என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு
    X

    விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு

    • கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.
    • விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.

    சென்னை:

    2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும் முதற்கட்டமாக கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டதுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்காக விஜய் நிர்ணயித்தார்.

    இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கைக்கென தனி சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

    கட்சியில் புதிதாக சேர்வதற்காக ஆர்வமுடன் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதள சர்வரே அடிக்கடி முடங்கியது. கட்சியில் சேர ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டினர்.

    கட்சியில் இணைந்தவர்கள் பட்டியலில் இளம் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

    இதுவரை கட்சியில் சுமார் 1.50 கோடி பேர் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

    இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி 70, 80, 90 வயதான முதியவர்களும் ஆர்வமுடன் கட்சியில் இணைந்து உள்ளனர்.

    கட்சியில் சேர்ந்துள்ள முதியவர்கள் இதுவரை எந்த கட்சியிலும் இருந்ததில்லை.

    உறுப்பினர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக த.வெ.க. தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கென ஏற்கனவே மாநில அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.

    த.வெ.க. கொள்கை மற்றும் திட்டங்களை மாவட்ட செயலாளர்களும் தொண்டர்களும் வீடு வீடாக காலையிலும், மாலையிலும் மக்களிடையே கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். தி.மு.க.வை சேர்ந்த வீடுகளுக்கு அ.தி.மு.க.வினர் செல்வதில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்த வீடுகளுக்கு தி.மு.க.வினர் செல்வதில்லை.

    ஆனால் த.வெ.க.வினர் இரண்டு கட்சியினர் வீடுகளுக்கும் சென்று த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதையடுத்து புதிய உறுப்பினர்களாக சேருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கடந்த வாரம் த.வெ.க.வில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் இணைந்துள்ளனர்.

    மேலும் பல அரசியல் பிரபலங்கள் கட்சியில் இணைவதற்காக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

    த.வெ.க. தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி இருக்கும் நிலையில் த.வெ.க.வின் அரசியல் பணிகளும் புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே கோவை, மதுரையில் விஜய் ரோடு-ஷோ நடத்தி மக்களை சந்தித்தார். அடுத்தக்கட்டமாக பல மாவட்டங்களுக்கு விரைவில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார்.

    இதையடுத்து த.வெ.க. புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×