என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழனி கோவிலில் விரைவில் 'பிரேக் தரிசன' வசதி அறிமுகம்- நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம்
- பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
- தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
இங்கு இலவச தரிசனம் மட்டுமின்றி ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இவை தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகிய பிரமுகர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. சமீப காலமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பிரேக் தரிசனம் எனப்படும் இடைநிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதனையடுத்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விரைவில் இந்த வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு உள்பட முக்கிய விஷேசங்கள் வரும் 44 நாட்கள் செயல்படுத்தப்படமாட்டாது.
இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.
பிரேக் தரிசன சேவையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த டப்பா, தேங்காய், பழம், விபூதி, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு பிரசாதமாக வழங்கப்படும். இந்த தரிசன வசதி குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக வருகிற 29ம் தேதிக்குள் பழனி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.






