என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
தூத்துக்குடி: கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்று பனை மரம் ஏறிய சீமான்!
- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பனையேறும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழனின் தேசிய பானம் கள். அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்றும் சொல்லலாம். ஒரு நாள் நானே பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என கூறியிருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையொட்டி அங்குள்ள ஒரு பனை மரத்தில் சீமான் ஏறுவதற்கு வசதியாக கட்டைகளை ஏணி போல் கட்டி வைத்திருந்தனர்.
பின்னர் கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் ஏறிய சீமான், கள் இறக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ஏராளமான பனை ஏறும் தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.
சீமான் மரம் ஏறியபோது அங்கு திரண்டிருந்த அவரது கட்சியினர் கரகோஷம் எழுப்பினர். அவர்கள் கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என கோஷம் எழுப்பினர். பின்னர் பனை மரத்தின் உச்சிக்கு சென்ற சீமான் கள் இறக்கி கீழே வந்தார். பிறகு இறக்கிய கள்ளை பருகி ருசித்தார்.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.