என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள் இறக்கும் போராட்டம்"

    • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பனையேறும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது.

    சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தமிழனின் தேசிய பானம் கள். அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்றும் சொல்லலாம். ஒரு நாள் நானே பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என கூறியிருந்தார்.

     

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையொட்டி அங்குள்ள ஒரு பனை மரத்தில் சீமான் ஏறுவதற்கு வசதியாக கட்டைகளை ஏணி போல் கட்டி வைத்திருந்தனர்.

    பின்னர் கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் ஏறிய சீமான், கள் இறக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ஏராளமான பனை ஏறும் தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.

    சீமான் மரம் ஏறியபோது அங்கு திரண்டிருந்த அவரது கட்சியினர் கரகோஷம் எழுப்பினர். அவர்கள் கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என கோஷம் எழுப்பினர். பின்னர் பனை மரத்தின் உச்சிக்கு சென்ற சீமான் கள் இறக்கி கீழே வந்தார். பிறகு இறக்கிய கள்ளை பருகி ருசித்தார்.

    இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு.

    திருச்செந்தூர்:

    நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

    கள் ஒரு போதைப்பொருள் அல்ல. கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

    மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் கள்ளை மட்டும் இறக்க, விற்க தடைவிதிப்பதா என இந்த அமைப்புகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. அவ்வப்போது கள் இறக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், கள் விற்க அரசு அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கள் விடுதலை மாநாடு நடந்தது.

    அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ரஷ்யாவில் வோட்கா போல், தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என்றார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வருகிற 15-ந் தேதி, உழவர் பாசறை சார்பில் கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! என்ற முழுக்கத்தோடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழை, குலசேகரன்பட்டினத்தில் கள் இறக்கும் போராட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது,

    தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க, பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. மருத்துவ குணம் கொண்ட, ஏராளமான ஊட்டச்சத்து கள்ளில் உள்ளது. கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு என்ற கொள்கையுடன், கள் விடுதலை போராட்டத்தில், சீமான் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த பனை விவசாயிகளின் ஓட்டுகளை கவர, சில அறிவிப்புகளையும், சீமான் வெளியிட உள்ளார். வருகிற 15-ந்தேதி, அவர் பனை மரத்தில் ஏறி, கள் இறக்க உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் சீமான் பனை மரத்தில் ஏறி, பயிற்சி எடுக்க உள்ளார். பனை மரத்தில் ஏற வேண்டாம் என, அவரது கட்சியினர் கூறியபோதும், அவர் பனை ஏறுவதில் உறுதியாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பனை ஏறுவதற்கு தகுந்த மரங்களை தேடும் பணியில், போராட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே சீமான் நேரடியாக களமிறங்கும் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் ’மது விற்பனை’ நடைபெறுகிறது.
    • கள் உடம்புக்கு நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கள், சாராயம் அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய மற்றும் தத்துவ நூல்கள் அனைத்தும் மதுவின் கொடுமையை எடுத்துரைத்துள்ளன. திருக்குறளில் 'கள் உண்ணாமை' குறித்து 10 குறள்கள் இயற்றப்பட்டுள்ளன. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரத்தில் மது மற்றும் மாமிசம், கொலை, கொள்ளைக்கு எதிராகவே கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.

    1937 முதல் 1971 வரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலிலிருந்தது. 1971 இல் தமிழகத்தின் மீண்டும் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 1974 இல் மதுவிலக்கு மீண்டும் அமலுக்கு வந்தது. 1984க்கு பிறகு மீண்டும் அதிமுக, திமுக ஆட்சிகளில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மாநில அரசே மதுபான விற்பனையை நடத்துகிறது.

    தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் 'மது விற்பனை' நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மது விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சட்ட விரோதமாக அதிகாலை 6:00 மணி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுகிறது; காலையில் வேலைக்குச் செல்வோர் குடிப்பதை அத்துறை அமைச்சரே நியாயப்படுத்துகிறார்.

    தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் மதுப் பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு பெருமளவு உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர். கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் என அடிப்படை, நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது தினசரி வருமானத்தில் பெரும் பகுதியை டாஸ்மாக்கிலேயே தொலைத்து விடுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

    டாஸ்மாக் நிறுவனத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை, கள்ளத்தனமான விற்பனை என ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெறுகிறது. எனவே தமிழக மக்களின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் டாஸ்மாக் கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும்.

    புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 'மது, போதை, புகையில்லா தமிழகம்' என தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் அண்மைக் காலமாக 'கள் உணவு' என்று ஒரு சிலர் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

    கள் மதுவே தவிர, அது உணவாகாது. பதநீர் வேறு; கள் வேறு. கள் இறக்க அனைத்து கிராமப்புறங்களில் அனுமதி கொடுத்தால் விவசாயத் தொழிலாளர்கள், பனை, தென்னை தோப்புகளே கதி என மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறே நிகழ்ந்தன.

    கள் உடம்புக்கு நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. 'உப்பு கருவாடும் ஒத்த மரக் கள்ளும் உடம்புக்கு நல்லது' என்று சினிமாவில் தவறாகப் பாடி வைத்துள்ளனர். எல்லா மது வகைகளிலும் அடிப்படையாக இருப்பது ஆல்கஹால். கள்ளில் 8 முதல் 15 சதவீத வரை ஆல்கஹால் அளவீடு இருக்கும்; பிற மதுபான வகைகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும்.

    எனவே போதையை அதிகரிக்க லிட்டர் கணக்கில் கள்ளைக் குடித்து விடுவார்கள். கள் பிற மதுபானங்களை விட அதிகமான பாதிப்புகளை உருவாக்கும் மிக மோசமான மதுவாகும். ரத்தக்குழாய்கள்; உணவு ஜீரணத்தை ஒழுங்குபடுத்தவும், உடலுக்குத் தேவையான சக்தியைச் சக்தியை சேமித்து வைக்கும் ஈரல்கள் மது குடிப்பதால் பெரும் பாதிப்படையும். நல்ல திசுக்களுக்கு பதிலாக கொழுப்பு சத்து அதிகமாகி ஈரலின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். இன்சுலின் சுரக்கும் கணையத்தை பாதிப்படையச் செய்து சர்க்கரை நோய் மற்றும் கணைய புற்றுநோயை அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு; மூளை நரம்பு மண்டல பாதிப்பு என பலவிதமான நோய்களையும் வரவழைக்கும் மிகக் கொடிய மது ' கள்' ஆகும். '

    'கள்' ஒரு உணவு என்று சொல்வதற்கு உண்டான புரோட்டின், விட்டமின்கள், மினரல்ஸ் போன்ற எந்த விதமான சத்துக்களும் அதில் இல்லை. கள்ளின் ஆபத்து தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் இறக்க அனுமதித்தால் கிராமம் தோறும் நாட்டுச் சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இதன் போக்கு எப்படி, எங்கு போய் முடியும்?

    கள் இறக்கும் போராட்டம் நடத்துவது அதை பொது வழியில் குடித்துக் காட்டுவது அனைத்தும் சட்டவிரோதமே.

    எனவே, வரும் 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கள் இறக்கும் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்; தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×