என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோவை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஜூன் 17-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் பணி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
    • இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள் தங்களது பேறுகால விடுப்பிற்கு பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.

    அதன்படி, 03.06.2025 வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பனையேறும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது.

    சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தமிழனின் தேசிய பானம் கள். அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்றும் சொல்லலாம். ஒரு நாள் நானே பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என கூறியிருந்தார்.

     

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையொட்டி அங்குள்ள ஒரு பனை மரத்தில் சீமான் ஏறுவதற்கு வசதியாக கட்டைகளை ஏணி போல் கட்டி வைத்திருந்தனர்.

    பின்னர் கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் ஏறிய சீமான், கள் இறக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ஏராளமான பனை ஏறும் தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.

    சீமான் மரம் ஏறியபோது அங்கு திரண்டிருந்த அவரது கட்சியினர் கரகோஷம் எழுப்பினர். அவர்கள் கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என கோஷம் எழுப்பினர். பின்னர் பனை மரத்தின் உச்சிக்கு சென்ற சீமான் கள் இறக்கி கீழே வந்தார். பிறகு இறக்கிய கள்ளை பருகி ருசித்தார்.

    இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழ்பவர் அப்பா.
    • நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுக்கும் இந்நாளில் எனது வணக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    தந்தையர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று முதல் 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 900 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
    • தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45,041 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 61.22 அடியை எட்டியது.

    அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன், கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 900 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், மீதமுள்ள 75 நாட்களுக்கும் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45,041 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதற்காக அணை திறக்கப்படும் மதகு பகுதியில் அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த தேன்கூடுகளை தீயணைப்பு துறையினர் மூலம் அகற்றினர். அணைக்கு 1230 கனஅடி நீர் வருகிறது. 3841 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2131 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1622 கனஅடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக உள்ளது. அணையில் 4352 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின்உற்பத்தி 118 மெகாவாட்டில் இருந்து 144 மெகாவாட் உற்பத்தி அதிகரித்துள்ளது. 4 ஜெனரேட்டர்களில் தலா 36 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    வீரபாண்டி 2.2, போடி 0.8, உத்தமபாளையம் 3.4, கூடலூர் 2.4, பெரியாறு அணை 24.4, தேக்கடி 19.8, சண்முகாநதி 2.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. 

    • அர்ப்பணிப்போடு பணியாற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
    • ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

    ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். 'கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை' என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    காலை உணவுத் திட்டம், #SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள்.

    'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்பதை உறுதிசெய்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆலோசனையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
    • பா.ம.க. சார்பில் 3 முறை தேர்தலில் நின்றவர் முரளி சங்கர்.

    திண்டிவனம்:

    தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் பா.ம.க. பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    பா.ம.க.வின் புதிய பொதுச்செயலாளராக முரளிசங்கர் என்பவர் நியமனம் செய்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அவருக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

    புதிதாக நியமிக்கப்பட்ட முரளி சங்கர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
    • பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் யாரும் வர மாட்டார்கள் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியதால் இன்று இங்கு வந்துள்ளேன்.

    பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது. ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் சுமூக முடிவு எட்டப்படும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
    • குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வமுடன் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் இன்று பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். புலி அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக ஆர்வமுடன் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

    தொடர்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளுக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    • நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
    • மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது கட்ட விழா இன்று நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிலையில் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

    அப்போது பேசிய விஜய், ராஜேஸ்வரி வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து உள்ளார். அவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை. கண்டிப்பாக ஆவீங்க. என்னுடைய wishes. all th best என்று கூறி அவருக்கு பேனாவை பரிசளித்தார்.

    இதைத்தொடர்ந்து பேசிய மாணவி ராஜேஷ்வரி, நான் எப்படி படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு சந்தோஷமாக இருக்கு. நீங்களும் என்னை மாதிரி ஆக வேண்டும் என்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டும்தான் அதை விட்டுறாதீங்க. all the best girls என்று கூறினார்.

    சாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. சார் எனக்கு cash கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். சாருக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.

    முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டி, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார். மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி உள்ளார்.

    • தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
    • சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம்.

    சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஜாக்டோ ஜியோ சங்கத்தில் இடம் பெற்றுள்ள உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாயவன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயவன், தமிழ்நாடு அரசு நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8 முறை சந்தித்துவிட்டோம். தமிழக அரசை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்.

    எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விஜயிடம் தெரிவித்தோம். விஜய் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

    இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை கடந்த 13-ந்தேதி சந்தித்ததாக வெளியான செய்திக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் விஜயை சந்தித்ததற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.

    சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம். த.வெ.க. தலைவர் விஜயை தங்கள் அமைப்பினர் சந்திக்கவில்லை. உண்மைக்கு புறம்பான செய்தியை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.
    • தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    தந்தையர் தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்!

    தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.

    ஆக்குதல் அன்னையரின் பணி என்றால்,

    அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.

    தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×