என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
    • கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்து பணி பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கினர். அதன்படி விசைப்படகுகளில் வலைகளை ஏற்றுதல், கேன்களில் டீசல் நிரப்புதல், படகுகளை இயக்கி என்ஜின் செயல்பாடுகளை சரிபார்த்தல், மீன்களை பதப்படுத்த பெட்டிகளில் ஐஸ் நிரப்புதல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தொண்டி, உச்சிப்புளி, மூக்கையூர் ஆகிய இடங்களில் இருந்து கடலுக்கு செல்வதற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார் நிலையில் இருந்தன. அதே போல் வழக்கமாக குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதற்காக ஆயத்தமாகி இருந்தனர்.

     

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதிலும் நேற்று மாலை முதல் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக தென்கடல் பகுதியில் 5 அடி உயரத்திற்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீனவளத்துறை தடை விதித்துள்ளது.

    ராட்சத அலை எழும்புவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் சீற்றம் காரணமாக பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒருசில படகுகள் பாதுகாப்பு கருதி கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் கடல் சீற்றம் காரமாக தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாளை முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

    • நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.
    • சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    தந்தையர் தினத்தையொட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நீங்கள் எப்போதும் என்னை சிரிக்க வைக்கக்கூடிய மனிதர். நீங்கள் மிகவும் புத்திசாலியான மனிதர். நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.

    ஒரு தந்தையால் மட்டுமே ஒரு மகளை பராமரிக்க முடியும் என்பது போல நீங்கள் எப்போதும் என் மீது அக்கறை கொண்டிருந்தீர்கள். என் துணிச்சலை பாராட்டி உள்ளீர்கள்.

    நான் ரொம்ப வலிமையானவன்னு நீங்க எப்பவும் குறை சொல்லுவீங்க, ஆனா அதுக்கும் நீங்கதான் காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?

    சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பாடங்களுக்கும் நினைவுகளுக்கும் நன்றி என்று தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

    • இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர்.
    • சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை (தமிழ், ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையிலும், விருப்பப்பட்டு படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் தடை ஏதுமில்லை. 3-வது மொழியான இந்தியை தமிழகத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர். ஆந்திராவில் 1.15 லட்சம் பேரும், கர்நாடகம், கேரளாவில் 25 ஆயிரம் பேரும் இந்தி தேர்வை எழுதினர். தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகமானவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.

    தற்போது, ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் தேர்வுக்கு தற்போது வரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
    • புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெறுகிறது.

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கிறார்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் தந்தையர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!

    என்று பதிவிட்டு தனது தந்தை கலைஞர் மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    • ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    சென்னை:

    ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

    இதோ

    இன்னுமொரு

    யுத்தம் தாங்குமா?

    மண்டை உடைந்துவிடும்

    மண்ணுருண்டை,

    இஸ்ரேல் காசா

    சாவுச் சத்தம் அடங்குவதற்குள்,

    ரஷ்யா உக்ரைன்

    ரத்தச் சகதி காய்வதற்குள்,

    இஸ்ரேல் ஈரான்

    தொடங்கிவிட்டது.

    சொல்பேச்சுக் கேட்காத

    இரு நாடுகளால்

    உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன

    அச்சத்தின் கடலலைகள்.

    போர்ச் சங்கிலி என்பது

    உலகைப் பிணைத்திருக்கிறது.

    இஸ்ரேல் யுத்தம்

    மதுரை மல்லிகையில் புகையடிக்கிறது.

    ஈரான் யுத்தம்

    ஈரோட்டின் மஞ்சளைக் கரியாக்குகிறது.

    மில்லி மீட்டர்களில் ஏறும் பொருளாதாரம்,

    மீட்டர் மீட்டராய்ச் சரிகிறது.

    போர் வேண்டாம், புன்னகை வேண்டும்.

    யுத்தமில்லாத பூமி -

    ஒரு சத்தமில்லாமல் வேண்டும்

    என பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிக் உர் ரகுமார் அரை சதம் அடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பாலசந்தர் அனிருத் 31 ரன்கள் எடுத்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, சந்திரசேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 49 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    ஷிவம் சிங் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    • அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான்.
    • அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரமாண்ட மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் நீல நீரமாக காட்சி அளித்தது.

    பேரணி விழா மேடையில் திருமாவளவன் பேசியதாவது:-

    * இப்போது நாங்கள் ஆடுகளுமும் அல்ல.. இழிச்சவாய கூட்டமும் அல்ல... சீறிப்பாயும் விடுதலை சிறுத்தைகள்.

    * அடங்க மறுப்போம், அத்து மீறுவோம். திமிறி எழுவோம். திருப்பி அடிப்போம். வீர வணக்கம் வீர வணக்கம்.

