர் கே.ஆர். வெங்கடேஷ். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
- பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
- தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
இங்கு இலவச தரிசனம் மட்டுமின்றி ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இவை தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகிய பிரமுகர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. சமீப காலமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பிரேக் தரிசனம் எனப்படும் இடைநிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதனையடுத்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விரைவில் இந்த வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு உள்பட முக்கிய விஷேசங்கள் வரும் 44 நாட்கள் செயல்படுத்தப்படமாட்டாது.
இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.
பிரேக் தரிசன சேவையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த டப்பா, தேங்காய், பழம், விபூதி, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு பிரசாதமாக வழங்கப்படும். இந்த தரிசன வசதி குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக வருகிற 29ம் தேதிக்குள் பழனி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.
- புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
- புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகளை வெடித்து, மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
பின்னர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பூங்கொத்துகளை கொடுத்தும், பொன்னாடைகளை அணிவித்தும் பலர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அனைவருடனும் கமல்ஹாசன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்த வாளை கமலிடம் கொடுக்க முற்பட்டார். அதை வாங்க மறுத்து கமல்ஹாசன் கோபம் அடைந்தார்.
வாளை கீழே வைக்கச்சொல்லி விட்டு தொண்டரிடம் கைகுலுங்கி, புகைப்படம் எடுத்து அவரை அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல், பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஊடகப் பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் கவிஞர் சினேகன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், வேளச்சேரி தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் சண்முக சுந்தரம், மகளிர் அணி செயலாளர் சினேகா மோகன்தாஸ், மீனவர் அணி செயலாளர் பிர தீப் குமார், விவசாய அணி செயலாளர் மயில்சாமி, தொழில் முனைவோர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் செல்வகுமார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கல்லணை பகுதியில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளன.
- தஞ்சை மாவட்டத்தில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பூதலூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டு மலர்தூவினார்.
இதையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையை திறந்து விட்டது போல் கல்லணையில் இருந்தும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
இதற்காக தஞ்சாவூர் வருகை தரும் முதலமைச்சர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ரகுபதி, மெய்யநாதன், தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கல்லணையில் தூய்மைப்படுத்தும் பணிகள், வண்ணம் பூசும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கல்லணை கால்வாய் தலைப்பு பகுதியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள புனரமைப்பு பணிகளும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பாலங்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கல்லணை பாலங்களில் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ஆங்கில பொறியாளர் ஆர்டர் காட்டன், காவிரி அம்மன், அகத்தியர், மாமன்னன் ராஜராஜன், விவசாயி, மீன்பிடிக்கும் தொழிலாளி ஆகிய சிலைகள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக பூஜை செய்யப்படும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறும் மதகு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில், உள்பகுதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவில், பூங்காவில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகிய கோவில்கள் வண்ணம் பூசப்பட்டு தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
மேலும் கல்லணை பகுதியில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 85.553 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து 6,836 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் 1.93 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.72 லட்சம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 0.61 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக 1,379 கிலோமீட்டர் தூரம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கோவை, நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
16-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
17-ந்தேதி நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு பதிவாகக்கூடும்.
- எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்!
- பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்! என்று கூறியுள்ளார்.
- தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை.
- கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். இறைவன் எங்கள் இறைவன். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது (திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு) என்பது எவ்வளவு பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம்.
தாய் மொழியை இழந்த எந்த இனம் தமிழக வரலாற்றில் வாழ்ந்துள்ளது? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து தான் உரிமையை பெற்றுள்ளோம். தாய்மொழி வழிபாடு என்பது அடிப்படை உரிமை. அதை கேட்டு போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.
திராவிட ஆட்சியாளர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோவிலில் குடமுழுக்கு நடத்துகிறோம் என்கிறார்கள்.
தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது. இது யாருக்கும் பயன் தரும்?
நாட்டில் பாதுகாப்புக்கு உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன? கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன?
அமலாக்கத்துறை சோதனை வந்த பிறகு முதலமைச்சர், பிரதமர் மோடியின் கையைப் பிடித்து கொண்டு பேசுகிறார். இங்கு வந்த பிறகு பிரதமர் மோடியை எதிரி என்கிறார்.
நாளை திருச்செந்தூர் அருகே நடக்கும் பனையேறும் போராட்டத்திற்கு காவல்துறை தடை என்றால் அதை உடை. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்களிடம் கிடையாது. பனையேறும்போது வெறும் கையோடு இருக்க மாட்டேன். அரிவாளுடன் இருப்பேன்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்கும்போது எங்கள் மாநிலத்தில் மட்டும் இறக்க அனுமதி இல்லையே ஏன்? கள் என்பது இயற்கையின் அருட்கொடை. கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.
நாட்டின் மொத்த அரசியலையும் மாற்றுவதுதான் என்னுடைய கடமை. நாம் தமிழர் கட்சி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிடும். கூட்டணி கிடையாது.
பா.ஜ.க. முருகன் மாநாடு நடத்துவது ஒரு மார்க்கெட்டிங்.
யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என்பதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர் சிட்கோ: EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, யாதவாள் தெரு, வடக்கு கட்ட செக்டார் 3, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கச்சினுகுப்பம், அம்பேத்கர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு, புதிய டைனி ஷெட், டாஸ் எஸ்டேட் 7 முதல் 10-வது தெரு வரை, சிட்கோ எஸ்டேட் 8-வது தெரு, 3-வது மெயின் ரோடு, 1-வது மெயின் ரோடு, தொழிலாளர் குடியிருப்பு, 12-வது தெரு, 5 முதல் 11-வது தெற்கு செக்டார் 3, 3-வது குறுக்குத் தெரு, எஸ்.பி. 17 முதல் 28 வரை.
- ஆழ்வார்பேட்டையில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
- ஆலோசனையில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
- அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இன்று காலையிலும் தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடையானது நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, மதிய நேரத்தில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.
- தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிதி நெருக்கடி என்று கூறி குளங்களை சீரமைக்காமல் இருப்பது முறையல்ல. தற்போது பருவமழையும் தொடங்கிவிட்டதால் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சுமார் 25 ஆயிரம் சிறிய ஏரிகள், குளங்கள் நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் பெரும்பாலான நீர்நிலைகளில் சீமை கருவை செடிகளும், ஆகாயதாமரை செடிகளும் புதராக மண்டி கிடக்கின்றன.
இந்த கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்து உள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
பல்வேறு துறைகளுக்கு கடன் வாங்கி செலவு செய்யும் அரசு அடிப்படைத் தேவையான, அத்தியாவசியத் தேவையான, அவசியத் தேவையான நீருக்காக நிதி ஒதுக்க முடியவில்லை என்பது மக்களை ஏமாற்றும் செயல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






