என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் திடீர் தடை
    X

    பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் 'திடீர்' தடை

    • கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
    • கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்து பணி பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கினர். அதன்படி விசைப்படகுகளில் வலைகளை ஏற்றுதல், கேன்களில் டீசல் நிரப்புதல், படகுகளை இயக்கி என்ஜின் செயல்பாடுகளை சரிபார்த்தல், மீன்களை பதப்படுத்த பெட்டிகளில் ஐஸ் நிரப்புதல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தொண்டி, உச்சிப்புளி, மூக்கையூர் ஆகிய இடங்களில் இருந்து கடலுக்கு செல்வதற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார் நிலையில் இருந்தன. அதே போல் வழக்கமாக குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதற்காக ஆயத்தமாகி இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதிலும் நேற்று மாலை முதல் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக தென்கடல் பகுதியில் 5 அடி உயரத்திற்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீனவளத்துறை தடை விதித்துள்ளது.

    ராட்சத அலை எழும்புவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் சீற்றம் காரணமாக பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒருசில படகுகள் பாதுகாப்பு கருதி கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் கடல் சீற்றம் காரமாக தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாளை முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

    Next Story
    ×