    * வேரறுப்போம் வேரறுப்போம் சனாதனத்தை வேரறுப்புாம். வென்றெடுப்போம் வென்றெடுப்போம். சமத்துவத்தை வென்றொடுப்போம்.

    * மோடி அரசே, மோடி அரசே திரும்பப்பெறு திரும்பப்பெறு. வக்பு சட்டத்தை திரும்பப்பெறு. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறு.

    * பரப்பாதே, பரப்பாதே முஸ்லிம்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை பரப்பாதே. சிதைக்காதே சிதைக்காதே அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்காதே.

    * சனாதன சக்திகளா, விடுதலை சிறுத்தைகளா. விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம் மதவாத சக்திகளை, சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம்.

    * இந்த பேரணி தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலில் பேரதிர்வை உருவாக்குகின்ற பேரணி.

    * யார் எந்த கூட்டணி என தேர்தல் கணக்குகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. எத்தனை இடங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. யார் முதலமைச்சர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை.

    * விடுதலை சிறுத்தைகள் திமுக-விடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது... அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகளே.. தமிழ்நாட்டின் அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலை சிறுத்தைகள்.

    * முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை. துணை முதலமைச்சர் பதவி?... எங்களது தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமரை கைப்பற்றுங்கள் என வழிகாட்டியிருக்கிறார். அதுதான் அதிகாரமிக்க பதவி, அதுதான் அரசு.

    * தலித்கள், பழங்குடியின மக்கள், நாட்டின் பூர்வீக குடிமக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இதுதான் அம்பேத்கர் கண்ட கனவு.

    * எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். திருமாவளவனுக்கு தெரியும். 25 வருடம் இந்த தில்லுமுல்லு அரசியலில் தாக்குபிடித்தவர்கள் விடுதலை சிறுத்தைகள். எங்களுக்கு யாருடைய அட்வைஸும் தேவையில்லை.

    * தலித்துகள் இந்துக்களாக இருந்தாலும் கூட தலித்களின் உரிமைகளுக்காக போராடாதவர்கள்தான் பிஜேபிகாரர்கள்.

    * அந்த பிஜேபி-யின் செயல்திட்டத்தை நிறைவேற்ற பலபேர் பல வேசம் போடுகிறார்கள். சில பேர் சினிமா புகழோடு வந்திருக்கிறார்கள். ஹீரோ என்ற வேசத்துடன வந்திருக்கிறார்கள். எஸ்.சி. இளைஞர்கள் எல்லாம் சினிமோவோடு, சினிமா ஹீரோக்களுடன் சென்று விடுவார்கள் எனச் சொல்கிறார்கள். நடக்குமா?

    * அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான். அம்பேத்கரின் அரசியலே வேற.. அதை அவர்கள் புரிந்து கொள்ள முடியாது.

    * இன்றைக்கும் அம்பேத்கர் என்று சொன்னால் கோடி மக்கள் குரல் எழுப்புவார்கள். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் குரல் எழுப்புவார்கள். கோஷம் எழுப்புவார்கள். சினிமா காரர்களுக்கு அந்தந்த ஏரியாவில் மட்டும் கோஷம் வரும். அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர் அம்பேத்கர்.

    * அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்ட என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகள்.... ஒரு வாக்கு சிதறாது.

    * சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் வெற்றி. சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் ஆட்சி. அதை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள் விடுதலை சிறுத்தைகள்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    • வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்து.
    • இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டும் முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    தமிழக பா.ஜக. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம் பிடித்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

    அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தங்களது அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கும் முதல் நூறு இடங்களைப் பிடித்து சாதித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்!

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும் இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டு முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    • கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம்,
    • இதுபோன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநில அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்களுக்கு பிரதமர் பெயரை வைப்பது தொடர்பாக, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடியாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.

    உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    • காதல் திருமண விவகாரத்தில் பெண்ணின் தந்தை புகார்.
    • கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாக்குமூலம் அடிப்படையில் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது எனத் தகவல்.

    கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர். இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    தேனியைச் சேர்ந்த பெண் திருவாலங்காட்டைச் சேர்ந்த இனைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை கடத்தியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்கறிஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

    அந்த வழக்கறிஞர், ஜெகன் மூர்த்தி கூறியதன் பேரின் அந்த பெண்ணை கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. வீடு பூந்தமல்லியில் உள்ளது.
    • திடீரென இன்று மதியம் அவரது வீட்டின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி. இவர் கே.வி. குப்பம் தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாக உள்ளார். கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து போட்டியிட்டார்.

    இவரது வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திடீரென அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து புரட்சி பாரதம் கட்சித் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளார். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×